வெறும் 50 ஆயிரத்துக்கு எலெக்ட்ரிக் பைக் & ஸ்கூட்டர் தரும் ஓலா! எத்தனை நாட்களுக்கு தெரியுமா?
இந்தியாவின் மிகப்பெரிய எலக்ட்ரிக் வாகன நிறுவனமான ஓலா எலக்ட்ரிக் (Ola Electric), வரவிருக்கும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு "ஓலா கொண்டாடுகிறது இந்தியா" என்கிற புதிய பிரச்சாரத்தை அறிவித்துள்ளது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, "ஓலா முகூர்த்த மஹோட்சவ்" (Muhurat Mahotsav) என்ற சலுகையை ஓலா நிறுவனம் தொடங்கியுள்ளது.
இதன்படி, செப்டம்பர் 23 முதல் ஒன்பது நாட்களுக்கு, ரூ.49,999 என்ற குறைந்த எக்ஸ்-ஷோரூம் விலையில் (Ex-Showroom Price) எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் (S1 Electric Scooters) மற்றும் ரோட்ஸ்டர் எக்ஸ் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களை (Roadster X Electric Motorcycle) ஓலா நிறுவனம் வழங்க உள்ளது.

ஓலா முகூர்த்த மஹோட்சவ் மூலம், வாடிக்கையாளர்கள் இந்த 9 நாட்களில் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மற்றும் மோட்டார்சைக்கிள்களை கவர்ச்சிகரமான விலையில் பெற முடியும். இந்த ஒன்பது நாட்களில் தினமும் முகூர்த்த நேரங்கள் ஓலா நிறுவனத்தின் சமூக ஊடக பக்கங்களில் தெரிவிக்கப்படும். அந்த நேரங்களில் "முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை" என்ற அடிப்படையில் வாகனங்கள் வழங்கப்பட உள்ளன.
அதாவது, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே புதிய சலுகை விலையில் தனது வாகனங்களை விற்பனை செய்ய ஓலா திட்டமிட்டுள்ளது. இந்த சலுகை விலையின்படி, 2kWh பேட்டரி உடன் வாங்கப்படும் எஸ்1 எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கும், 2.5kW பேட்டரி உடன் வாங்கப்படும் ரோட்ஸ்டர் எக்ஸ் எலக்ட்ரிக் பைக்கிற்கும் ரூ.49,999 விலையாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

5.2kWh பேட்டரி உடன் வாங்கப்படும் ஓலா எஸ்1 புரோ+ (Pro+) எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கும், 9.1kWh பேட்டரி உடன் வாங்கப்படும் ரோட்ஸ்டர் எக்ஸ்+ எலக்ட்ரிக் பைக்கிற்கும் ரூ.99,999 என்பது குறுகிய கால சலுகை விலையாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. 5.2kWh மற்றும் 9.1kWh ஆகிய இரண்டு பேட்டரிகளும் '4680 பாரத் செல்' பேட்டரி பேக்குடன் வருகின்றன.
இந்த 4680 பாரத் செல் ஆனது சொந்தமாக ஓலா நிறுவனத்தின் தமிழ்நாட்டில் உள்ள கிருஷ்ணகிரி தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த உற்பத்தி பணியை மிக சமீபத்தில்தான் ஓலா துவங்கியது. இதனை தொடர்ந்து தற்போது சலுகை விலையில் எஸ்1 ஸ்கூட்டர்கள் மற்றும் ரோட்ஸ்டர் மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்ய போவதாக மற்றுமொரு அதிரடி அறிவிப்பை ஓலா அறிவித்துள்ளது.
இந்தியாவில் நவராத்திரி (Navratri)ஆனது ஒவ்வொரு வருடமும் 10 நாட்களுக்கு கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, இந்த 2025ஆம் ஆண்டில் செப்டம்பர் 22ஆம் தேதியில் இருந்து அக்டோபர் 2ஆம் தேதி வரையில் கொண்டாடப்பட உள்ளது. ஓலாவின் மேற்கூறப்பட்ட சலுகை விலைகள் இந்த 10 நாட்களில் முதல் 9 நாட்களுக்கு, அதுவும் முகூர்த்த நேரங்களில் மட்டுமே கிடைக்கவுள்ளது.

மற்ற நேரங்களில், வழக்கமான விலைகளில் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மற்றும் பைக்குகள் கிடைக்கும். ஓலா எஸ்1 ஜென்-3 எலக்டரிக் ஸ்கூட்டர்களில் எஸ்1 புரோ+ (5.2kWh மற்றும் 4kWh) மற்றும் எஸ்1 புரோ (4kWh மற்றும் 3kWh) ஆகியவை முறையே ரூ.1,69,999, ரூ.1,51,999, ரூ.1,37,999, மற்றும் ரூ.1,20,999 விலையில் கிடைக்கின்றன.
ஓலா நிறுவனத்தின் பட்ஜெட் விலை கொண்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் ஜென்-3 எஸ்1 எக்ஸ்+ (4kWh) மற்றும் ஜென்-3 எஸ்1 எக்ஸ் (2kWh, 3kWh, மற்றும் 4kWh) ஆகியவை முறையே ரூ.1,11,999, ரூ.1,03,999, ரூ.94,999 மற்றும் ரூ.81,999 விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. ஜென்-2 எஸ்1 புரோ மற்றும் எஸ்1 எக்ஸ் (4kWh) ஸ்கூட்டர்களை முறையே ரூ.1,18,999 மற்றும் ரூ.97,999 என்கிற விலைகளில் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் விற்பனை செய்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை மட்டுமின்றி, எலக்ட்ரிக் பைக்குகளையும் குறைந்த சலுகை விலையில் வழங்க ஓலா முடிவு செய்திருப்பது சற்று ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது. இத்தகைய சலுகை அறிவிப்பின் மூலம் இந்தியாவின் மிக நீண்ட கால பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்துடன் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் ஒருங்கிணைந்து உள்ளது.


Click it and Unblock the Notifications









