இன்னோவா காரை இதைவிட கம்மியான விலையில் வாங்கிடலாம்! டுகாட்டி பார்த்து பார்த்து உருவாக்கிய 'இயந்திர குதிரை'!!
டுகாட்டி (Ducati) நிறுவனம் தனது புதிய 'எக்ஸ்டியாவெல் வி4' (எக்ஸ்டியாவெல் வி4) மோட்டார்சைக்கிளை இந்த 2025 டிசம்பர் மாத இறுதிக்குள் இந்தியாவில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இதற்கான முன்பதிவுகள் ஏற்கனவே தொடங்கிவிட்ட நிலையில், அதிகாரப்பூர்வ தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. புதிய எக்ஸ்டியாவெல் வி4, வழக்கமான டியாவெல் வி4 பைக்கிற்கு இணையாக சக்தி வாய்ந்ததும், அதேசமயம் மிகவும் நிதானமான பயண அனுபவத்தை வழங்கும் ஒரு பிரத்யேக மாடலாக விற்பனை செய்யப்பட உள்ளது.
இந்த மோட்டார்சைக்கிளின் மையத்தில், டுகாட்டியின் 1158cc கிராண்டூரிஸ்மோ (Granturismo) வி4 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. பைக்கின் பெயரில் உள்ள 'வி4' எங்கிருந்து வந்திருக்கும் என்பது இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் என நினைக்கிறேன். இந்த கிராண்டூரிஸ்மோ வி4 என்ஜின் ஆனது ஐரோப்பாவின் யூரோ 5+ (Euro 5+) தரநிலைகளுக்கு இணங்க மேம்படுத்தப்பட்டுள்ளது.

இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 166-168 பிஎச்பி ஆற்றலையும், 126 என்.எம் டார்க் திறனையும் பைக்கிற்கு வழங்கக்கூடியதாக உள்ளது. வழக்கமான டியாவெல் வி4 பைக் உடன் ஒப்பிடும்போது இந்த புதிய பைக்கின் செயல்திறனில் எந்த சமரசமும் இல்லை. பவர் இரு திசையில் செயல்படும் குயிக்-ஷிஃப்டர் உடன் கூடிய 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் மூலம் கடத்தப்படுகிறது.
ஓட்டுநரின் சவுகரியத்தை அதிகரிக்கும் வகையில், நன்கு முன்னோக்கி அமைக்கப்பட்ட ஓட்டுனர் கால் வைக்கும் பகுதி, அகலமான ஹேண்டில்பார் மற்றும் தரையில் இருந்து குறைவாக 770மிமீ உயரத்தில் ஓட்டுனர் இருக்கை ஆகியவை புதிய எக்ஸ்டியாவெல் வி4 பைக்கின் தனித்துவமான எர்கோனமிக்ஸ் அம்சங்களாக வழங்கப்பட்டுள்ளன. குறைந்த இருக்கை உயரம் சிறந்த ஹேண்ட்லிங் திறனை வழங்குகிறது.

பைக்கின் இத்தகைய எர்கோனமிக்ஸ் ஆனது நெடுஞ்சாலைகளில் பயணிக்கையில் மிகவும் அமைதியாகவும், சவுகரியமாகவும் உணர வைக்கும். மேலும், பைக்கின் பின்பக்க இருக்கையும் அகலமாக்கப்பட்டு, நீண்ட பயணங்களுக்கு ஏற்றவாறு மேம்படுத்தப்பட்டுள்ளது. பைக்கின் அடிப்படையான சேசிஸ் மற்றும் மற்ற மெக்கானிக்கல் பாகங்களில், இது வழக்கமான டியாவெல் வி4 உடன் ஒத்துப் போகிறது.
சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் சரிசெய்யக்கூடிய 50மிமீ USD ஃபோர்க், பின்பக்கத்தில் மோனோஷாக், ஒற்றைப்பக்க அலுமினிய ஸ்விங்கிங் ஆர்ம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. பழைய எக்ஸ்டியாவெல் பைக்குகளின் பெல்ட் டிரைவுக்குப் பதிலாக, இதில் செயின் டிரைவ் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது. பிரேக்கிற்காக, முன் சக்கரத்தில் 330மிமீ-இல் இரட்டை டிஸ்க்குகளும், பின் சக்கரத்தில் சிங்கிள் டிஸ்க் கொண்ட பிரெம்போ அமைப்புகள், கார்னரிங் ஏபிஎஸ் (Cornering ABS) உடன் பொருத்தப்பட்டுள்ளன.

எலக்ட்ரானிக்ஸ் அம்சங்களில், எக்ஸ்டியாவெல் வி4 ஓர் முழுமையான மோட்டார்சைக்கிளாக விளங்குகிறது. நான்கு ரைடிங் மோடுகள், மூன்று பவர் மோடுகள், ட்ராக்ஷன் & வீலிங் கன்ட்ரோல், லான்ச் கன்ட்ரோல், க்ரூஸ் கன்ட்ரோல் ஆகியவை இதில் அடங்கும். டுகாட்டி பனிகேல் வி4 (Panigale V4) பைக்கின் 6.9 இன்ச் பெரிய TFT திரை இதிலிலும் வழங்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் இல்லாமல், எக்ஸ்டியாவெல் வி4 பைக்கின் எடை 226 கிலோ (வழக்கமான டியாவெல் வி4 பைக்கை விட 6 கிலோ கனமானது). 'எரியும் சிவப்பு' (Burning Red) மற்றும் 'கருப்பு லாவா' (Black Lava) ஆகிய இரண்டு கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும் இந்த பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ரூ.30 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது டியாவெல் வி4 பைக்கை விட சற்று அதிகம் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எக்ஸ்டியாவெல் என்பது எப்போதும் டுகாட்டியின் க்ரூஸர் (Cruiser) பைக்குகளுக்கே உண்டான தனித்துவத்தை பிரதிபலிக்கிறது. அந்த வகையில், இந்த புதிய வி4 பதிப்பும் அதற்கு உண்மையாக உள்ளது. புதிய எக்ஸ்டியாவெல் வி4 ஆனது டுகாட்டி டியாவெல் பைக்குகளின் கண்கவர் வடிவமைப்பு மற்றும் அபாரமான செயல்திறன் ஆகியவற்றைத் தக்கவைத்துக்கொண்டு, நீண்ட தூர பயணங்களில் நன்கு சாய்ந்துக் கொண்டு சவுகரியமான பயணத்தை விரும்பும் ஓட்டுநர்களுக்காக இதன் இருக்கை மற்றும் ஹேண்டில்பார் அமைப்பு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications









