6 ஸ்கூட்டர், 6 பைக் ஒரே நிறுவனத்திடம் இருந்து விற்பனைக்கு வருது.. விரட்டி அடிச்சவங்கலாம் மிரண்டு போயிருக்காங்க
சமீப சில காலமாகவே விற்பனையில் வீழ்ச்சியைச் சந்தித்து வந்த ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) நிறுவனத்திற்கு கடந்த மார்ச் மாதம் ஆறுந்கதல் அளிக்கும் மாதமாக அமைந்திருக்கின்றது. இந்த ஒற்றை மாதத்தில் மட்டுமே 23,430 யூனிட்டுகள் ஓலா மின்சார இரண்டு சக்கர வாகனங்கள் விற்பனையாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே நிறுவனம் தற்போது கொண்டாட்டத்தில் மூழ்கி இருப்பதாகக் கூறப்படுகின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே ஓலா நிறுவனம் வாடிக்கையாளர்களைக் கவரும் புதுமுக வாகனங்களை அதிக எண்ணிக்கையில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் 6 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (6 Electric Scooter)கள் மற்றும் 6 எலெக்ட்ரிக் பைக் (6 Electric Bike)குகளை அது அறிமுகம் செய்ய இருக்கின்றது. நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் இவை ஒன்றன் பின் ஒன்றாக விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆகஸ்டு 15 முதல் இந்த அறிமுகப் பணி தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. தினசரி பயன்பாடு, வர்த்தக பயன்பாடு என அனைத்து பிரிவை மையப்படுத்தி அது புதுமுக வாகனங்களை விற்பனைக்குக் கொண்டு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இதுமட்டுமல்ல ஸ்போர்ட்ஸ் டூ-வீலர்களுக்கு இணையான ஆற்றலை உருவாக்கும் வசதிக் கொண்ட இரண்டு சக்கர வாகனங்களையும் அது விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.
எஸ்1 ஸ்போர்ட்ஸ் (S1 Sports), எஸ்2 சிட்டி (S2 City), எஸ்2 ஸ்போர்ட்ஸ் (S2 Sports), எஸ்2 டூரர் (S2 Tourer), எஸ்3 கிராண்ட் அட்வென்சர் (S3 Grand Adventure) மற்றும் எஸ்3 கிராண்டு டூரர் (S3 Grand Tourer) ஆகிய இ-ஸ்கூட்டர்களையே ஓலா எலெக்ட்ரிக் அறிமுகம் செய்ய இருப்பதாகக் கூறப்படுகின்றது.

இதுமட்டுமல்ல, ஸ்போர்ட்ஸ்டர் (Sportster), ஆரோஹெட் (Arrowhead), ரோட்ஸ்டர் ப்ரோ (Roadster Pro), க்ரூஸர் (Cruiser), அட்வென்சர் (Adventure) மற்றும் டைமண்ட் ஹெட்டட் (Diamondhead) ஆகிய இ-பைக்குகளையும் அது விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது, ஓலா. இவற்றின் வாயிலாக கூடுதலாக வாடிக்கையாளர்களை அது கவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
குறிப்பாக, கடந்த மாதங்களில் பெற்றதைப் போல மாபெரும் வரவேற்பை இந்தியர்கள் மத்தியில் அது பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் புதுமுக மின்சார டூ-வீலர்களை மட்டுமல்ல சில தனித்துவமான திட்டங்களையும் வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக அறிவித்து வருகின்றது. அந்தவகையில், சமீபத்தில் ஒரே நாளில் வாகனத்தின் பதிவு முடித்து, டெலிவரிக்கும் அசத்தலான திட்டத்தை அது தொடங்கியது.
இந்த திட்டத்திற்கு ஹைப்பர் டெலிவரி என்கிற பெயரை அது சூட்டி இருக்கின்றது. மேலும், முதல் கட்டமாக பெங்களுரூவிலேயே இந்த திட்டம் தொடங்கப்பட்டு இருக்கின்றது. விரைவில் இந்தியாவின் பிற முக்கிய நகரங்களிலும் அது ஹைப்பர் டெலிவரி திட்டத்தைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்காக பிரத்யேக ஏஐ தொழில்நுட்பத்தை அது உருவாக்கி இருக்கின்றது. இந்த தொழில்நுட்பமே வாடிக்கையாளரின் ஆவணங்களை ஆய்வு செய்து ஒரே நாளில் பதிவு செய்ய உதவியாக இருக்கப் போகின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்திற்கு கிடைத்துக் கொண்டிருந்த மிக சிறப்பான வரவேற்பு கொஞ்சம் கொஞ்சமாக மழுங்கிய வண்ணம் இருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே வாடிக்கையாளர்களைக் கவரும் முயற்சியில் களமிறங்கி இருக்கின்றது. குறிப்பாக, ஓலா எலெக்ட்ரிக் அறிவித்திருக்கும் இந்த அறிவிப்பானது அதன் போட்டியாளர்களை மிரள செய்யும் வகையில் அமைந்திருக்கின்றது. மேலும், வரும் நாட்களில் மார்க்கெட்டை மிகப் பெரிய அளவில் வளைத்துப் போடும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.


Click it and Unblock the Notifications








