ஜிஎஸ்டி குறைக்கப்பட்டது இந்த கம்பெனிக்கு பெரிய சாதகமாக அமைஞ்சிடுச்சு! வெளிநாட்டுக்கு பறக்கும் சுஸுகி 2-வீலர்ஸ்
சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்தியா (Suzuki Motorcycle India) நிறுவனம் கடந்த 2025 அக்டோபர் மாத விற்பனை விவரங்களை வெளியிட்டுள்ளது. அவற்றின்படி பார்க்கும்போது, கடந்த மாதத்தில் சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் வெளிநாட்டு ஏற்றுமதிகள் விற்பனை வளர்ச்சிக்கு முக்கிய உந்துசக்தியாக இருந்துள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்தியா பிரைவேட் லிமிடெட் (SMIPL) கடந்த அக்டோபர் மாதத்தில் மொத்தம் 1 லட்சத்து 29 ஆயிரத்து 261 இருசக்கர வாகனங்களை விற்பனை செய்து, தனது வரலாற்றிலேயே ஒரு மாதத்தில் மிக அதிகமான விற்பனையைப் பதிவு செய்துள்ளது. இது சுஸுகி நிறுவனத்தின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விற்பனையை உள்ளடக்கியது ஆகும்.

அதுவே, கடந்த 2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் விற்கப்பட்ட 1 லட்சத்து 20 ஆயிரத்து 55 சுஸுகி இருசக்கர வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது 7.67% வளர்ச்சியை குறிக்கிறது. அதேசமயம், 2025 செப்டம்பரில் விற்கப்பட்ட 1 லட்சத்து 23 ஆயிரத்து 550 சுஸுகி இருசக்கர வாகனங்களுடன் ஒப்பிடுகையிலும் விற்பனை 4.62% அதிகரித்துள்ளது.
ஏற்கனவே கூறியதுபோல், சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி குறிப்பாக ஏற்றுமதி பிரிவில் காணப்பட்டது. அதே நேரத்தில் உள்நாட்டு தேவை சற்று மந்தமாக இருந்தது. கடந்த மாதம் சுஸுகியின் உள்நாட்டு விற்பனை 1 லட்சத்து 3 ஆயிரத்து 454 இருசக்கர வாகனங்களாக இருந்தது. இது 2024 அக்டோபரில் இந்தியாவில் விற்கப்பட்ட 1 லட்சத்து 4 ஆயிரத்து 940 சுஸுகி இருசக்கர வாகனங்களுடன் ஒப்பிடுகையில் 1.42% சரிவை காட்டுகிறது.

அதேபோல், 2025 செப்டம்பரில் விற்கப்பட்ட 1 லட்சத்து 5 ஆயிரத்து 886 சுஸுகி இருசக்கர வாகனங்கள் உடன் ஒப்பிடுகையிலும் 2.30% சரிவை சந்தித்துள்ளது. சுஸுகி மோட்டார்சைக்கிளின் மொத்த விற்பனையில் உள்நாட்டு விற்பனையின் பங்கு 80.03% ஆகவும், ஏற்றுமதியின் பங்கு 19.97% ஆகவும் உள்ளது. கடந்த மாதம் சுஸுகி 2-வீலர்ஸின் ஏற்றுமதி 70.74% உயர்ந்து 25 ஆயிரத்து 807 யூனிட்களாக இருந்தது.
இது முந்தைய 2024ஆம் ஆண்டு இதே அக்டோபர் மாதத்தில் ஏற்றுமதி செய்யப்பட்ட 15 ஆயிரத்து 115 சுஸுகி 2-வீலர்களின் எண்ணிக்கையை விட 10 ஆயிரத்து 692 யூனிட்கள் அதிகமாகும். உலகளாவிய சந்தைகளில் மேட்-இன்-இந்தியா சுஸுகி 2-வீலர்களுக்கு தேவை தொடர்ந்து அதிகமாக இருந்து வருவதால், 2025 செப்டம்பரில் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட 17 ஆயிரத்து 664 சுஸுகி 2-வீலர்களுடன் ஒப்பிடுகையில், கடந்த அக்டோபர் மாதத்தில் ஏற்றுமதி செய்யப்பட்டவை 46.10% அதிகம் ஆகும்.

கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டுமின்றி, 2025 ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலப்பகுதியிலும் SMIPL-ன் உள்நாட்டு விற்பனை மற்றும் வெளிநாட்டு ஏற்றுமதி கணிசமாக மேம்பட்டுள்ளது. இந்தக் காலக்கட்டத்தில் சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் மொத்தம் 8 லட்சத்து 17 ஆயிரத்து 435 இருசக்கர வாகனங்களை உலகளவில் விற்பனை செய்துள்ளது.
இது முந்தைய ஆண்டு இதே காலகட்டத்தில் விற்கப்பட்ட 7 லட்சத்து 40 ஆயிரம் இருசக்கர வாகனங்களை விட 10.46% அதிகமாகும். இதன்படி பார்க்கும்போது, கடந்த 7 மாதங்களில் சுமார் 77 ஆயிரத்து 435 இருசக்கர வாகனங்களை சுஸுகி மோட்டார்சைக்கிள் கூடுதலாக விற்பனை செய்துள்ளது. சுஸுகியின் உள்நாட்டு விற்பனை இந்த 7 மாத காலகட்டத்தில் 6 லட்சத்து 73 ஆயிரத்து 926 இருசக்கர வாகனங்கள் விற்பனை உடன் சாதகமான நிலையில் முடிந்தது.

Suzuki 2W Sales (Oct-25 vs Oct-24 YoY)
| Oct-25 | Oct-24 | Diff | Growth % YoY | % Share Oct 25 | |
|---|---|---|---|---|---|
| Domestic | 1,03,454 | 1,04,940 | -1,486 | -1.42 | 80.03 |
| Exports | 25,807 | 15,115 | 10,692 | 70.74 | 19.97 |
| Total | 1,29,261 | 1,20,055 | 9,206 | 7.67 | 100.00 |
Suzuki 2W Sales (Oct-25 vs Sep-25 MoM)
| Oct-25 | Sep-25 | Diff | Growth % MoM | % Share Aug 25 | |
|---|---|---|---|---|---|
| Domestic | 1,03,454 | 1,05,886 | -2,432 | -2.30 | 85.70 |
| Exports | 25,807 | 17,664 | 8,143 | 46.10 | 14.30 |
| Total | 1,29,261 | 1,23,550 | 5,711 | 4.62 | 100.00 |
Suzuki 2W Sales (FY 26 YTD vs FY 25 YTD YoY)
| FY 26 YTD | FY 25 YTD | Diff | Growth % YoY | % Share FY 26 | |
|---|---|---|---|---|---|
| Domestic | 6,73,926 | 6,21,470 | 52,456 | 8.44 | 82.44 |
| Exports | 1,43,509 | 1,18,530 | 24,979 | 21.07 | 17.56 |
| Total | 8,17,435 | 7,40,000 | 77,435 | 10.46 | 100.00 |
டிரைவ்ஸ்பார்க் கருத்து: 2025 அக்டோபர் மாதம் சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது. இது சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் தயாரிப்புகள் மீது வாடிக்கையாளர்கள் வைத்துள்ள நம்பிக்கையின் நேரடி பிரதிபலிப்பாகும். மேலும், சுஸுகியின் இந்த சிறப்பான விற்பனைக்கு பண்டிகை காலம், புதிய ஜிஎஸ்டி (GST) சீர்திருத்தங்கள் மற்றும் உலக சந்தைகளில் நிலவும் வலுவான தேவை ஆகியவையும் காரணமாகும்.


Click it and Unblock the Notifications









