இன்னும் 7 நாள்ல அறிமுகமாகுது ராயல் என்பீல்டின் புதிய பைக்! கிளாசிக் பைக்க அப்படியே உரிச்சு வச்ச மாதிரி இருக்கு
சென்னையை மையமாகக் கொண்டு இயங்கும் உலக புகழ் பெற்ற இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனம் ராயல் என்பீல்டு (Royal Enfield). இந்த நிறுவனமே ஓர் புதிய மோட்டார்சைக்கிளை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கின்றது. கிளாசிக் 650 (Classic 650) பைக் மாடலையே அது நாட்டில் அறிமுகம் செய்ய இருக்கின்றது. வருகின்ற மார்ச் 27 ஆம் தேதி அன்றே இந்த மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதாவது, இன்னும் ஏழே நாட்களில் இந்திய இரண்டு சக்கர வாகன காதலர்களின் மிகப் பெரிய எதிர்பார்ப்பாக இருக்கும் ராயல் என்பீல்டு கிளாசிக் 650 மோட்டார்சைக்கிள் அறிமுகமாக உள்ளது. இது டூ-வீலர் பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. இதன் மீது ஏன் இந்தியர்களுக்கு எதிர்பார்ப்பு உள்ளது என நீங்கள் கேட்கலாம். இதற்கான பதிலையே இந்த பதிவில் விரிவாக வழங்கி இருக்கின்றோம்.

ராயல் என்பீல்டு பைக் பிரியர்கள், மிக முக்கியமாக கிளாசிக் 350 பைக் காதலர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பாக கிளாசிக் மாடலின் 650 வெர்ஷன் இருந்து வருகின்றது. இந்த வெர்ஷன் அதிக ஆற்றலை உருவாக்கக் கூடியதாக மட்டுமல்ல அதிக பிரீமியம் அம்சங்களைத் தாங்கியதாகவும் இருக்கும் என்கிற தகவல் சமீப சில காலமாகவே வெளியாகிக் கொண்டிருக்கின்றது.
இதுவே பலரை இந்த பைக்கை எதிர்பார்த்து காத்திருக்கச் செய்திருக்கின்றது. அதேவேளையில், ராயல் என்பீல்டு நிறுவனத்தின் 650 சிசி பைக் மாடல்களுக்கு நல்ல டிமாண்ட் நிலவி வருகின்றது. இந்தியாவிலும் சரி, உலக சந்தையிலும் சரி சிறப்பான வரவேற்பையே 650 சிசி பைக்குகளுக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றன.

இந்த வரவேற்பை இரட்டிப்பாக்கும் பொருட்டும் கிளாசிக் 650-யை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது, ராயல் என்பீல்டு. இது விற்பனைக்கு வரும்பட்சத்தில் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் 6ஆவது 650 சிசி பைக் மாடலாக இது மாறும். ஆகையால், இந்த பைக்கை நம்ம ஆட்கள் ஆறுச்சாமி என்று செல்லமாக அழைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இன்டர்செப்டார் 650 (Interceptor 650), கான்டினென்டல் ஜிடி 650 (Continental GT 650), சூப்பர் மீட்டியர் (Super Meteor), பியர் 650 (Bear 650) மற்றும் ஷாட்கன் (Shotgun) ஆகிய ஐந்து பைக் மாடல்களையே அது 650 சிசி மோட்டார்சைக்கிள்கள் பிரிவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

இந்த பைக்குகளில் பயன்படுத்தப்படும் அதே 648 சிசி திறன் கொண்ட பாரல்லல் ட்வின் எஞ்சினே கிளாசிக் 650 பைக்கிலும் இடம் பெற்றிருக்கும் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. 46.3 பிஎச்பி மற்றும் 52.3 என்எம் ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்டதே இந்த மோட்டார் ஆகும்.
இந்த எஞ்சினுடன், 6 ஸ்பீடு கியர்பாக்ஸே இணைக்கப்பட்டு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுமட்டுமில்லைங்க, பிரீமியம் அம்சங்களைத் தாங்கி இருப்பதிலும் இந்த மோட்டார்சைக்கிள் மிக சிறந்ததாக இருக்கும் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அந்தவகையில், செல்போன் இணைப்பு வசதி மற்றும் டிரிப்பர் நேவிகேஷன் வசதி உள்ளிட்டவை இதில் எதிர்பார்க்கப்படுகின்றன.
இதுதவிர, டூயல் சேனல் ஏபிஎஸ், எல்இடி லைட்டுகள் போன்ற அம்சங்களும் இந்த பைக்கில் எதிர்பார்க்கப்படுகின்றன. இத்துடன், ஸ்போக் வீல் மற்றும் அலாய் வீல் ஆப்ஷன்களும் இந்த பைக்கில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. பார்க்க இந்த பைக் கிளாசிக் 350 மாடலைப் போல் இருந்தாலும், கூடுதல் கட்டுமஸ்தானதாக அது இருக்கும்.
குறிப்பாக, எஞ்சின் பகுதி மற்றும் ப்யூவல் டேங்க் உள்ளிட்டவை கிளாசிக் 350-ஐ கூடுதல் முரட்டுத் தனமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சஸ்பென்ஷனைப் பொருத்த வரை கிளாசிக் 650 பைக்கில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் முன் பக்கத்திலும், டூயல் ஷாக்குகள் பின் பக்கத்திலும் வழங்கப்பட்டு இருக்கும்.
இதேபோல், இரண்டு வீல்களிலும் மிக சிறந்த பிரேக்கிங் அனுபவத்தை வழங்கும் விதமாக டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டு இருக்கும். இந்த மாதிரியான அம்சங்களே இந்த பைக்கின் மீதான எதிர்பார்ப்பை பன்மடங்காக டூ-வீலர்கள் காதலர்கள் மத்தியில் அதிகரிக்கச் செய்திருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் முக்கிய தயாரிப்புகளில் ஒன்றாக கிளாசிக் 350 உள்ளது. இதற்குக் கிடைத்துக் கொண்டிருப்பதைப் போலவே நல்ல வரவேற்பு கிளாசிக் 650க்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பார்க்க இரண்டும் ஒரே மாதிரியாக உறிச்சு வச்ச மாதிரி இருந்தாலும், குறிப்பிட்ட சில வித்தியாசங்களும் அவற்றில் தென்படுகின்றன.


Click it and Unblock the Notifications









