ஒரே நாளில் சர்வீஸ் என பெயர் வெச்சிக்கிட்டு இப்படி பண்றீங்களே... ஓலா ஸ்கூட்டர் வைத்திருப்பவர்களின் கவனத்திற்கு!
ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) நிறுவனம் தனது ஹைப்பர்சர்வீஸ் (Hyperservice) திட்டத்தை விரிவுபடுத்தி, பிரத்யேக ஹைப்பர்சர்வீஸ் மையங்களை அறிவித்துள்ளது. தகுதியுள்ள வாடிக்கையாளர்களுக்கு எந்தக் கூடுதல் கட்டணமுமின்றி, ஒரே நாளில் வாகனச் சேவையை பெற இந்த மையங்கள் உத்தரவாதம் அளிக்கின்றன. இதன் ஒரு பகுதியாக, பெங்களூருவில் தொடங்கி, தற்போதுள்ள ஓலா சேவை மையங்கள் படிப்படியாக ஹைப்பர்சர்வீஸ் மையங்களாக மேம்படுத்தப்படும்.
பெங்களூருவின் இந்திராநகரில் முதல் ஓலா ஹைப்பர்சர்வீஸ் மையம் செயல்படத் தொடங்கியுள்ளது. இந்த ஹைப்பர்சர்வீஸ் மையங்கள் சேவை அனுபவத்தை அடிப்படை ரீதியாக எளிதாக்கி, விரைவுபடுத்தும். வாடிக்கையாளர்கள் கூடுதல் செலவின்றி தங்கள் வாகனங்களுக்கு ஒரே நாளில் சர்வீஸ் பெறலாம். இது முழுமையான டிஜிட்டல் மற்றும் வெளிப்படையான சேவைப் அனுபவத்தை உறுதி செய்கிறது.

இருப்பினும், ஒரே நாள் சேவை என்பது வாகனத்தின் நிலை, சேவைத் தேவைகள், உதிரி பாகங்களின் இருப்பு மற்றும் வாடிக்கையாளர் தகுதி போன்ற நிபந்தனைகளுக்கு உட்பட்டது. இதுகுறித்து ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "நடைபெற்று வரும் சேவை மேம்பாட்டின் ஒரு பகுதியாக, சேவை அனுபவத்தின் பல அடிப்படை அம்சங்களை நாங்கள் மறுவடிவமைக்கிறோம்.
இது ஓலா வாகன உரிமையின் மையப்பகுதி, தயாரிப்பைப் போலவே இதற்கும் புதுமை அவசியம். ஹைப்பர்சர்வீஸ் மையங்கள் மூலம், கூடுதல் கட்டணமின்றி, ஒரே நாளில் சேவை உறுதி என்ற புதிய தரத்தை நாங்கள் உருவாக்குகிறோம். தொழில்நுட்பம், செயல்முறை மறுவடிவமைப்பு மற்றும் பெரிய அளவிலான செயல்பாடுகளைப் பயன்படுத்தி, தடைகளை நீக்கி, ஒவ்வொரு ஓலா வாடிக்கையாளருக்கும் வேகமான, எளிமையான, வெளிப்படையான சேவை அனுபவத்தை வழங்குவதே இதன் நோக்கம்" என்று விளக்கினார்.

இந்த மையங்களில் வாடிக்கையாளர் ஓய்வறை, இலவச வைஃபை (Wifi) மற்றும் சேவை நிலவரத்தை நிகழ்நேரத்தில் காணும் டிஜிட்டல் வசதிகளும் உள்ளன. பெங்களூருவுக்குப் பிறகு, வரும் வாரங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட ஓலா சேவை மையங்களை ஹைப்பர்சர்வீஸ் மையங்களாக விரைவாக மேம்படுத்த இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இது தொழில்நுட்பம், விரிவான செயல்பாடு மற்றும் வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வடிவமைப்புடன், உலகத் தரம் வாய்ந்த எலெக்ட்ரிக் வாகனங்களின் உரிமை அனுபவத்தை உருவாக்குவதில் ஓலாவின் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது. ஹைப்பர்சர்வீஸ் சமீபத்தில் ஒரு திறந்தநிலை தளமாக மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம், ஓலாவின் அசல் உதிரிபாகங்கள், கண்டறியும் கருவிகள் மற்றும் சேவைப் பயிற்சி தொகுதிகளை வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி, தன்னிச்சையாக செயல்படும் மெக்கானிக் கடைகள், மெக்கானிக்குகளும் இனி அணுக முடியும்.
ஓலா எலெக்ட்ரிக் வாடிக்கையாளர் செயலி மற்றும் இணையதளம் வழியாக உதிரிபாகங்களை நேரடியாக வாங்கலாம். இதன் மூலம் தரமான பாகங்கள் இடைத்தரகர்கள் இன்றி கிடைக்கின்றன. கூடுதலாக, ஓலா நிறுவனம் தனது இன்-ஆப் (In-app) சேவை அம்சத்தையும் நாடு முழுவதும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அம்சம் பயனர்கள் தங்களுக்கு விருப்பமான சேவை நேரங்களை தேர்வு செய்ய, சேவை நிலையை கண்காணிக்க மற்றும் சேவை தொடர்பான அனைத்து தேவைகளையும் ஓலா எலெக்ட்ரிக் செயலி மூலமாகவே நேரடியாக நிர்வகிக்க உதவுகிறது. இதன் மூலம், வாடிக்கையாளர்கள் வழக்கமான சேவை முன்பதிவு முறைகளில் உள்ள சிரமங்களைத் தவிர்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் முன்னணி எலெக்ட்ரிக் 2-வீலர் நிறுவனமாக விளங்கும் ஓலா எலெக்ட்ரிக்கின் இந்த புதிய முயற்சி, அதன் பிராண்டை மேலும் மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தும் என்பது உறுதி. ஒரே நாளில் சேவை என விளம்பரப்படுத்திக் கொண்டு, வாகனத்தின் நிலை, சேவைத் தேவைகள், உதிரி பாகங்களின் இருப்பு மற்றும் வாடிக்கையாளர் தகுதி அடிப்படையில் சேவை சில நாட்களுக்கு கூட நீளலாம் என்பது ஓலாவின் இந்த முயற்சியை காலப்போக்கில் மங்க செய்ய கூடும்.


Click it and Unblock the Notifications








