தமிழ்நாட்டில் தொழிற்சாலையை இப்போதுதான் திறந்த மாதிரி இருக்கு... அதற்குள் 10 லட்சம் வாகனங்கள் உற்பத்தியா!!
ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric), இந்தியாவின் மிகப்பெரிய எலெக்ட்ரிக் இருசக்கர வாகன நிறுவனம் என சொன்னால் அது மிகையில்லை. ஏனெனில், அந்த அளவிற்கு மாதத்திற்கு மாதம் விற்பனையில் முன்னேற்றம் கண்டுவரும் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்திற்கு தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரியில் பிரம்மாண்டமான உற்பத்தி தொழிற்சாலை செயல்படுவது உங்களில் சிலருக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும் என நினைக்கிறேன்.
'ஃபியூச்சர் ஃபேக்டரி' (Future Factory) என ஓலா நிறுவனம் அழைக்கும் இந்த தொழிற்சாலையில் இருந்து ஒரு மில்லியனாவது, அதாவது 10 இலட்சமாவது வாகனத்தை தயாரித்து தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றி ஒரு பெரிய உற்பத்தி சாதனையை ஓலா நிகழ்த்தி காட்டியுள்ளது. இந்த 10 இலட்சம் வாகனங்களில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் (Electric Scooters) மற்றும் எலெக்ட்ரிக் பைக்குகள் (Electric Bikes) அடங்குகின்றன.

ஆனால், இந்த 10 இலட்சத்தில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் எண்ணிக்கை தான் அதிகம் ஆகும். ஏனெனில், எலெக்ட்ரிக் பைக்குகளை விற்பனை செய்ய இந்த 2025ஆம் ஆண்டின் துவக்கத்தில் இருந்துதான் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் துவங்கியது. பொதுவாக, இவ்வாறு உற்பத்தியில் புதிய மைல்கல்லை கடக்கும்போது ஏற்கனவே விற்பனையில் இருக்கும் வாகனத்தை உற்பத்தி செய்து வெளியேற்றுவதுதான் வழக்கம்.
ஆனால், இந்த விஷயத்திலும் ஓலா நிறுவனம் புதுமையை காட்டியுள்ளது. 10 இலட்சம் ஆவது வாகனமாக ஓலா தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்பட்டு இருப்பது, இதுவரையில் அறிமுகம் செய்யப்படாத ஸ்பெஷல் எடிசன் (Special Edition) எலெக்ட்ரிக் பைக் ஆகும். உற்பத்தியில் புதிய மைல்கல்லை கடக்க போகிறோம் என்பதை முன்னரே அறிந்து, அதற்காக ரோட்ஸ்டர் X+ (Roadster X+) எலெக்ட்ரிக் பைக்கில் புதிய ஸ்பெஷல் எடிசன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புதிய ரோட்ஸ்டர் X+ ஸ்பெஷல் எடிசன் எலெக்ட்ரிக் பைக் அடர் நீல நிறத்தில், இரட்டை வண்ண இருக்கை & சக்கரங்கள் மற்றும் பேட்டரி பேக்கில் ஸ்போர்ட்டியான சிவப்பு நிற வேலைப்பாடுகளுடன் உருவாக்கப்பட்டு உள்ளது. வழக்கமான ஓலா ரோட்ஸ்டர் எக்ஸ்+ எலெக்ட்ரிக் பைக்கில் இருந்து இந்த புதிய ஸ்பெஷல் எடிசன் தோற்றத்தில் சற்று மாறுப்பட்டதாக உள்ளது.
குறிப்பாக, பேட்டரி பேக்கின் ஸ்போர்ட்டியான சிவப்பு நிற வேலைப்பாடுகள் காண்போரை வெகுவாக ஈர்க்கின்றன. மேலும், மறுசுழற்சி செய்யப்பட்ட தாமிரக் கழிவுகளிலிருந்து உருவாக்கப்பட்ட பேட்ஜ்கள் மற்றும் எலக்ட்ரோ பிளேட் செய்யப்பட்ட பார் எண்டுகள் இந்த ஸ்பெஷல் எடிசன் எலெக்ட்ரிக் பைக்கில் இடம்பெற்றுள்ளன. இது ஓலாவின் வாகன வடிவமைப்பு கொள்கையில் உள்ள மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்துவதை பிரதிபலிக்கிறது.
சமீபத்தில்தான் ஓலா நிறுவனம் தனது '4680 பாரத் செல்' பொருத்தப்பட்ட வாகனங்களை அறிவித்தது. இதில், 5.2 kWh பேட்டரி கொண்ட எஸ்1 புரோ+ (S1 Pro+) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் 9.1 kWh பேட்டரியை கொண்ட ரோட்ஸ்டர் எக்ஸ்+ எலெக்ட்ரிக் பைக் அடங்குகின்றன.

முறையே ரூ.1,69,999 மற்றும் ரூ.1,89,999 விலை கொண்ட இந்த ஓலா 4680 பாரத் செல் பொருத்தப்பட்ட எலெக்ட்ரிக் வாகனங்களின் டெலிவிரிகள் (Deliveries) வருகிற நவராத்திரி முதல் துவங்கப்பட உள்ளன. மேலும், 4680 பாரத் செல்கள் கொண்ட பேட்டரி உடன் ஓலா நிறுவனம் ஸ்போர்ட்ஸ் ஸ்கூட்டர் பிரிவில், புதிய எஸ்1 புரோ ஸ்போர்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையும் அறிமுகப்படுத்தியது. இது 5.2kWh மற்றும் 4kWh பேட்டரி ஆப்ஷன்கள் உடன் விற்பனை செய்யப்பட உள்ளது.
இதன் அறிமுக விலை ரூ.1,49,999 ஆகும், டெலிவிரிகள் ஜனவரி 2026இல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் 2021ஆம் ஆண்டில் உற்பத்தியைத் தொடங்கி, தனது எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மற்றும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ரோட்ஸ்டர் எக்ஸ் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களுக்கான அதிக தேவை காரணமாக நான்கு ஆண்டுகளுக்குள் உற்பத்தியில் இந்த சாதனையை எட்டியுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எலெக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தியில் குறுகிய காலத்தில் இந்த சாதனையை ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் நிகழ்த்தி காட்டி இருப்பதில் இருந்து, இந்த நிறுவனம் இந்திய 2-வீலர்கள் மார்க்கெட்டில் எந்த அளவிற்கு வளர்ந்து வருகிறது என்பதை அறிய முடிகிறது. மேலும், இந்த சிறப்புமிக்க நிகழ்வை கொண்டாடும் விதமாக ரோட்ஸ்டர் எக்ஸ்+ எலெக்ட்ரிக் பைக்கின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பது நாம் எதிர்பார்க்காத ஒன்றாகும்.


Click it and Unblock the Notifications









