பல்சர் 220எஃப் பைக் வாடை அடிக்குது... டிரையம்ப் பைக்கை கம்மியான விலையில் வாங்க நேரம் வந்தாச்சு!
டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் (Triumph Motorcycles), பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த உலகளவில் பிரபலமான மோட்டார்சைக்கிள் உற்பத்தி நிறுவனம். இந்தியாவில் கடந்த பல வருடங்களாகவே செயல்பட்டு வந்தாலும், கடந்த 2023ஆம் ஆண்டில் இருந்து டிரையம்ப்பின் செயல்பாடுகளே மாறிவிட்டது. குறிப்பாக, விலை குறைவான பைக்குகளை அறிமுகம் செய்வதில் டிரையம்ப் தீவிரமாக உள்ளது.
அந்த வகையில், கடந்த 2 வருடங்களில் மட்டும் ஸ்பீடு டி4 (Speed T4), ஸ்பீடு 400 (Speed 400), ஸ்க்ராம்ப்ளர் 400எக்ஸ் (Scrambler 400X) மற்றும் ஸ்க்ராம்ப்ளர் 400எக்ஸ்சி (Scrambler 400XC) என நான்கு 400சிசி பைக்குகளை டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது.

அந்த வரிசையில் தற்போது த்ரக்ஸ்டன் 400 (Thruxton 400) என்கிற புதிய 400சிசி மோட்டார்சைக்கிளை டிரையம்ப் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ரூ.2 லட்சத்து 74 ஆயிரத்து 137 என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் (Ex-showroom Prices) அறிமுகம் செய்யப்பட்டுள்ள த்ரக்ஸ்டன் 400 ஆனது டிரையம்ப்பின் 5வது 400சிசி பைக் ஆகும்.
ஏற்கனவே விற்பனையில் இருக்கும் ஸ்க்ராம்ப்ளர் எக்ஸ் மற்றும் ஸ்க்ராம்ப்ளர் எக்ஸ்சி பைக்குகளுக்கு மத்தியில் புதிய த்ரக்ஸ்டன் 400 பைக் நிலைநிறுத்தப்பட்டு உள்ளது. தோற்றத்தை பொறுத்தவரையில், த்ரக்ஸ்டன் 400 ஆனது பிரிட்டிஷ்-ஸ்டைல் கேஃப் ரேசர் (Cafe Racer) பைக் ஆகும். கேஃப் ரேசர் ஆனது வித்தியாசமான தோற்றம் கொண்டது ஆகும்; இதனாலேயே மற்ற 400சிசி டிரையம்ப் பைக்குகளில் இருந்து புதிய த்ரக்ஸ்டன் 400 தோற்றத்தில் மாறுப்பட்டதாக உள்ளது.

இந்த வகையில், த்ரக்ஸ்டன் 400 பைக்கின் முன்பக்கத்தில் நீளமான விண்ட்ஸ்க்ரீனை காணலாம். இந்த விண்ட்ஸ்க்ரீன் ஆனது பின்னோக்கி வளைக்கப்பட்டதாக உள்ளது. த்ரக்ஸ்டன் 400 பைக்கின் தோற்றத்தில் மற்ற கவனிக்கத்தக்க அம்சங்கள் என்று பார்த்தால், க்ளிப்-ஆன் ஹேண்டில்பார்கள், மேல் நோக்கி உயர்த்தப்பட்ட பெட்ரோல் டேங்க், அகலமான இருக்கை உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.
ஓட்டுனர் கால் வைக்கும் பகுதி ஆனது மற்ற 400சிசி டிரையம்ப் பைக்குகளில் இருந்து மாறுப்பட்டதாக உள்ளது. பைக்கின் பின்பக்கத்தில் சீட் கௌல், குறுகிய ஃபெண்டர் மற்றும் சிறிய டெயில்லைட் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. ட்யூயல்-டோன் பெயிண்ட்டில் வடிவமைக்கப்பட்டுள்ள த்ரக்ஸ்டன் 400 பைக்கில் எல்இடி விளக்குகள், ட்யூயல்-சேனல் ஏபிஎஸ், டிராக்ஷன் கண்ட்ரோல், செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் யுஎஸ்பி சார்ஜிங் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ள 398சிசி, லிக்யுடு-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் டி.ஆர்-சீரிஸ் என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 41.42 பிஎச்பி வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இதே என்ஜின் தான் மற்ற 400சிசி டிரையம்ப் பைக்குகளிலும் பொருத்தப்படுகிறது என்றாலும், அவற்றுடன் ஒப்பிடுகையில் த்ரக்ஸ்டன் 400 பைக்கில் 2 பிஎச்பி அதிகமாக கிடைக்கிறது. டார்க் திறனை பொறுத்தவரையில், 37.5 என்.எம் வரையிலான டார்க் திறனை பெறலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) நிறுவனத்தின் கீழ் செயல்படும் டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் இந்திய சந்தைக்கு என்று பிரத்யேகமாக சில நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. அதன் ஒருபகுதி தான், குறைந்த விலையில் 400சிசி பைக்குகளை அறிமுகம் செய்வது ஆகும். விலை குறைவான டிரையம்ப் பைக் என கூறினாலும், 400சிசி டிரையம்ப் பைக்குகளின் விலைகள் ரூ.2 லட்சத்திற்கும் அதிகமாகவே உள்ளன.


Click it and Unblock the Notifications









