இரண்டின் விலைகளும் 2 லட்ச ரூபாய்க்குள் வந்தாச்சு! மத்திய அரசின் ஜிஎஸ்டி குறைப்புக்கு தான் நன்றி சொல்லனும்!
சமீபத்திய ஜிஎஸ்டி திருத்தங்கள் ராயல் என்ஃபீல்டின் 350சிசி பைக்குகளுக்கு பெரும் பலனை அளித்துள்ளன. இவற்றின் என்ஜின் திறன் 349சிசி என்பதால், இவை ஜஸ்ட் மிஸ்ஸில் 'சப்-350சிசி' பைக்குகள் பிரிவில் வருகின்றன. இதேபோல், யெஸ்டி ரோட்ஸ்டரும் ஜிஎஸ்டி குறைப்பின் கீழ் விலை குறைப்பை பெறும் பைக்குகள் வரையறைக்குள் வருவதால், ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 மற்றும் யெஸ்டி ரோட்ஸ்டர் என இரு பைக்குகளின் விலைகளும் குறைந்துள்ளன. ஜிஎஸ்டி அமலுக்குப் பிறகு இவற்றின் விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை இங்கே விரிவாகக் காணலாம்.
ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350: தாழ்வான இந்த ராயல் என்ஃபீல்டு க்ரூஸர் ரக பைக் முன்பு ரூ.2.08 லட்சம் முதல் ரூ.2.33 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலைகளில் விற்கப்பட்டு வந்தது. ஜிஎஸ்டி 2.0 அமலுக்கு வந்த பிறகு, இதன் விலை ரூ.1.91 லட்சம் முதல் ரூ.2.14 லட்சம் வரை குறைந்துள்ளது. இதன் மூலம், வேரியண்டைப் பொறுத்து பைக்கின் விலை ரூ.19,000 வரை விலை குறைந்துள்ளது.

சமீபத்தில், மீட்டியோர் 350 பைக் பல அப்டேட்களைப் பெற்றது. இதில் எல்இடி ஹெட்லைட், ஸ்லிப்பர் கிளட்ச் மற்றும் புதிய கலர் ஆப்ஷன்கள் அடங்கும். டிரிப்பர் நேவிகேஷன் வசதி இப்போது அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகிறது. இந்த ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள், J-சீரிஸ் 349சிசி சிங்கிள்-சிலிண்டர் ஏர்-கூல்டு என்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இது 20.4hp சக்தியையும் 27Nm டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. இந்த என்ஜின் மென்மையான செயல்திறனையும், சீரான பயண அனுபவத்தையும் வழங்குகிறது.
யெஸ்டி ரோட்ஸ்டர்: 2025 யெஸ்டி ரோட்ஸ்டர், ரூ.2.10 லட்சம் விலையில் இந்த ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஜிஎஸ்டி திருத்தத்திற்குப் பிறகு, இதன் ஆரம்ப விலை ரூ.1.94 லட்சமாக குறைந்துள்ளது. இது ரூ.16,000 விலை குறைப்பைக் குறிக்கிறது. இந்த 2025ஆம் ஆண்டிற்கான அப்டேட்டில், யெஸ்டி ரோட்ஸ்டர் பைக்கில் பின்பக்க ஃபெண்டரின் அளவு குறைக்கப்பட்டது முக்கியமான அம்சமாக பார்க்கப்படுகிறது.

மேலும், ஸ்விங்-ஆர்மில் பொருத்தப்பட்ட நம்பர் பிளேட் மற்றும் மறுவடிவமைக்கப்பட்ட டெய்ல்-லேம்ப் & இண்டிகேட்டர்களையும் புதிய ரோட்ஸ்டர் பைக் அப்டேட்களாக பெற்றுள்ளது. இதன் மூலம் ரோட்ஸ்டர் மேலும் ஸ்போர்ட்டியான தோற்றத்திற்கு மாறியுள்ளது. இந்த பைக்கில், 334சிசி சிங்கிள்-சிலிண்டர் லிக்யுடு-கூல்டு ஆல்பா2 என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 29.1 எச்பி சக்தியையும், 29.6 என்.எம் பீக் டார்க்கையும் வெளியிடுகிறது.
ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 Vs யெஸ்டி ரோட்ஸ்டர்: ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 பைக்கின் ஆரம்ப விலை ரூ.1.91 லட்சம். இது யெஸ்டி ரோட்ஸ்டரின் ரூ.1.94 லட்சம் ஆரம்ப விலையை விட ரூ.4,000 குறைவு ஆகும். இருப்பினும், மீட்டியோர் 350 பைக்கின் எண்ட்ரீ-லெவல் வேரியண்டில் டியூப் டயர்கள் வழங்கப்படும் நிலையில், யெஸ்டி ரோட்ஸ்டரில் டியூப்லெஸ் டயர்கள் வழங்கப்படுவது கூடுதல் நடைமுறை அம்சமாகும்.

மீட்டியோர் 350இன் டாப் வேரியண்ட்கள், டியூப்லெஸ் டயர்கள் மற்றும் உயரமான டூரிங் விண்ட்ஸ்கிரீனுடன் வருகின்றன. இது நீண்ட தூர பயணிகளுக்கு ஏற்றது. யெஸ்டி ரோட்ஸ்டர் ஸ்டைல் மற்றும் டிசைனில் முன்னிலை வகித்தாலும், மீட்டியோர் 350 பைக்கின் நிரூபிக்கப்பட்ட நம்பகத்தன்மையும், ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் வலுவான சர்வீஸ் நெட்வொர்க்கும் நீண்ட காலத்திற்கு குறிப்பிடத்தக்க நன்மைகளை வழங்கக் கூடியவைகளாக உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 மற்றும் யெஸ்டி ரோட்ஸ்டர் பைக்குகள் இரண்டும் தோற்றத்திலும், விலைகளிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருப்பதினால்தான், ஜிஎஸ்டி திருத்தங்களுக்கு பிறகு அவற்றின் விலை எந்த அளவிற்கு மாறியுள்ளது என்பதை இந்த தொகுப்பில் பார்த்துள்ளோம். யெஸ்டி நீண்ட வருட இடைவெளிக்கு பின் சில வருடங்களுக்கு முன்னர் தான் மார்க்கெட்டில் ரீ-எண்ட்ரி கொடுத்தது. ஆனால், ராயல் என்ஃபீல்டு நிறுவனம் கடந்த பல வருடங்களில் பெரிய அளவில் சேல்ஸ் & சர்வீஸ் நெட்வொர்க்கை உருவாக்கி இருப்பது இந்த நிறுவனத்திற்கு கூடுதல் பலம் ஆகும்.


Click it and Unblock the Notifications









