ஊரே வாங்கும்னு எதிர்பார்த்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பலர் வாங்கல! வருத்தத்தில் ஹோண்டா எடுத்த முடிவு!
ஹோண்டா ஆக்டிவா இ (Honda Activa E), சமீபத்தில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் விற்பனைக்கு வந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter). இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் நம்பர் ஒன் ஸ்கூட்டராக விளங்கும் ஹோண்டா ஆக்டிவாவின் எலக்ட்ரிக் வெர்சனாக களமிறக்கப்பட்டதினாலேயே அறிமுகத்திற்கு முன்பாக ஆக்டிவா இ ஸ்கூட்டருக்கு மக்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பு உருவானது. ஆனால், அந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் ஹோண்டா ஆக்டிவா இ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பூர்த்தி செய்ததா என கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இது, ஆக்டிவா இ எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் கடந்த மாதங்களின் விற்பனை எண்ணிக்கைகளை பார்த்தாலே தெரிய வருகிறது.
கடந்த ஜனவரி மாதத்தில் ஆட்டோ எக்ஸ்போ 2025 (Auto Expo 2025) கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்ட ஹோண்டா ஆக்டிவா இ எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பிப்ரவரி மாதத்தில் இருந்து ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்ய ஆரம்பித்தது. அதன்படி, கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து மே மாதம் வரையில், இந்த நான்கு மாதங்களில் 9 ஆயிரத்து 432 ஆக்டிவா இ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

அதிகப்பட்சமாக, கடந்த மார்ச் மாதத்தில் 4 ஆயிரத்து 570 ஆக்டிவா இ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் உற்பத்தி செய்யப்பட்டு இருந்தன. ஆனால், மொத்தமாகவே இந்த நான்கு மாதங்களில் மார்ச் மாதத்தில் உற்பத்தி செய்யப்பட்ட 4,570 ஆக்டிவா இ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் கூட விற்பனை செய்யப்படவில்லை. 4 மாதங்களில் மொத்தமாகவே 4 ஆயிரத்து 178 ஆக்டிவா இ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன.
அதிகப்பட்சமாக, மார்ச் மாதத்தில் 2 ஆயிரத்து 102 ஆக்டிவா இ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஹோண்டா நிறுவனம் விற்பனை செய்திருந்தது. ஆனால், கடந்த மே மாதத்தில் வெறும் 676 ஆக்டிவா இ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் விற்பனையாகும் ஆக்டிவா இ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் 75%-க்கும் மேலானவை இந்த ஸ்கூட்டரின் விலை குறைவான க்யூ.சி1 (QC1) என்கிற வேரியண்ட் ஆகும். மீதி பேர் மட்டுமே ஆக்டிவா இ எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்குவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு, ஆக்டிவா இ எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனை தொடர்ந்து குறைந்துக் கொண்டே வருவதை அடுத்து, இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரிக்கான சந்தா திட்டத்தில் புதிய 'லைட்' (Lite) என்கிற திட்டத்தை ஹோண்டா அறிமுகம் செய்துள்ளது. ஆக்டிவா இ எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான பேட்டரியை சந்தா திட்டத்தில் ஹோண்டா வழங்கி வருகிறது.
அதாவது, பேட்டரியில் சார்ஜ் காலியானால் அதனை அருகில் உள்ள ஹோண்டா பேட்டரி சுழற்சி மையத்தில் கொடுத்து, கட்டணத்தை செலுத்தி சார்ஜ் நிரப்பப்பட்ட பேட்டரியை பெற்றுக் கொள்ளலாம். இதன் மூலமாக, சார்ஜிங் நேரமும், ஸ்கூட்டருக்கான விலையும் மிச்சப்படுத்தப்படுவதினால் இந்த யுக்தியை பெரும்பாலான எலக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனங்கள் பின்பற்றி வரும் நிலையில், ஹோண்டாவும் அதனை பின்பற்றி வருகிறது.

இடையில் கட்டணம் என கூறினோம் அல்லவா... ஆக்டிவா இ பேட்டரிக்கான சந்தா திட்டங்கள் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப வழங்கப்பட்டு வருகின்றன. அவற்றுள்தான், தற்போது புதியதாக லைட் என்கிற சந்தா திட்டத்தை ஹோண்டா பவர் பேக் எனர்ஜி இந்தியா என்கிற ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் துணை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
இந்த புதிய திட்டத்தின் மூலமாக, ஆக்டிவா இ எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான குறைந்தப்பட்ச சந்தா திட்ட கட்டணமாக முன்பு இருந்த 'பேசிக்'-ஐ காட்டிலும் 50% குறைந்த கட்டணத்தில் லைட் சந்தா திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. 50% கட்டணம் குறைவிற்கு ஏற்ப, பேட்டரியின் ஆற்றலிலும், பேட்டரி சுழற்சி செய்ய அனுமதிக்கப்படும் எண்ணிக்கையும் குறைவாக இருக்கும். புதிய லைட் சந்தா திட்டத்தின்படி மாத கட்டணம் ரூ.678 மட்டுமே ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் இலட்சக்கணக்கிலான எண்ணிக்கையில் விற்பனையாகக்கூடிய ஸ்கூட்டராக ஹோண்டா ஆக்டிவா விளங்கும் நிலையில், அதன் எலக்ட்ரிக் வெர்சனை வாங்க நிறைய பேர் விரும்பவில்லை என்பது ஆச்சிரியமாக உள்ளது. இதனை சமாளிக்கவே, புதியதாக லைட் என்கிற சந்தா திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம், இது எந்த அளவிற்கு பலனளிக்கும் என்று.


Click it and Unblock the Notifications









