நல்லா கால் நீட்டி அமரலாம்... எலக்ட்ரிக் பைக் கூட இப்படி வர துவங்கிடுச்சு! விலை தெரிஞ்சா உடனே புக் பண்ணிடுவீங்க
கோமகி எலக்ட்ரிக் (Komaki Electric), இந்தியாவில் எலக்ட்ரிக் பைக் (Electric Bike)-களை விற்பனை செய்யும் மிகவும் சில நிறுவனங்களுள் ஒன்று. அதேநேரம், எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் (Electric Scooters)-ஐயும் இந்த நிறுவனம் விற்பனை செய்கிறது. நம் நாட்டில் எலக்ட்ரிக் பைக்குகளுக்கு பெரிய அளவில் மார்க்கெட் இல்லையென்றாலும், கோமகி நிறுவனம் பல்வேறு விதமான எலக்ட்ரிக் பைக்குகளை விற்பனை செய்கிறது. இந்த நிலையில் கோமகி எலக்ட்ரிக் பைக் ஒன்று தற்போது அப்டேட் செய்யப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அவற்றை பற்றிய கூடுதல் விபரங்களை தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
கோமகி நிறுவனம் விற்பனை செய்வதிலேயே பிரபலமான எலக்ட்ரிக் பைக் 'கோமகி ரேஞ்சர்' (Ranger) என்கிற க்ரூஸர் (Cruiser) ரக் எலக்ட்ரிக் பைக் ஆகும். இதனை தற்போது அப்டேட் செய்துள்ள கோமகி எலக்ட்ரிக் நிறுவனம், பேஸ் மாடல் மற்றும் ரேஞ்ச் என 2 விதமான வேரியண்ட்களில் அறிமுகம் செய்துள்ளது.

இதில், ரேஞ்ச் ஆனது அனைத்து வசதிகளும் உள்ள வேரியண்ட் ஆகும். புதிய கோமகி ரேஞ்சர் எலக்ட்ரிக் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.1.40 லட்சம் (பேஸ் மாடல்) மற்றும் ரூ.1.50 லட்சம் (ரேஞ்ச்) ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளன. விருப்பப்படுபவர்கள் புதிய 2025 ரேஞ்சர் எலக்ட்ரிக் பைக்கை கோமகி எலக்ட்ரிக் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் இணையம் வாயிலாகவும் புக் செய்யலாம்.
புதிய ரேஞ்சர் எலக்ட்ரிக் பைக்கில் ஒருமுறை பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால், அதிகப்பட்சமாக 250கிமீ தொலைவிற்கு இயங்கலாம் என கோமகி எலக்ட்ரிக் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த பைக்கில் அடுத்த தலைமுறை லித்தியம் இரும்பு பாஸ்பேட் பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் கோமகி எலக்ட்ரிக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த அடுத்த தலைமுறை பேட்டரிகள் கூடுதல் தொலைவிற்கு பைக்கை இயக்கி செல்லக்கூடியதாக இருப்பது மட்டுமின்றி, அதிக ஆயுட்காலத்தை வழங்கக்கூடியதாகவும் உள்ளன. இதனுடன், ரைடருக்கான சவுகரியங்களை மேம்படுத்தி உள்ளதாக தெரிவிக்கும் கோமகி எலக்ட்ரிக் நிறுவனம், இதற்காக ரேஞ்சர் எலக்ட்ரிக் பைக்கின் இருக்கை அமைப்பை மாற்றியுள்ளது.
பைக்கிற்கு முன்பக்கத்தில் கண்ணாடியில் எதிர்காற்று தடுப்பு கண்ணாடியும், ஹேண்டில்பாருக்கு மத்தியில் 7 இன்ச்சில் டிஎஃப்டி டிஸ்பிளேவும் வழங்கப்பட்டுள்ளன. சுமார் 50 லிட்டர்கள் கொள்ளளவில் ஸ்டோரேஜ் பகுதி, கூடுதலாக எல்இடி ஹெட்லேம்ப் உள்ளிட்டவை புதிய ரேஞ்சரின் சிறப்பம்சங்கள் ஆகும். இது எலக்ட்ரிக் பைக் என்பதால், சைலன்சர் தேவையிலை.

ஆனால், 'தீ உமிழும்' எஃபெக்ட் (effect) உடன் இரு குழாய்கள் புதிய கோமகி ரேஞ்சரில் இருப்பதை காணலாம். இது வெறும் பைக்கின் சத்தத்திற்காக மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ரேஞ்சர் பைக்கில் அதிகப்பட்சமாக மணிக்கு 80கிமீ வேகத்தில் செல்ல முடியும். இந்த எலக்ட்ரிக் பைக்கின் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்ப குறைந்தப்பட்சம் 4 மணிநேரங்கள் தேவைப்படும்.
கோமாகி எலக்ட்ரிக் நிறுவனம் புதிய ரேஞ்சர் எலக்ட்ரிக் பைக்கிற்கு 3-வருட அல்லது 30,000கிமீ உத்தரவாதத்தை அறிவித்துள்ளது. இந்த உத்தரவாதங்கள் பைக்கின் பேட்டரி, மோட்டார் மற்றும் கண்ட்ரோலர்கள் போன்ற முக்கிய பாகங்களை கவர் செய்கின்றன. பைக்கின் சார்ஜருக்கு என்று தனியாக 1 வருட உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கோமகி ரேஞ்சர் போன்ற எலக்ட்ரிக் க்ரூஸர் பைக்குகள் உலகளவில் பார்த்தால் கூட மிகவும் குறைவான எண்ணிக்கையில் தான் விற்பனையில் உள்ளன. அத்தகைய எலக்ட்ரிக் பைக் தான் தற்போது புதிய தோற்றத்தில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு உள்ளது. மணிக்கு 80கிமீ வேகத்திற்கு மேல் இயங்கக்கூடியதாக இல்லாத கோமகி ரேஞ்சர், அதன் மூலம் பேட்டரியின் ஆற்றலை நீண்ட தொலைவிற்கு இயங்க வைக்கக்கூடியதாக உள்ளது.


Click it and Unblock the Notifications









