ராயல் என்ஃபீல்டு பைக் என்றாலே எடை அதிகமாக தான் இருக்கனும்னு யாருங்க சொன்னா? இந்த கலரில் பைக் இன்னும் சூப்பர்!
ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) நிறுவனத்தில் இருந்து கடந்த 2022ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டு சிறப்பாக விற்பனையாகி வரும் பைக், ஹண்டர் 350 (Hunter 350) ஆகும். 100 ஆண்டுகளுக்கும் மேலான ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் வரலாற்றில் புதுமையான பைக்காக ஹண்டர் 350 அறிமுகம் செய்யப்பட்டது.
முற்றிலும் புதிய ஜே-சீரிஸ் (J-Series) பிளாட்ஃபாரத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஹண்டர் 350 ஆனது மற்ற ராயல் என்ஃபீல்டு பைக்குகளை காட்டிலும் எடை குறைவானதாக, சைலன்சரின் 'டுப்... டுப்' சத்தம் குறைவானதாக, இன்றைய கால மாடர்ன் தோற்றத்தில் உருவாக்கப்பட்டு மார்க்கெட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இதனாலேயே, அறிமுகம் செய்யப்பட்ட உடனே குறிப்பாக இளம் தலைமுறையினரின் மத்தியில் ஹண்டர் 350 பைக்கிற்கு நல்ல வரவேற்பு கிடைக்க ஆரம்பித்தது.

இப்போதும் ஹண்டர் 350 பைக்கின் விற்பனை சிறப்பாக உள்ளது என்றாலும், இந்த பைக்கின் விற்பனையை மேலும் அதிகரிக்கும் விதமாக ராயல் என்ஃபீல்டு நிறுவனம் ஹண்டர் 350 பைக்கில் புதியதாக 'கிராபைட் கிரே' (Graphite Grey) என்கிற கலர் ஆப்ஷனை அறிமுகம் செய்துள்ளது. இதனால், இனி புதிய கிராபைட் கிரே நிறத்திலும் ஹண்டர் 350 பைக்கை வாங்கலாம்.
இந்த புதிய கிராபைட் கிரே பெயிண்ட் ஆனது ஹண்டர் 350 பைக்கில் மேட் (Matte) ஃபினிஷிங்கில் கிடைக்கும். அதாவது, இந்த பெயிண்ட்டில் பைக் பார்ப்பதற்கு பளபளப்பானதாக இருக்காது; மாறாக சொரசொரப்பான ஃபினிஷிங்கில் காட்சியளிக்கும். புதிய கிராபைட் கிரே பெயிண்ட்டில் பைக் முழுவதும் கிரே நிறத்தில்தான் காட்சியளிக்கிறது என்றாலும், பைக்கை சுற்றிலும் ஆங்காங்கே மஞ்சள் நிறத்தை பார்க்க முடிகிறது.

பைக்கில் இருந்து தனியாக தெரியும் வகையில் மஞ்சள் நிறத்தை, பைக்கின் பெட்ரோல் டேங்க் மற்றும் செண்டர் பாக்ஸில் இடம்பெற்று இருக்கும் 'ராயல் என்ஃபீல்டு' மற்றும் 'ஹண்டர் 350' லோகோக்களில் கொடுத்துள்ளனர். மேலும், பைக்கின் அலாய் சக்கரங்களின் ரிம்களிலும் மஞ்சள் நிறத்தை பார்க்க முடிகிறது.
இந்த புதிய கிரே நிறத்திலான ஹண்டர் 350 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆனது ரூ.1 லட்சத்து 76 ஆயிரத்து 750 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. விருப்பப்படுபவர்கள் ஹண்டர் 350 பைக்கை கிராபைட் கிரே நிறத்தில் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டீலர்ஷிப் ஷோரூம்களிலும் (Dealership Showrooms), ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்திலும் முன்பதிவு செய்யலாம்.
புதிய கிராபைட் கிரே நிறத்தை தவிர்த்து, ஹண்டர் 350 பைக்கின் தோற்றத்தில் வேறெந்த மாற்றமும் இல்லை. இதனால், ஹண்டர் 350 பைக்கில் மற்ற கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும் வட்ட வடிவிலான எல்இடி ஹெட்லைட்கள், டிரிப்பர் பேட், டைப்-சி யுஎஸ்பி மொபைல் போன் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்டவற்றை புதிய கிராபைட் கிரே கலர் ஆப்ஷனிலும் பெறலாம்.
இந்த 2025ஆம் ஆண்டு துவக்கத்தில் ஹண்டர் 350 பைக்கின் கிரவுண்ட் கிளியரென்ஸை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் 10மிமீ உயர்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. ஹண்டர் 350 பைக்கில் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் 349சிசி ஜே-சீரிஸ் என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 20.2 பிஎச்பி மற்றும் 27 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய கிராபைட் கிரே நிறத்திற்கு முன்னதாக டோக்கியோ பிளாக், லண்டன் ரெட், ரீபெல் நீலம் உள்பட 6 விதமான கலர் ஆப்ஷன்களில் கிடைத்து வந்தது. இவற்றுடன் புதிய கலர் ஆப்ஷன் சேர்க்கப்பட்டு இருப்பதால், இது நிச்சயமாக ஹண்டர் 350 பைக்கின் விற்பனையை அதிகரிக்கும். மேலும், புதிய கிராபைட் கிரே நிறத்தில் ஹண்டர் 350 பைக் பார்ப்பதற்கும் மிகவும் அழகாக உள்ளதை கூறியே ஆக வேண்டும்.


Click it and Unblock the Notifications








