2.5 லட்ச ரூபாய் பைக்கில் ராயல் என்ஃபீல்டு செய்த ஒரு சின்ன மாற்றம்! கஸ்டமர்ஸ் சொன்னப்படியே செஞ்சிட்டாங்க
ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட லேட்டஸ்ட் அறிமுகம், குரில்லா 450 (Guerrilla 450) ஆகும். இந்த பைக்கில் தற்போது புதியதாக 'பீக்ஸ் வெண்கலம்' (Peix Bronze) என்கிற புதிய கலர் ஆப்ஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குரில்லா 450 பைக்கின் டேஷ் வேரியண்ட் (Dash Variant)-இன் அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய கலர் ஆப்ஷனின் விலை என்ன? குரில்லா 450 பைக்கில் வேறு என்னென்ன அம்சங்கள் வழங்கப்படுகின்றன என்பதை குறித்து இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம், வாங்க.
இந்தியாவின் முன்னணி பைக் உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கும் ராயல் என்ஃபீல்டில் இருந்து அவ்வப்போது புது, புது பைக்குகள் சீரான இடைவெளியில் மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்ட வண்ணம் உள்ளன. அந்த வரிசையில், சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ராயல் என்ஃபீல்டு பைக்குகளுள் ஒன்றுதான், குரில்லா 450 ஆகும்.

ஹிமாலயன் 450 பைக்கில் பொருத்தப்படும் அதே 450சிசி என்ஜின் உடன் ராயல் என்ஃபீல்டு உருவாக்கும் மற்றொரு பைக் இதுவாகும். இந்த நிலையில், குரில்லா 450 பைக்கின் டேஷ் வேரியண்ட்டில் புதியதாக பீக்ஸ் வெண்கலம் என்கிற கலர் ஆப்ஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய கலர் ஆப்ஷன் கொண்டுவரப்பட்டுள்ள போதிலும், டேஷ் வேரியண்ட்டின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
அதாவது, குரில்லா 450 பைக்கின் டேஷ் வேரியண்ட்டின் வழக்கமான ரூ.2.49 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் புதிய பீக்ஸ் வெண்கல கலர் ஆப்ஷனும் கிடைக்கும். இந்த நிறத்தில் குரில்லா 450 பைக்கை முதன்முதலாக கடந்த 2024ஆம் ஆண்டில் கோவாவில் நடத்தப்பட்ட மோட்டோவெர்ஸ் கண்காட்சியில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் நிறுத்தியது.

இந்த பீக்ஸ் வெண்கல கலர் ஆப்ஷனை முதலில் குரில்லா 450 பைக்கின் விலை குறைவான அனலாக் வேரியண்ட்டில் மட்டும் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அறிமுகம் செய்தது. இந்த கலர் ஆப்ஷனுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து, அதனை டேஷ் வேரியண்ட்டிற்கும் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் நீட்டித்துள்ளது.
குரில்லா 450 பைக்கின் டிசைனை பற்றி பார்த்தோமேயானால், இது பெரிதும் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 பைக்கை தான் சார்ந்துள்ளது. முன்பக்கத்தில் வட்ட வடிவில் எல்இடி ஹெட்லைட்கள், ஹேண்டில்பாருக்கு மத்தியில் வட்ட வடிவில் திரை (அனலாக் வேரியண்ட்டில் கிடையாது), அதே வட்ட வடிவில் பின்புறத்தை காட்டும் ஹேண்டில்பார் கண்ணாடி, பின்பக்கத்தில் டர்ன் இண்டிகேட்டர்கள் உடன் எல்இடி டெயில்லைட்களை குரில்லா 450 கொண்டுள்ளது.

ஹிமாலயன் 450 ஆனது ஓர் அட்வென்ச்சர் ரக பைக் ஆகும். ஹிமாலயனுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதை பார்த்து ராயல் என்ஃபீல்டு உருவாக்கிய பைக் குரில்லா 450 ஆகும். ஆனால், ஹிமாலயன் அளவுக்கு குரில்லா வரவேற்பை பெறவில்லை என்பது அதன் விற்பனை எண்ணிக்கையை பார்த்தாலே தெரிகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் வெறும் 349 குரில்லா 450 பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ராயல் என்ஃபீல்டு குரில்லா 450 பைக்கின் விற்பனையை புதிய பீக்ஸ் வெண்கல கலர் ஆப்ஷன் உயர்த்துமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். உண்மையில் இந்த வெண்கல நிறத்தில் குரில்லா 450 பைக் சூப்பராக உள்ளது. இல்லாமலா... வாங்கும் குறைவான கஸ்டமர்களும் குறிப்பாக இந்த கலர் ஆப்ஷனை தேர்வு செய்வார்கள்?


Click it and Unblock the Notifications









