ஹோண்டா ஆக்டிவாவிற்கு டஃப் குடுக்கும் சுஸூகி! இவ்ளோ கம்மியான விலையில் 125 சிசி ஸ்கூட்டரா!
இந்தியாவின் ஸ்கூட்டர் செக்மெண்ட்டில், 2 தயாரிப்புகள் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி கொண்டுள்ளன. அவை ஹோண்டா ஆக்டிவா (Honda Activa) மற்றும் டிவிஎஸ் ஜூபிடர் (TVS Jupiter) ஆகியவை ஆகும். இந்த 2 ஸ்கூட்டர்களுக்கும் விற்பனையில் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி கொண்டுள்ள மற்றொரு ஸ்கூட்டர்தான் சுஸுகி ஆக்ஸஸ் (Suzuki Access).
இந்தியாவில் அதிகம் விற்பனையாகி வரும் ஸ்கூட்டர்களில் ஒன்றாக இருக்கும் சுஸுகி ஆக்ஸஸின் நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), காடிவாடி தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால், சுஸுகி நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம், 72,238 ஆக்ஸஸ் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது.

ஆனால் கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த எண்ணிக்கை வெறும் 53,715 ஆக மட்டுமே இருந்தது. அதாவது கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், 18,523 சுஸுகி ஆக்ஸஸ் ஸ்கூட்டர்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இதன் மூலம் சுஸுகி ஆக்ஸஸ் ஸ்கூட்டர், விற்பனையில் 34.48 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது. அத்துடன் நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம், இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 ஸ்கூட்டர்களின் பட்டியலில் (Top 10 Scooters September 2025), சுஸுகி ஆக்ஸஸ் 3வது இடத்தை பிடித்துள்ளது.

இந்த பட்டியலில் முதல் 2 இடங்களில் முறையே ஹோண்டா ஆக்டிவா மற்றும் டிவிஎஸ் ஜூபிடர் ஆகியவை உள்ளன. இந்த வரிசையில் 3வது இடம் பிடித்துள்ள சுஸுகி ஆக்ஸஸ், ஒரு 125 சிசி ஸ்கூட்டர் ஆகும். இதில், 125 சிசி எஸ்ஓஹெச்சி 2 வால்வு 4 ஸ்ட்ரோக் சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த இன்ஜின் அதிகபட்சமாக 6,500 ஆர்பிஎம்மில் 6.2 kW பவரையும், 5,000 ஆர்பிஎம்மில் 10.2 Nm டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் சிவிடி கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் கிக் ஸ்டார்ட் மற்றும் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் வசதிகள் உள்ளன.
சுஸுகி ஆக்ஸஸ் ஸ்கூட்டரின் நீளம் 1,835 மிமீ ஆகும். அதே நேரத்தில் இதன் இருக்கை உயரம் 856 மிமீ ஆகவும், க்ரவுண்ட் க்ளியரன்ஸ் 160 மிமீ ஆகவும் உள்ளது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் சுஸுகி ஆக்ஸஸ் ஸ்கூட்டரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 81,172 ரூபாயாக மட்டுமே உள்ளது.
அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 97,765 ரூபாயாக இருக்கிறது. இவை சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை (Chennai Ex showroom) ஆகும். இந்த விலைக்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக கருதப்படுவதால்தான், சுஸுகி ஆக்ஸஸ் ஸ்கூட்டரின் விற்பனை மிகவும் சிறப்பாக உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் ஹோண்டா ஆக்டிவா மற்றும் டிவிஎஸ் ஜூபிடர் ஆகிய 2 ஸ்கூட்டர்களுக்கும், சுஸுகி ஆக்ஸஸ் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன். சுஸுகி நிறுவனம் கூடிய விரைவில் ஆக்ஸஸ் ஸ்கூட்டரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இதன் வருகைக்கு பின்னர், சுஸுகி ஆக்ஸஸ் ஸ்கூட்டரின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை மேலும் உயரலாம் என நாங்கள் கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications








