குடும்ப குடும்பமா மகிழ்ச்சியோடு டெலிவிரி எடுத்துட்டு போறாங்க! ஓலாவை இதுக்கு அப்புறம் கையிலேயே பிடிக்க முடியாது
ஓலா எலக்ட்ரிக் (Ola Electric) நிறுவனம், அதன் 4680 பாரத் செல் பேட்டரி (4680 Bharat Cell Battery) மூலம் இயங்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் (Electric Scooters) பெரிய அளவிலான டெலிவிரிகளை கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியுள்ளது. முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு ஸ்கூட்டர்கள் டெலிவிரி (Delivery) செய்யப்படும் படங்கள் இணையத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளன.
ஓலா நிறுவனத்தால் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 4680 பாரத் செல் பேட்டரி பேக் கொண்ட முதல் தயாரிப்பு, 'எஸ்1 புரோ+' (S1 Pro+) ஆகும். 5.2kWh திறன் கொண்ட இந்த பேட்டரி பேக்குகள் அதிக தூரம் செயல்படும் திறன், மேம்பட்ட செயல்பாடு மற்றும் பாதுகாப்பை வழங்கும் என ஓலா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஓலா எலக்ட்ரிக் ஆனது எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்கான பேட்டரி பேக்குகள் மற்றும் செல்களை உள்நாட்டிலேயே தயாரிக்கும் இந்தியாவின் முதல் நிறுவனம் ஆகும். எஸ்1 புரோ+ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மீதான வாடிக்கையாளர்களின் ஆர்வம் அபாரமானது என்று ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் குறிப்பிடுகிறார்.
மேலும் அவர், "டெலிவிரிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. எங்கள் சொந்த 4680 பாரத் செல் மூலம் இயங்கும் இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாடிக்கையாளர்கள் பெருமையுடன் ஓட்டி வருகின்றனர். இது ஓலாவுக்கு மட்டுமல்ல, உலகளாவிய எலெக்ட்ரிக் வாகன மையமாக இந்தியா மாறுவதற்கான பயணத்திலும் ஒரு பெரிய தருணம்.
விரைவில் தேசிய அளவில் அறிமுகம் செய்யப்படுவதால், இந்த புரட்சிகர தயாரிப்பு மற்றும் தொழில்நுட்பத்தை நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் கொண்டு செல்ல நாங்கள் தயாராக உள்ளோம்" என்றார். ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் 'எஸ்1' (S1) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மற்றும் 'ரோட்ஸ்டர் எக்ஸ்' (Roadster X) எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களை விற்பனைக்கு வழங்குகிறது.

பிரீமியம் தரத்திலான 'எஸ்1 ஜென் 3' (S1 Gen 3) வரிசையில் 5.2kWh மற்றும் 4kWh பேட்டரி ஆப்ஷன்களில் எஸ்1 புரோ+ (S1 Pro+) எலெக்ட்ரிக் ஸ்கூட்டரும், 4kWh மற்றும் 3kWh பேட்டரி ஆப்ஷன்களில் எஸ்1 புரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரும் உள்ளன. இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-Showroom Prices) முறையே ரூ.1,90,338, ரூ.1,70,338, ரூ.1,44,999 மற்றும் ரூ.1,24,999 ஆகும்.
ஓலா நிறுவனத்தின் பொதுச் சந்தைக்கான தயாரிப்புகளில் ஜென் 3 எஸ்1 எக்ஸ்+ (4kWh), மற்றும் ஜென் 3 எஸ்1 எக்ஸ் (2kWh, 3kWh, 4kWh) ஆகியவை அடங்கும். இவற்றின் விலைகள் முறையே ரூ.1,19,999, ரூ.84,999, ரூ.98,999, ரூ.1,14,999 ஆகும். ஸ்போர்ட்ஸ் ஸ்கூட்டர்கள் வரிசையில் எஸ்1 புரோ ஸ்போர்ட் (5.2kWh, 4kWh) கிடைக்கிறது. இதன் விலைகள் முறையே ரூ.1,64,999 மற்றும் ரூ.1,49,999 ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஓலா எலெக்ட்ரிக் ஆனது இந்தியாவின் முன்னணி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனமாக விளங்குகிறது. இந்த நிலையை தொடர்ந்து தக்க வைத்து, விற்பனையை மேலும் உயர்த்த வேண்டுமெனில், இவ்வாறான புது, புது முயற்சிகள் அவசியமாகின்றன. மேலும், உள்நாட்டிலேயே பேட்டரிகளை உருவாக்குவது ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்திற்கும் செலவு குறைந்தாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








