பருந்தாகுது ஊர் குருவி! எலக்ட்ரிக் பைக்குகளை விற்க நாடு நாடாக பறக்குது - குறுகிய காலத்தில் அசூர வளர்ச்சி!
ரிவோல்ட் மோட்டார்ஸ் (Revolt Motors), இந்தியாவின் முன்னணி எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் நிறுவனங்களுள் ஒன்று. இன்னும் சொல்லப்போனால், இந்தியாவில் எலக்ட்ரிக் பைக் (Electric Bike)-களை விற்பனை செய்யும் மிகவும் சில நிறுவனங்களுள் ரிவோல்ட் மோட்டார்ஸ் ஒன்றாகும். ரத்தன்இந்தியா எண்டர்பிரைசஸ் (RattanIndia Enterprises) நிறுவனத்தின் கீழ் 2017ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ரிவோல்ட் இண்டெல்லிகார்ப் (Revolt Intellicorp) என்கிற எலக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனத்தின் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களை உற்பத்தி செய்யும் பிரிவாக ரிவோல்ட் மோட்டார்ஸ் உள்ளது. இந்த நிறுவனத்தில் இருந்து ஏற்கனவே சில எலக்ட்ரிக் பைக்குகள் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்த நிலையில், நேபாளம் (Nepal) நாட்டிலும் தனது நெட்வொர்க்கை ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனம் விரிவுப்படுத்த உள்ளது. வருகிற ஏப்ரல் மாதத்தில் நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டு (Kathmandu)-இல் தனது முதல் டீலர்ஷிப் ஷோரூம் (Dealership Showroom)-ஐ திறக்க உள்ளதாக ரிவோல்ட் நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது.

இந்தியாவை தாண்டி வெளிநாடுகளிலும் தனது எலக்ட்ரிக் பைக்குகளை விற்பனை செய்ய ஆர்வமாக இருக்கும் ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனம், தனது நெட்வொர்க்கை விரிவுப்படுத்தி இருக்கும் 2வது வெளிநாடு நேபாளம் ஆகும். ஏற்கனவே, இலங்கை (Sri Lanka)-இல் ரிவோல்ட் மோட்டார்ஸ் நுழைந்துவிட்டது. இலங்கையில் கடந்த சில மாதங்களாக ரிவோல்ட் எலக்ட்ரிக் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
தற்போது நேபாளத்தில் தனது எலக்ட்ரிக் பைக்குகளை விற்பனை செய்வதற்காக, எம்வி துகார் க்ரூப் (Dugar Group) உடன் ரிவோல்ட் மோட்டார்ஸ் கூட்டணி சேர்ந்துள்ளது. இந்த துகார் க்ரூப் ஆனது நேபாளத்தில் சுமார் 140 வருடங்களாக பிஸ்னஸ் செய்துவரும் பழமையான மற்றும் அனுபவம் வாய்ந்த தனியார் நிறுவனம் ஆகும். ஆட்டோமொபைல் துறையில் எம்வி துகார் க்ரூப்புக்கு 52 வருட அனுபவம் உள்ளது.

இத்தகைய நிறுவனத்துடன் இணைந்து, ஏற்கனவே கூறியதுபோல் வருகிற 2025 ஏப்ரல் மாதத்தில் காத்மாண்டுவில் தனது முதல் டீலர்ஷிப் ஷோரூமை ரிவோல்ட் திறக்க உள்ளது. இந்த முதல் நேபாள ஷோரூமில் தனது அனைத்து எலக்ட்ரிக் பைக்குகளையும் ரிவோல்ட் நிறுவனம் காட்சிக்கு நிறுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, விலையுயர்ந்த ரிவோல்ட் எலக்ட்ரிக் பைக்கான ஆர்வி400 (RV400) இந்த ஷோரூமில் முக்கியமான அங்கம் வகிக்க உள்ளது.
இந்த எலக்ட்ரிக் பைக் மட்டுமின்றி, ரிவோல்ட் மோட்டார்ஸின் மற்ற எலக்ட்ரிக் பைக்குகளான ஆர்வி400 பி.ஆர்.இசட் (RV400 BRZ), ஆர்வி1 (RV1) மற்றும் ஆர்வி1+ (RV1+) உள்ளிட்டவையும் விரைவில் திறக்கப்பட உள்ள காத்மாண்டு ஷோரூமில் மக்கள் முன் நிறுத்தப்பட உள்ளன. ஆனால், இந்த ரிவோல்ட் எலக்ட்ரிக் பைக்குகள் அனைத்தும் உடனடியாக நேபாளத்தில் விற்பனை செய்யப்பட உள்ளனவா என்பது உறுதியாக தெரியவில்லை.

எலக்ட்ரிக் பைக்குகள் மட்டுமின்றி, அவற்றிற்கான ஆக்ஸஸரீகளையும் காத்மாண்டு ஷோரூமில் ரிவோல்ட் நிறுவனம் காட்சிப்படுத்த திட்டமிட்டுள்ளது. மேலும், பைக்கை வாங்கும் கஸ்டமர்களுக்கு அதன் பிறகான சேவைகளை வழங்குவதற்கு ஆஃப்டர்-சேல்ஸ் உள்கட்டமைப்பையும் உருவாக்கும் முயற்சியில் ஏற்கனவே ரிவோல்ட் நிறுவனம் ஈடுப்பட ஆரம்பித்துவிட்டது.
நேபாளம் முழுவதும் டீலர்ஷிப் ஷோரூம்களை நிறுவ திட்டமிட்டுள்ள ரிவோல்ட் மோட்டார்ஸ், அதற்கு இணையாக சர்வீஸ் செண்டர்களையும் நேபாளம் நாடு முழுக்க நிறுவ முனைப்புடன் உள்ளது. அடுத்த 3- 4 மாதங்களில் நேபாளத்தில் குறைந்தது 15 டீலர்ஷிப் ஷோரூம்களை முக்கியமான நகரங்களில் ரிவோல்ட் நிறுவனம் திறக்க உள்ளது.

இதுகுறித்து ரத்தன்இந்தியா எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் தலைவர் அஞ்சலி ரத்தன் கூறுகையில், "பசுமையான எரிச்சக்தி மற்றும் நிலையான இயக்கத்திற்கு அதிகரித்துவரும் தேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, ரிவோல்ட் மோட்டார்ஸுக்கு நேபாளம் ஒரு முக்கியமான சந்தையாகும். மோட்டார்சைக்கிளுக்கான நேபாளத்தின் தனித்துவமான நிலப்பரப்பானது எங்களது ஸ்மார்ட் & திறமையான எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களை அறிமுகப்படுத்த ஒரு அற்புதமான வாய்ப்பை வழங்குகிறது" என்றார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: உள்நாட்டில் ஓரளவுக்கு மார்க்கெட்டை பிடித்த பிறகு, வெளிநாடுகளிலும் அதனை விரிவுப்படுத்த நினைக்கும் ரிவோல்ட் மோட்டார்ஸின் எண்ணம் பாராட்டக்குரியது ஆகும். இதன் மூலம், ரத்தன்இந்தியா எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் வணிகம் புதிய நாடுகளுக்கு வளர்வது மட்டுமில்லாமல், நேபாளம் நாட்டிலும் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்க ஆரம்பிக்கும்.


Click it and Unblock the Notifications









