ராயல் என்பீல்டு பைக் விலை இவ்ளோ குறைய போகுதா! அதை விட இது இன்னும் சூப்பரான மேட்டரா இருக்கே! சேல்ஸ் எகிற போகுது
இந்திய சந்தையில் மிகப்பெரிய வாடிக்கையாளர்கள் வட்டத்தை கொண்டுள்ள பைக் நிறுவனங்களில் ஒன்று ராயல் என்பீல்டு (Royal Enfield). 350 சிசி, 450 சிசி மற்றும் 650 சிசி என பல்வேறு இன்ஜின் திறன்களில் ராயல் என்பீல்டு பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இதில், 350 சிசி பைக்குகள் மட்டும், இனிமேல் ஃப்ளிப்கார்ட் (Flipkart) தளத்திலேயே விற்பனைக்கு கிடைக்கும். வரும் செப்டம்பர் 22ம் தேதியில் (September 22) இருந்து இந்த திட்டம் அமலுக்கு வருகிறது. ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மொத்தம் ஐந்து 350 சிசி பைக்குகளை இனிமேல் ஃப்ளிப்கார்ட் தளத்தில் வாங்க முடியும்.

அவை ராயல் என்பீல்டு கிளாசிக் 350 (Royal Enfield Classic 350), ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 (Royal Enfield Meteor 350), ராயல் என்பீல்டு புல்லட் 350 (Royal Enfield Bullet 350), ராயல் என்பீல்டு ஹண்டர் 350 (Royal Enfield Hunter 350), ராயல் என்பீல்டு கோவன் கிளாசிக் 350 (Royal Enfield Goan Classic 350) ஆகியவை ஆகும்.
இதற்காக ஃப்ளிப்கார்ட் நிறுவனத்துடன், ராயல் என்பீல்டு நிறுவனம் கூட்டணி அமைத்துள்ளது. ராயல் என்பீல்டு நிறுவனத்தின் 350 சிசி பைக்குகள் அனைத்தும், ஃப்ளிப்கார்ட்டில் தளத்தில் விற்பனை செய்யப்படுவது இதுவே முதல் முறை ஆகும். ஆனால் முதற்கட்டமாக இந்தியாவின் 5 நகரங்களில் மட்டுமே, ஃப்ளிப்கார்ட் தளம் மூலமாக, ராயல் என்பீல்டு நிறுவனத்தின் 350 சிசி பைக்குகளை வாங்க முடியும்.

அவை பெங்களூர் (Bangalore), மும்பை (Mumbai), குருகிராம் (Gurugram), கொல்கத்தா (Kolkata), லக்னோ (Lucknow) ஆகியவை ஆகும். ஃப்ளிப்கார்ட் தளம் மூலமாக ராயல் என்பீல்டு நிறுவனத்தின் 350 சிசி பைக்குகளை வாங்கும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும், முழுமையான ஜிஎஸ்டி (GST) வரி குறைப்பு பலன்கள் கிடைக்கும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
இது குறித்து டீம் பிஹெச்பி தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக ராயல் என்பீல்டு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான (CEO) கோவிந்தராஜன் (Govindarajan) கூறுகையில், ''டிஜிட்டல் யுகம் சார்ந்த இன்றைய வாடிக்கையாளர்கள், பைக்குகளை ஆன்லைனில் வாங்குவதற்கு, மிகவும் எளிமையான மற்றும் சௌகரியமான வழிகளை எதிர்பார்க்கின்றனர்.
இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதற்கு ஃபிளிப்கார்ட் உடனான எங்கள் கூட்டணி உதவி செய்யும். தற்போதைய நிலையில் 5 நகரங்களில் மட்டுமே இந்த திட்டம் அமலுக்கு வருகிறது. ஆனால் வரும் காலங்களில் இன்னும் நிறைய நகரங்களில் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்'' என்றார்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஃபிளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படும் காரணத்தால், இனிமேல் ராயல் என்பீல்டு பைக்குகளை வாங்குவது, முன்பை காட்டிலும் இன்னும் எளிமையான ஒரு விஷயமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராயல் என்பீல்டு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கோவிந்தராஜன் கூறியது போலவே, இது இன்றைய டிஜிட்டல் தலைமுறை வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும்.
ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மற்ற செய்திகளை பொறுத்தவரை, ஜிஎஸ்டி வரி குறைப்பு காரணமாக, ராயல் என்பீல்டு நிறுவனத்தின் 350 சிசி பைக்குகளின் விலை அதிகபட்சமாக 20 ஆயிரம் ரூபாய் வரை குறையவுள்ளது. இது குறித்து என்டிடிவி ஆட்டோ தளம் செய்தி வெளியிட்டுள்ளது. எனவே இது ராயல் என்பீல்டு நிறுவனத்தின் 350 சிசி பைக்குகளை வாங்குவதற்கு நல்லதொரு வாய்ப்பாக கருதப்படுகிறது.
20 ஆயிரம் ரூபாய் வரை என்பது உண்மையிலேயே நல்ல விலை குறைப்புதான். இதற்கு நாம் மத்திய அரசுக்குதான் நன்றி சொல்லியாக வேண்டும். விலை குறையவுள்ள காரணத்தால், இந்திய சந்தையில் வரும் மாதங்களில் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் 350 சிசி பைக்குகளின் விற்பனை உயரும் என டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கருதுகிறது. வரும் செப்டம்பர் 22ம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி குறைப்பு மற்றும் ஃப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை தொடக்கம் என 2 அதிரடிகள் அரங்கேற போகின்றன.


Click it and Unblock the Notifications








