பைக்கை வாங்கினால் இன்ஸ்சூரன்ஸ் இலவசம்... 18 ஆயிர ரூபா விலையும் குறைச்சாச்சு! சுஸுகியின் புதிய பைக்
இந்தியாவில் சுஸுகி மோட்டார்சைக்கிள் (Suzuki Motorcycle) நிறுவனம், அதன் புதுப்பிக்கப்பட்ட வி-ஸ்ட்ரோம் எஸ்.எக்ஸ் 250 (V-Strom SX 250) பைக்கை பண்டிகை காலத்தை முன்னிட்டு அறிமுகம் செய்துள்ளது. இந்த சாகச பைக்கின் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ரூ.1,98,018 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய கலர் ஆப்ஷன்களுடனும், கவர்ச்சிகரமான வாடிக்கையாளர் சலுகைகளுடனும் இது அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
பைக்கின் இயந்திர பாகங்களில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், புதுப்பிக்கப்பட்ட சுஸுகி வி-ஸ்ட்ரோம் எஸ்.எக்ஸ் 250 பைக் இப்போது நான்கு கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதில், பளபளப்பான ஸ்பார்கிள் கருப்பு உடன் சாம்பியன் மஞ்சள் நம்பர்.2 (Champion Yellow No.2 with Glass Sparkle Black) மற்றும் பளபளப்பான ஸ்பார்கிள் கருப்பு (Glass Sparkle Black) என்கிற இரண்டு கலர் ஆப்ஷன்கள் வி-ஸ்ட்ரோம் எஸ்.எக்ஸ் 250 பைக்கிற்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வருபனவற்றின் புதுப்பிக்கப்பட்ட பதிப்புகள் ஆகும்.

இருப்பினும், இவை புதிய கிராபிக்ஸ்களுடன் வந்துள்ளன. மெட்டாலிக் மேட் ஸ்டெல்லர் நீலம் உடன் பேர்ல் கிளாசியர் வெள்ளை (Pearl Glacier White with Metallic Matte Stellar Blue) மற்றும் பளபளப்பான ஸ்பார்கிள் கருப்பு உடன் பேர்ல் ஃபிரஷ் நீலம் (Pearl Fresh Blue with Glass Sparkle Black) என்கிற மற்ற இரண்டும் முற்றிலும் புதிய கலர் ஆப்ஷன்கள் ஆகும்.
இவை ஸ்டைல் மற்றும் நடைமுறை பயன்பாட்டை கருத்தில் கொண்டு, பைக்கின் பிரிமியம் உணர்வை மேம்படுத்துகின்றன. புதிய 2025 வி-ஸ்ட்ரோம் எஸ்.எக்ஸ் 250 பைக்கில் அதே 249cc, ஆயில்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 9,300 ஆர்பிஎம்-இல் 26.5பிஎஸ் ஆற்றலையும், 7,300 ஆர்பிஎம்-இல் 22.2என்.எம் டார்க்கையும் உற்பத்தி செய்கிறது.

இந்த என்ஜின் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் தொடர்ந்து வழங்கப்படுகிறது. இதேபோல், புதுப்பிக்கப்பட்ட வி-ஸ்ட்ரோம் எஸ்.எக்ஸ் 250 பைக்கின் சஸ்பென்ஷன் (Suspension) அமைப்பிலும் எந்த மாற்றமும் இல்லை. முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷனும் தொடர்கின்றன. முன் சக்கரம் 19-இன்ச் அலாய் சக்கரங்கள் ஆகவும், பின் சக்கரம் 17-இன்ச் அலாய் சக்கரங்கள் ஆகவும் உள்ளன.
பிரேக்கிங் அமைப்பு அதே பழைய அமைப்பாகும். இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், டூயல்-சேனல் ஏபிஎஸ் அம்சம் ஸ்டாண்டர்டாக தொடர்கிறது. நீண்ட தூர பயணங்கள் மற்றும் சாகச பயன்பாடுகளை கருத்தில் கொண்டு, இந்த பாதுகாப்பு அம்சம் முக்கியமானதாகும்.

பண்டிகை கால சலுகையாக, சுஸுகி நிறுவனம் ரூ.5,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.8,000 மதிப்புள்ள இன்ஸ்சூரன்ஸ் (Insurance) சலுகைகளை வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் ரூ.1,709 செலுத்தி நீட்டிக்கப்பட்ட வாரண்டி தொகுப்பையும் தேர்வு செய்யலாம். இது வி-ஸ்ட்ரோம் எஸ்.எக்ஸ் 250 பைக்கை வாங்குபவர்களுக்கு கூடுதல் பலன்களை அளிக்கிறது.
கூடுதலாக, சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் 100% கடன் நிதி வசதியை வழங்குகிறது. இதற்காக எந்த ஒரு பிணையமும் (hypothecation) தேவையில்லை. அண்மையில் வி-ஸ்ட்ரோம் எஸ்.எக்ஸ் 250 பைக்கிற்கு வழங்கப்பட்ட ஜிஎஸ்டி (GST) 2.0 விலை குறைப்பு (ரூ.17,982) மற்றும் இந்த சலுகைகள், வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சுஸுகியின் விலை குறைவான அட்வென்ச்சர் (Adventure) ரக பைக்காக வி-ஸ்ட்ரோம் எஸ்.எக்ஸ் 250 விளங்குகிறது. இருப்பினும், இந்த பைக்கை பெரியதாக யாரும் வாங்குவது இல்லை என்பது இதன் விற்பனை எண்ணிக்கைகளை பார்த்தாலே தெரிகிறது. தற்போது, வி-ஸ்ட்ரோம் எஸ்.எக்ஸ் 250 அப்கிரேட் செய்யப்பட்டு உள்ளதால், இதன் பின்பாவது இந்த பைக்கின் விற்பனை அதிகரிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications









