வந்ததும் தெரியல, போனதும் தெரியல... ராயல் என்ஃபீல்டில் இப்படியொரு பைக் இருந்ததே பலருக்கு தெரியாது
ராயல் என்ஃபீல்டு (Royal Enfield), இந்தியாவின் முன்னணி பைக் நிறுவனங்களுள் ஒன்று. ஒவ்வொரு 3 மாதத்திற்கும் ஒரு புதிய பைக்கை அறிமுகம் செய்வது என்கிற கொள்கை உடன் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், சமீபத்தில் ஸ்க்ராம் 440 (Scram 440) என்கிற புதிய மோட்டார்சைக்கிளை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. புதியது ஒன்று வந்தால், பழையது ஒன்று வெளியேறுவது சகஜமே. அந்த வகையில், புதிய ஸ்க்ராம் 440 பைக்கின் அறிமுகத்தால், ஏற்கனவே விற்பனையில் இருந்த ராயல் என்ஃபீல்டு பைக் ஒன்றின் விற்பனை நிறுத்திக் கொள்ளப்பட்டுள்ளது. அதனை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தில் இருந்து கடந்த வருடங்களில் வெளிவந்த பல பைக்குகள் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன. அவற்றுள் ஒன்றாக, ராயல் என்ஃபீல்டு ஹிமாலயனை சொல்லலாம். சுமார் 100 ஆண்டுகால ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் முதல் அட்வென்ச்சர் (Adventure) ரக பைக்காக ஹிமாலயன் 411 அறிமுகம் செய்யப்பட்டது.

எதிர்பார்க்கப்பட்டதை போன்று, ஹிமாலயன் 411 பைக்கிற்கு ஏகோபித்த வரவேற்பு கிடைத்தது. அதன் மூலம் கிடைத்த நம்பிக்கையில்தான், ஸ்க்ராம் 411 பைக்கை ராயல் என்ஃபீல்டு அறிமுகம் செய்தது. ஹிமாலயன் 411 பைக்கிற்கும், ஸ்க்ராம் 411 பைக்கிற்கும் பெரியதாக வித்தியாசம் இல்லை. ஹிலாலயனின் சாதாரண ரோடு வெர்சன் பைக்காக ஸ்க்ராம் 411 அறிமுகம் செய்யப்பட்டது.
இரண்டிலும் ஒரே மாதிரியான 411சிசி என்ஜின் பொருத்தப்பட்டதால், ராயல் என்ஃபீல்டு நிருவனத்துக்கும் பெரியதாக உற்பத்தி செலவு இல்லை. ஆனால், ஒரு கட்டத்திற்கு மேல் ஹிமாலயனை அப்டேட் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ராயல் என்ஃபீல்டு உள்ளானது. அதன்படி அறிமுகம் செய்யப்பட்ட புதிய ஹிமாலயன் பைக்கில் 450சிசி என்ஜினை ராயல் என்ஃபீல்டு பொருத்தியது.

இதேபோல், ஸ்க்ராம் 450 பைக்கை ராயல் என்ஃபீல்டு அறிமுகம் செய்யும் என உங்களை போல் நாங்களும் எதிர்பார்த்தோம். ஆனால், பெரிய ட்விஸ்ட்டாக புதிய ஸ்க்ராம் 440 பைக்கை மிக சமீபத்தில்தான் ராயல் என்ஃபீல்டு அறிமுகம் செய்தது. ரூ.2.08 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஸ்க்ராம் 440 பைக்கில் 443சிசி என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. அதுவே, ஹிமாலயன் 450 பைக்கில் 452சிசி என்ஜின் பொருத்தப்படுகிறது.
ஆனால் எப்படியோ புதிய ஸ்க்ராம் பைக் விற்பனைக்கு வந்துவிட்டதால், பழைய ஸ்க்ராம் 411 பைக்கின் விற்பனையை ராயல் என்ஃபீல்டு நிறுத்திக் கொண்டுள்ளது. சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் இருந்து ஸ்க்ராம் 411 பைக்கின் பெயர் நீக்கப்பட்டுள்ளது.

விற்பனையில் இருந்த சமயத்தில் ஸ்க்ராம் 411 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை கடைசியாக ரூ.2.06 லட்சமாக இருந்தது. ஸ்க்ராம் 411 பைக்கில் பொருத்தப்பட்ட 411சிசி என்ஜின் அதிகப்பட்சமாக 6,500 ஆர்பிஎம்-இல் 24.3 பிஎச்பி மற்றும் 4250 ஆர்பிஎம்-இல் 32 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியதாக இருந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹிமாலயனின் அதீத வரவேற்பினால் ஸ்க்ராம் பெரியதாக கண்டுக் கொள்ளப்படாமல் போனது என்பது உண்மை. ராயல் என்ஃபீல்டு நிறுவனத்திற்கும் இது தெரியும். இருப்பினும், புதிய ஸ்க்ராம் 440 பைக்கை அறிமுகம் செய்துள்ளது. பழைய ஸ்க்ராம் 411 பைக்கின் பெயர் ராயல் என்ஃபீல்டின் வெப்சைட்டில் இருந்து நீக்கப்பட்டு இருப்பினும், இன்னும் சில வாரங்களுக்கு சில ஷோரூம்களில் ஸ்டாக்கில் உள்ளவரை இந்த பைக் விற்பனைக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications









