ஒரே நாளில் வாகனத்தை பதிவு செய்து டெலிவரி கொடுக்க போறாங்க.. ஹைப்பர் டெலிவரி திட்டத்தை தொடங்கிய ஓலா!!
ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) நிறுவனத்தின் மின்சார வாகனங்கள் சமீப சில மாதங்களாக விற்பனையில் சரிவைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றது. ஆகையால், வாடிக்கையாளர்களைக் கவரும் முயற்சியில் அது தீவிரமாகக் களமிறங்கி இருக்கின்றது. இதன் அடிப்படையிலேயே தற்போது அது புதிய திட்டம் ஒன்றை தொடங்கி இருக்கின்றது. அதாவது, ஒரே நாளில் வாகனத்தின் பதிவை முடித்து, டெலிவரி கொடுக்கும் திட்டத்தையே அது தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தை ஹைப்பர் டெலிவரி (Hyper Delivery) என நிறுவனம் குறிப்பிடுகின்றது.
முதல் கட்டமாக இந்த திட்டத்தை ஒரே ஒரு நகரத்திலேயே ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தொடங்கி இருக்கின்றது. பெங்களூருவிலேயே அது தொடங்கப்பட்டு உள்ளது. விரைவில், இந்தியாவின் அடுத்தடுத்த நகரங்களிலும் இந்த சேவைத் தொடங்கப்படும் என நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. அந்தவகையில், சென்னை மற்றும் பல நகரங்கள் இந்த வரிசையில் இணைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதுவும் புதிய நிதியாண்டின் முதல் காலாண்டிலேயே மேலும் புதிய நகரங்களை ஹைப்பர் டெலிவரி திட்ட பட்டியலில் இணைக்க இருப்பதாக அது தெரிவித்து இருக்கின்றது. ஆன்லைன் அல்லது ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் விற்பனையகம் என எங்கு சென்று அதன் எலெக்ட்ரிக் டூ-வீலரை வாங்கினாலும் ஹைப்பர் ஸ்பீடில் வாகனத்தை டெலிவரி பெற்றுக் கொள்ள முடியும்.
அதாவது, வாகனத்தை வாங்கிய அடுத்த ஒரு மணி நேரத்தில் முழுமையாக பதிவு செய்யப்பட்ட வாகனமாக நம் கைகளில் பெற்றுக் கொள்ள முடியும். ஆகையால், ஓலாவின் இ-வாகனங்களை புக் செய்வோர் அந்த வாகனத்தை ஒரு சில மணி நேரங்களிலேயே கைகளில் பெற்றுக் கொள்ள முடியும் என்பது தற்போது தெரிய வந்திருக்கின்றது.

நிறுவனம் விரைந்து வாகனங்களைப் பதிவு செய்ய ஏஐ (Artificial Intelligence) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த இருப்பதாக தெரிவித்து இருக்கின்றது. மனிதர்களை விட மிக வேகமாக செயல்படக் கூடிய ஓர் தொழில்நுட்பமே இதுவாகும். இதற்கான ஏஐ தொழில்நுட்பத்தை நிறுவனமே தயார் செய்திருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.
ஓலா எலெக்ட்ரிக் தொடங்கி இருக்கும் இந்த திட்டம் இந்தியாவில் எந்த சாத்தியப்படும் என்பது இப்போதும் பலருக்கு ஆச்சரியமாக உள்ளது. இருப்பினும், ஒரே நாளில் வாகன பதிவை முடித்து, டெலிவரி செய்வதற்கான வேலைகள் அனைத்தையும் தொடங்கிவிட்டதாகவும், அது நிச்சயம் சாத்தியம் என்றும் நம்பிக்கையுடன் உள்ளது, ஓலா எலெக்ட்ரிக்.
குறிப்பாக, ஸ்டாக்கில் இல்லாத வாகன மாடலை புக் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு எப்படி ஒரே நாளில் ஓலாவால் டெலிவரி கொடுக்க முடியும் என்பதும் இங்கே கேள்விக் குறியாகி மாறி உள்ளது. இருப்பினும் ஓலா இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்திருக்கும் என நம்பப்படுகின்றது.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் சமீபத்திலேயே அதன் ஜென் 3 வகை எஸ்1 சீரிஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் டெலிவரி பணியைத் தொடங்கியது. எஸ்1 சீரிஸின் கீழ் எஸ்1 ப்ரோ (S1 Pro), எஸ்1 ப்ரோ பிளஸ் (S1 Pro+), எஸ்1 எக்ஸ் பிளஸ் (S1 X+) மற்றும் எஸ்1 எக்ஸ் (S1 X) ஆகிய மாடல்களே நாட்டில் விற்பனைக்குக் கிடைக்கின்றன.
இவற்றில் 2 kWh, 3 kWh, 4 kWh மற்றும் 5.3 kWh ஆகிய பேட்டரி பேக் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இவை ஓர் முழு சார்ஜில் 95 கிமீ தொடங்கி 200 கி.மீட்டர் வரையிலான ரேஞ்சை வழங்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. மேலும், ரூ. 79,999 தொடங்கி ரூ. 1.69 லட்சம் வரையிலான விலையில் அவை விற்பனைக்குக் கிடைக்கின்றன. இது அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் சமீப காலமாக விற்பனைச் சரிவில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கின்றது. இதில் இருந்து மீள்வதற்கான முயற்சியிலேயே அது ஈடுபட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாகவே சமீபத்தில் ஜென்3 மாடலின் டெலிவரியை அது தொடங்கியது. தற்போது விரைந்து பதிவு செய்து வாகனங்களை டெலிவரி கொடுக்கும் பணிகளையும் தொடங்கியிருக்கின்றது. இது நிறுவனத்தின் வளர்ச்சியில் பெரிதும் உதவியாக இருக்கும் என நாங்கள் நம்புகின்றோம்.


Click it and Unblock the Notifications








