3 வருஷம் கழிச்சு பிரச்சனையை கண்டுப்பிடிச்சு இருக்காங்க... சுஸுகியின் இந்த பைக்கை எத்தனை பேர் வாங்கி இருக்கீங்க
சுஸுகி மோட்டார்சைக்கிள் (Suzuki Motorcycle) நிறுவனம் இந்தியாவில் அதன் குறிப்பிட்ட சில மோட்டார்சைக்கிள்களை பழுதை காரணம் காட்டி திரும்ப அழைத்துள்ளது. அதாவது, குறிப்பிட்ட காலத்தில் உற்பத்தி செய்யப்பட்ட பைக்குகளில் பழுதுகளை கண்டறிந்ததை அடுத்து, அதனை சரிச்செய்து கொடுக்கும் விதமாக அவற்றை மீண்டும் ஷோரூம்களுக்கே சுஸுகி மோடார்சைக்கிள் நிறுவனம் திரும்ப அழைக்கிறது.
சுஸுகி நிறுவனத்தில் இருந்து தற்போது திரும்ப அழைக்கப்பட்டு இருக்கும் அந்த பைக்குகள் வேறு ஒன்றும் இல்லை, ஜிக்ஸெர் 250 (Gixxer 250) பைக்குகள் ஆகும். இந்திய இளைஞர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெறாத பைக்குகளுள் சுஸுகி ஜிக்ஸெர் ஒன்று என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில், அந்த அளவிற்கு மிகவும் குறைவான எண்ணிக்கையிலான சுஸுகி ஜிக்ஸெர் பைக்குகள் தான் இந்தியாவில் விற்பனையாகுகின்றன.

அத்தகைய சுஸுகி ஜிக்ஸெர் பைக்குகளில் ஜிக்ஸெர் 250 பைக்குகள் அவற்றில் கண்டறியப்பட்ட பழுது ஒன்றின் காரணமாக திரும்ப அழைக்கப்பட்டு உள்ளன. ஜிக்ஸெர் 250 மற்றும் ஜிக்ஸெர் எஸ்.எஃப் 250எஸ் (SF 250S) பைக்குகளில் பின்பக்க பிரேக் செட்-அப் (Brake Set-up)-இல் பிரச்சனை இருப்பதை கண்டறிந்ததை அடுத்து இந்த திரும்ப அழைக்கும் நடவடிக்கையில் சுஸுகி இறங்கி உள்ளது.
இதுவரையில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட அனைத்து சுஸுகி ஜிக்ஸெர் 250 பைக்குகளும் திரும்ப அழைக்கப்படவில்லை. நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, மொத்தம் 5 ஆயிரத்து 145 சுஸுகி ஜிக்ஸெர் 250 பைக்குகள் திரும்ப அழைக்கப்படுகின்றன. இவை கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்து 2025 ஜூன் மாதம் வரையில் உற்பத்தி செய்யப்பட்டவை ஆகும்.

சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தில் இருந்து வெளியிடப்பட்டு உள்ள இந்த விபரங்களின்படி பார்க்கும்போது, ஜிக்ஸெர் 250 பைக்குகளின் பிரேக் அமைப்பில் பிரச்சனை இருப்பதை கடந்த ஜூலை மாதமே சுஸுகி கண்டறிந்து இருக்கக் கூடும். எந்தவொரு ஆட்டோமொபைல் நிறுவனமும் விற்கப்பட்ட வாகனங்களை திரும்ப அழைக்க விரும்பாது என்பதால், ஜிக்ஸெர் 250 பைக்குகளில் ஏற்பட்ட பிரச்சனையை வேறு விதமாக சரிச்செய்ய சுஸுகி முயற்சித்து இருக்கக் கூடும்.
அந்த முயற்சிகள் யாவும் பலனளிக்காததால் வேறு வழியில்லாமல் இந்த திரும்ப அழைக்கும் முடிவை சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் கையில் எடுத்திருக்கலாம். அப்படி என்ன மாதிரியான பிரேக் செட்-அப் பிரச்சனை ஜிக்ஸெர் 250 பைக்குகளில் கண்டறியப்பட்டு உள்ளது என்றால், பைக்குகளில் பின்பக்க பிரேக் பேட்களுக்கும், பிரேக் டிஸ்க்கிற்கும் இடையே சரியான இணைப்பு இல்லாததை சுஸுகி அடையாளம் கண்டுள்ளது.

இதற்கு காரணம், சுஸுகி வி-ஸ்ட்ரோம் 250 (V-Storm 250) என்கிற அட்வென்ச்சர் (Adventure) ரக பைக்கின் பின்பக்க பிரேக் காலிபர் சிஸ்டம் அப்படியே ஜிக்ஸெர் 250 பைக்குகளில் வழங்கப்பட்டது தான் என கூறப்படுகிறது. வி-ஸ்ட்ரோம் 250 ஆனது சுஸுகி நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட அட்வென்ச்சர் ரக பைக் ஆகும்.
இதனால், அதில் வழங்கப்பட்ட பின்பக்க பிரேக் சிஸ்டத்தை ஜிக்ஸெர் 250 பைக்குகளிலும் வழங்கி உற்பத்தி செலவை குறைக்க சுஸுகி முயற்சித்துள்ளது. ஆனால், ஜிக்ஸெர் 250 பைக்குகளில் பிரேக் பேட்களும், பிரேக் டிஸ்க்கும் சரிவர பொருந்தவில்லை. இப்படியே உபயோகிப்பதால், பிரேக் பேட்கள் விரைவில் தேய்மானம் அடைகின்றன. இதனை இலவசமாக சர்வீஸ் செண்டரில் சரிச்செய்து கொடுப்பதற்காகவே 5,145 ஜிக்ஸெர் 250 பைக்குகள் திரும்ப அழைக்கப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தேய்மானம் அடைந்த பிரேக் பேட்களை கொண்ட பிரேக் சிஸ்டத்தை பயன்படுத்துவது விபத்தை ஏற்படுத்தக்கூடும். இதனாலேயே சம்பந்தப்பட்ட ஜிக்ஸெர் பைக்குகளின் உரிமையாளர்களை பைக் உடன் அழைத்து பழுதை சரிச்செய்து கொடுக்கும் பணியில் சுஸுகி இறங்கியுள்ளது. சம்பந்தப்பட்ட கஸ்டமர்களை தொடர்புக் கொள்ளும் நடவடிக்கைகளில் சுஸுகி நிறுவனம் ஏற்கனவே இறங்கிவிட்டதால், மேற்கூறப்பட்ட காலத்தில் உற்பத்தி செய்யப்பட்ட ஜிக்ஸெர் 250 பைக்கை வாங்கியவர்கள் அருகில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட சுஸுகி டீலர்ஷிப் ஷோரூமை அணுகவும்.


Click it and Unblock the Notifications









