இ-பைக்கின் உற்பத்தியை தொடங்கிய ஓலா.. விட்ட இடத்தை பிடிக்க அதிரடி! பைக்கோட விலை ரொம்ப கம்மின்றத மறந்துறாதீங்க!
ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) நிறுவனம் அதன் மின்சார பைக் (Electric Bike)-இன் உற்பத்தியை தொடங்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நிறுவனம் தன்னுடைய மின்சார பைக் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தி பல மாதங்கள் ஆகின்றன. சென்ற ஆண்டு ஆகஸ்டு மாதம் 15 ஆம் தேதி அன்றே தன்னுடைய எலெக்ட்ரிக் பைக்கை அது இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்திய சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் விதமாக அன்றைய தினத்தில் இ-பைக் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையிலேயே சுமார் 5 மாதங்கள் ஆகின்ற சூழலில் இப்போது எலெக்ட்ரிக் பைக்கின் உற்பத்தி பணிகளை தொடங்கி இருக்கின்றது, ஓலா எலெக்ட்ரிக்.
இதை உறுதிப்படுத்தும் விதமாக ஓலா இ-பைக்கை உற்பத்தி செய்யப்படும் படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. இந்தியர்கள் மத்தியில் ஓலா எலெக்ட்ரிக் பைக்கிற்கு எதிர்பார்ப்பு பலமடங்காக அதிகரித்துக் காணப்படுகின்றது. ஆகையால், விற்பனையில் இந்த நிறுவனத்தை ஓலா எலெக்ட்ரிக் பைக்குகள் தூக்கி நிறுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சமீப சில காலமாக நிறுவனம் விற்பனையில் பின் தங்கிய சூழல் நிலவுகின்றது. குறிப்பாக, சென்ற ஆண்டின் இறுதியில் மிகப் பெரிய அடியை இது விற்பனையில் வாங்கியது. எப்போதுமே மின்சார இரண்டு சக்கர வாகன விற்பனையில் நம்பர் 1 நிறுவனமாக இருந்து வந்த ஓலா எலெக்ட்ரிக் அந்த இடத்தை பஜாஜ் சேத்தக்-கிடமே இழந்தது.
இது நிறுவனத்திற்கு கிடைத்த மாபெரும் அடியாகும். இந்த நிலை அடுத்தடுத்த மாதங்களில் தொடரக் கூடாது என்கிற நோக்கிலேயே ஓலா நிறுவனம் தற்போது இ-பைக் உற்பத்தியைத் தொடங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓலா ரோட்ஸ்டர் என்கிற பெயரிலேயே இ-பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கின்றது.
இந்த பைக் இந்தியாவில் மொத்தமாக மூன்று விதமான ஆப்ஷன்களில் விற்பனைக்குக் கிடைக்கும். ரோட்ஸ்டர் எக்ஸ், ரோட்ஸ்டர் மற்றும் ரோட்ஸ்டர் ப்ரோ ஆகியவையே அவை ஆகும். இதில் ரோட்ஸ்டர் எக்ஸ்-தான் இருப்பதிலேயே விலை குறைவான தேர்வாகும். இதற்கு ரூ. 74,999 விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது.
இதற்கு அடுத்தபடியாக ரோட்ஸ்டர் இருக்கின்றது. இதற்கு ரூ. 1,04,999 விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கின்றது. கடைசியாக இருப்பது ரோட்ஸ்டர் ப்ரோ ஆகும். இதுவே உயர் நிலை ஆப்ஷன் ஆகும். அதிக தொழில்நுட்ப வசதிகள் மற்றும் சிறப்புகளைத் தாங்கிய தேர்வு இதுவாகும். இதனால் இதன் விலை மற்ற இரண்டு தேர்வுகளைக் காட்டிலும் மிக மிக அதிகமாக உள்ளது.
இரண்டு லட்ச ரூபாக்கு ஒரு ரூபாய் குறைவாகவே இது விற்கப்படுகின்றது. இப்போதைக்கு இந்த மூன்றிற்கும் புக்கிங் பணிகள் மட்டுமே நடைபெற்று வருகின்றன. விரைவிலேயே டெலிவரி பணிகளும் தொடங்கப்பட இருக்கின்றன. முதலில் ரோட்ஸ்டர் எக்ஸ் மாடலின் டெலிவரி பணிகளே தொடங்கப்பட இருக்கின்றது. இந்த மாத இறுதிக்குள் அது தொடங்கிவிடும் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இதன் அடிப்படையிலேயே தற்போது உற்பத்தி பணிகள் தொடங்கி இருக்கின்றது. வருகின்ற 26 ஆம் தேதி இதன் டெலிவரி பணிகள் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதேபோல், ரோட்ஸ்டர் தேர்வின் டெலிவரி பணிகளை நடப்பாண்டு மார்ச் மாதத்தில் தொடங்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ரோட்ஸ்டர் ப்ரோ-வின் டெலிவரி பணிகள் அடுத்த ஆண்டு ஜனவரியிலேயே தொடங்கப்பட இருக்கின்றது.
ஓலா ரோட்ஸ்டர் எக்ஸ்: இதன் அதிகபட்ச திறன் வெளிப்பாடு 11 kW ஆகும். டாப் ஸ்பீடு மணிக்கு 105 கிமீ. பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 40 கிமீ வேகத்தை எட்ட இந்த பைக்கிற்கு வெறும் 3.2 செகண்டுகளே போதுமானது. ஓர் முழு சார்ஜில் 117 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதை பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதம் சார்ஜ் செய்ய 3.3 மணி நேரமே போதுமானது.
ஓலா ரோட்ஸ்ர்: இதன் பீக் பவரும் 11 kW. ஆனால், இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 117 கிமீ ஆகும். இதேபோல், இது பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 40 கிமீ வேகத்தை எட்ட வெறும் 2.9 செகண்டுகளையே எடுத்துக் கொள்ளும். ஓர் முழு சார்ஜில் 159 தூரம் வரை ரேஞ்சை தரும். இதை பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதம் சார்ஜ் செய்வதற்கு 4.6 மணி நேரங்கள் தேவைப்படும் என்பது கவனிக்கத்தகுந்தது.
ஓலா ரோட்ஸ்ர் எக்ஸ்: இதன் பீக் பவர் திறனும் அதே 11 kW ஆகும். ஆனால், இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 124 கிமீ ஆகும். இதேபோல், ரேஞ்ச் திறனும் மிக மிக அதிகமானதாக இருக்கின்றது. ஓர் முழு சார்ஜில் 200 கிமீ ரேஞ்சை தரும். இதை பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 5.9 மணி நேரங்கள் வரை ஆகும்.
ஓலாவின் இந்த எலெக்ட்ரிக் பைக்கை 2.5 kWh திறன் கொண்ட பேட்டரி பேக் முதல் 16 kWh திறன் கொண்ட பேட்டரி பேக் ஆப்ஷன்களில் வாங்கிக் கொள்ள முடியும். 16 kWh திறன் கொண்ட பேட்டரி பேக்கைக் கொண்டிருக்கும் தேர்வின் ரூ. 2.50 லட்சம் வரை இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.
இது அதிக விலைக் கொணடதாக தெரியலாம். ஆனால், இந்த பெரிய பேட்டரி பேக்கைக் கொண்ட ஓலா பைக்கில் ஓர் முழு சார்ஜில் 579 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என்பது கவனிக்கத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் மின்சார இரண்டு சக்கர வாகன பிரிவில் சமீப சில காலமாக மிகப் பெரிய அடியை வாங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே தன்னுடைய எலெக்ட்ரிக் பைக்கின் உற்பத்தி பணிகளை ஓலா தற்போது தொடங்கி இருக்கின்றது. இது விற்பனையில் புதிய சாதனையை படைக்க ஓலாவிற்கு துணையாக இருக்கும் என நம்பப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








