புதுசா ரெடி பண்ணி விற்பனைக்கு கொண்டு வர போறாங்க.. நாளை அறிமுகமாகிறது நியூ ஜென் ஓலா எஸ்1 சீரிஸ்..
கொஞ்சம் நாட்களாகவே ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) நிறுவனம் விற்பனையில் சரிவைச் சந்தித்து வருகின்றது. போட்டியாளர்களின் கை ஓங்கிக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே அதற்கு இந்த நிலைமை ஏற்பட்டு இருக்கின்றது. எலெக்ட்ரிக் டூ-வீலர் விற்பனையில் நம்பர் 1 நிறுவனமாக இருந்து வந்த ஓலா எலெக்ட்ரிக்கை பஜாஜ் (Bajaj) நிறுவனமே பின்னுக்கு தள்ளி இருக்கின்றது. சேத்தக் (Chetak) எனும் ஒற்றை மாடலைக் கொண்டே அது சென்ற ஆண்டு டிசம்பர் மாத விற்பனையில் வீழ்த்தியது.
இந்த மாபெரும் அடி நிறுவனத்திற்கு தாங்கிக் கொள்ள முடியாத வலியை கொடுக்கும் வகையில் அமைந்திருக்கின்றது. இந்த நிலையிலேயே ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் புதிய தலைமுறை எஸ்1 சீரிஸ் இ-ஸ்கூட்டர் மாடல்களை விற்பனைக்குக் களமிறக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நாளைய தினமே அதன் அறிமுகம் அரங்கேற இருக்கின்றது.

புதிய தலைமுறை என்பதால் இப்போது விற்பனையில் இருக்கும் ஓலா எஸ்1 சீரிஸ் ஸ்கூட்டர்களில் காணப்படாத அம்சங்கள் பல அதில் இடம் பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, அட்வான்ஸ்டு தொழில்நுட்ப அம்சங்கள் பல இதில் எதிர்பார்க்கப்படுகின்றது. புதிய திரை, அதிக ரேஞ்ச் திறன் மற்றும் கூடுதல் ஸ்போர்ட்டி லுக் ஆகியவற்றுடனேயே புதிய ஓலா எஸ்1 எதிர்பார்க்கப்படுகின்றது.
சென்ற ஆண்டு நடைபெற்ற சங்கல்ப் எனும் நிகழ்ச்சியிலேயே ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தன்னுடைய மூன்றாம் தலைமுறை எஸ்1 சீரிஸ் வகைகளைக் காட்சிப்படுத்தி இருந்தது. நீடித்து உழைக்கும் திறன் கொண்ட பேட்டரி பேக், அப்டேட் செய்யப்பட்ட எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் மின்சாதனங்கள் உள்ளிட்டவையே இதில் இடம் பெற இருக்கின்றன.
சமீபத்தில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் புதிய 4680 பேட்டரி செல்களை இந்தியாவில் காட்சிப்படுத்தியது. இதுவே நீடித்து உழைக்கக் கூடிய, அதிக ரேஞ்சை தரக் கூடிய மற்றும் பாதுகாப்பான பேட்டரி பேக்குகள் ஆகும். இதையே தன்னுடைய புதிய ஜென்3 எ1 சீரிஸ் இ-ஸ்கூட்டர்களில் ஓலா பயன்படுத்த இருக்கின்றது.
இதுமட்டும் அல்ல அதிக ஆற்றலை வெளிப்படுத்தும் விதமாகவும் இந்த ஜென்3 வகைகள் இருக்கும் என கூறப்படுகின்றது. ஆகையால், இப்போது விற்பனையில் இருக்கும் மற்ற ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களைக் காட்டிலும் இது அதிக ஆற்றலை வெளியேற்றக் கூடியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆனால், இந்த வாகனம் பற்றிய எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை. நாளை அதுபற்றிய அனைத்து முக்கிய விபரங்களும் வெளியாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே தற்போது ஓலா எலெக்ட்ரிக் டூ-வீலர்கள் பிரியர்கள் நாளைய தினத்தை எதிர்நோக்கி பெரிதும் காத்திருக்கத் தொடங்கி இருக்கின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு இப்போதும் தனித்துவமான டிமாண்ட் சந்தையில் நிலவிக் கொண்டிருக்கின்றது. இந்த சூழல் முழுமையாக மாறிவிடக் கூடாது என்பதன் அடிப்படையிலேயே தற்போது விற்பனையில் இருக்கும் எஸ்1 சீரிஸ்களை புதுசாக்கி புதிய தலைமுறையாக ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. ஆகையால் ஒட்டுமொத்த மின்சார வாகன பிரியர்களின் கவனமும் தற்போது ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் பக்கம் திரும்பி இருக்கின்றது. விலை மற்றும் சிறப்பம்சம் என அனைத்திலும் மிக சிறந்த வாகனமாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








