ஜிஎஸ்டிக்கு அப்புறமும் பைக் விலையை உயர்த்தாத போதே சந்தேகம் வந்துச்சு! இன்னும் 4 நாட்கள் தான் இருக்கு!
120 ஆண்டுகளுக்கும் மேலான மோட்டார்சைக்கிள் பாரம்பரியத்தை கொண்ட டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் (Triumph Motorcycles) நிறுவனம், தனது அனைத்து ரக பைக்குகளின் தற்போதைய எக்ஸ்-ஷோரூம் விலைகள் டிசம்பர் 31, 2025 வரை மட்டுமே செல்லுபடியாகும் என்றும், 2026 ஜனவரி 1 முதல் அனைத்து டிரையம்ப் பைக்குகளுக்கும் விலை உயர்வு அமலுக்கு வருவதாகவும் அறிவித்துள்ளது.
ஜிஎஸ்டி (GST)-இல் சமீபத்திய திருத்தப்படி 350சிசி-க்கு மேற்பட்ட மோட்டார்சைக்கிள்களுக்கான வரி அதிகரிக்கப்பட்ட போதிலும், டிரையம்ப் நிறுவனம் விலையை உயர்த்தவில்லை. மாறாக, வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் செலவு ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், 'ஸ்பெஷல் விழாக்கால ஆச்சிரிய பரிசு' என்கிற பெயரில் சலுகையை ஸ்பீடு 400 (Speed 400) மற்றும் ஸ்பீடு டி4 (Speed T4) பைக்குகளுக்கு வழங்கியது.

இருப்பினும், தற்போது வருடா வருடம் அதிகரித்துவரும் வாகன உற்பத்தி செலவையும், போக்குவரத்து செலவுகளையும் கருத்தில் கொண்டு 2026 ஜன.1 முதல் விலைகளை அதிகரிப்பதாக அறிவித்துள்ளது. இந்த விலை திருத்தம் குறித்து பஜாஜ் ஆட்டோ லிமிடெட் நிறுவனத்தின் புரோபைக்கிங் பிரிவின் தலைவர் மானிக் நாங்கியா கூறுகையில், "எங்களது டீலர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு உயர்தர தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குவதில் நிறுவனம் உறுதியாக உள்ளது.
டிரையம்ப் மோட்டார்சைக்கிள் வாங்க திட்டமிட்டுள்ள வாடிக்கையாளர்கள், இந்த 2025 டிசம்பர் இறுதிக்குள் தங்களது வாங்குதலை முடிப்பதன் மூலம் தற்போதைய விலைகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்" என்று அவர் தெரிவித்தார். பிரிட்டிஷை சேர்ந்த டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ், 1902இல் தொடங்கப்பட்டது. 120 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட இந்த நிறுவனம் இங்கிலாந்தின் மிகப்பெரிய மோட்டார்சைக்கிள் உற்பத்தியாளராக தொடர்ந்து திகழ்கிறது.

லீசெஸ்டர்ஷயரில் உள்ள ஹின்க்லியை தலைமையிடமாகக் கொண்டு, இங்கிலாந்து, தாய்லாந்து, பிரேசில் மற்றும் இந்தியாவில் உற்பத்தி தொழிற்சாலைகளைக் கொண்ட டிரையம்ப், தனது மாடர்ன் கிளாசிக்ஸ் (Classics), ரோட்ஸ்டர்ஸ் (Roadsters) மற்றும் அட்வென்ச்சர் (Adventure) ரக பைக்குகளில் தனித்துவமான வடிவமைப்பு, சிறப்பம்சங்கள் மற்றும் செயல்திறனை வழங்குகிறது.
உலகளவில் பிரபலமான விலையுயர்ந்த போனிவில்லி (Bonneville) முதல் ஸ்ட்ரீட் (Street) மற்றும் ஸ்பீட் ட்ரிப்பிள்ஸ் (Speed Triples), டைகர் (Tiger) ரக பைக்குகள் மற்றும் எளிதில் அணுகக்கூடிய புதிய 400சிசி ஸ்க்ராம்ப்ளர் 400 & ஸ்பீடு 400 பைக்குகள் வரை விரிவான பைக் மாடல்களை இந்தியாவில் டிரையம்ப் கொண்டுள்ளது.

2023இல் பஜாஜ் ஆட்டோவுடன் இணைந்து இந்திய சந்தையில் புதிய 400சிசி ரக பைக்குகள் மூலம் நடுத்தர திறன் கொண்ட மோட்டார்சைக்கிள் பிரிவில் வலுவான இடத்தைப் பிடித்து, பெரும் வரவேற்பை டிரையம்ப் பெற்று வருகிறது. பஜாஜ் ஆட்டோவுடன் இணைந்து, டிரையம்ப் தற்போது இந்தியா முழுவதும் அதன் நெட்வொர்க்கை விரிவுப்படுத்துவதிலும், துடிப்பான ஓட்டுநர் குழுக்களை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தி வருகிறது.
பந்தயங்களில் டிரையம்ப்பின் பாரம்பரியமும் உலக அளவில் போற்றப்படுகிறது. மோட்டோ2TM உலக சாம்பியன்ஷிப்பிற்கு எக்ஸ்க்ளூசிவ் என்ஜின் சப்ளையராக பணியாற்றியது, அண்மையில் உலகளாவிய மோட்டோகிராஸ் (Motocross) மற்றும் சூப்பர் மோட்டோகிராஸ் போட்டிகளில் புதிய அறிமுகங்கள் வரை டிரையம்ப்பின் பங்களிப்புகள் குறிப்பிடத்தக்கவை. 2023ஆம் ஆண்டில், டிரையம்ப் நிறுவனம், 24 மணி நேரத்தில் மோட்டார்சைக்கிளில் அதிக தூரம் பயணித்ததற்கான கின்னஸ் உலக சாதனைப் பட்டத்தையும் வென்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பஜாஜ் ஆட்டோ உடன் இந்தியாவில் தனது நெட்வொர்க்கை தொடர்ந்து விரிவுப்படுத்தி வரும் டிரையம்ப், ஜிஎஸ்டி திருத்தத்திற்கு பின்பும் பைக்குகளின் விலைகளை அதிகரிக்காததது ஆச்சிரியத்தை ஏற்படுத்தியது. ஆனால் அதற்கு எல்லாம் சேர்த்து வைத்து ஜனவரி 1 முதல் பைக்குகளில் விலை அதிகரிப்பை டிரையம்ப் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், டிரையம்ப் தனது பைக்குகளில் எந்த அளவிற்கு விலை அதிகரிப்பை கொண்டுவர போகிறது என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை.


Click it and Unblock the Notifications









