ஸ்கூட்டரிலும் வந்தாச்சு CNG.. இதுவே இந்தியாவின் முதல் சிஎன்ஜி ஸ்கூட்டர் மாடல்.. 1 கிமீ பயணிக்க 1 ரூபா மட்டுமே!
பஜாஜ் (Bajaj) நிறுவனமே உலகின் முதல் சிஎன்ஜி (CNG) பைக்கை விற்பனைக்கு அறிமுகப்படுத்திய டூ-வீலர் உற்பத்தியாளர் ஆவார். இவருக்கு அடுத்தபடியாக தற்போது உலகின் முதல் சிஎன்ஜி ஸ்கூட்டர் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணியில் டிவிஎஸ் (TVS) நிறுவனம் களமிறங்கி இருக்கின்றது. நிறுவனத்தின் புகழ்பெற்ற ஸ்கூட்டர் மாடல்களில் ஒன்றாக ஜுபிடர் (Jupiter) உள்ளது. இந்த மாடலிலேயே சிஎன்ஜி வெர்ஷனை தயார் செய்திருக்கின்றது, டிவிஎஸ் நிறுவனம். பஜாஜ் சிஎன்ஜி பைக் மாடலான ஃப்ரீடம் 125 (Freedom 125)-க்குக் கிடைத்துக் கொண்டிருப்பதைப் போலவே இதற்கும் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நிறுவனத்தின் பெஸ்ட் செல்லிங் ஸ்கூட்டர் மாடலாக ஜுபிடர் காட்சியளிக்கின்றது. இதில், சிஎன்ஜி வெர்ஷனை டிவிஎஸ் தயார் செய்திருப்பது வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக அமைந்திருக்கின்றது. இதன் பக்கம் கூடுதல் கவனத்தை ஈர்க்கும் விதமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போவி 2025-இல் அதை டிவிஎஸ் நிறுவனம் காட்சிப்படுத்தியும் இருக்கின்றது.

டிவிஎஸ் நிறுவனம் அதன் ஐக்யூப் (iQube) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் வாயிலாக மின்சார இரண்டு சக்கர வாகன பிரியர்களைக் கவர்ந்து வருகின்றது. இதைப்போலவே ஜுபிடர் சிஎன்ஜி வாயிலாக சிஎன்ஜி டூ-வீலர் காதலர்களை அது கவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வழக்கமான பெட்ரோல் டூ-வீலர்களைக் காட்டிலும் மிகக் குறைவான மாசையே ஜுபிடர் சிஎன்ஜி வெளியேற்றும் என நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.
இதேபோல், பெட்ரோல் டூ-வீலரைக் காட்டிலும் அதிக லாபத்தைத் தரக் கூடியதாகவும் அது இருக்கும் என்றும் நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. ஒரு கிமீ பயணிக்கு 1 ரூபாய் அல்லது அதற்கும் குறைவாகவே செலவாகும் என்றே டிவிஎஸ் தெரிவித்திருக்கின்றது. இது பலரை வாயை பிளக்கச் செய்யும் வகையில் அமைந்திருக்கின்றது.
டிவிஎஸ் ஜுபிடர் சிஎன்ஜி இந்தியர்களை மிகப் பெரிய அளவில் வளைத்துப் போடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த ஸ்கூட்டரை சிஎன்ஜி-யில் மட்டுமல்ல, பெட்ரோலிலும் இயக்கிக் கொள்ள முடியும் என்பது கவனிக்கத்தகுந்தது. ஆனால், பெட்ரோலை நிரப்புவதற்கு மிக சிறிய ஃப்யூவல் டேங்க்கே வழங்கப்பட்டு இருக்கின்றது.
2 லிட்டர் அளவுள்ள டேங்க்கே வழங்கப்பட்டு இருக்கின்றது. இதேபோல், சிஎன்ஜி-யை 1.4 கிலோ வரையில் மட்டுமே நிரப்பிக் கொள்ள முடியும். ஒரு கிலோ நிரப்பினால் 84 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். அதேவேளையில், சிஎன்ஜி மற்றும் பெட்ரோல் இரண்டையும் முழுமையாக நிரப்பினால் சுமார் 226 கிமீ தூரம் வரை நம்மால் பயணித்துக் கொள்ள முடியும் என்பது கவனிக்கத்தகுந்தது.
ஜுபிடர் சிஎன்ஜி மாடலில் 124.8 சிசி மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 6,000 ஆர்பிஎம்மில் 5.3 Kw பவரையும், 5,500 ஆர்பிஎம்மில் 9.4 என்எம் டார்க் ஆற்றலையும் உருவாக்கும். இது ஓர் ஓபிடி2பி மாசு உமிழ்வு தரத்திற்கு உட்பட்டு தயாரிக்கப்பட்ட மோட்டார் ஆகும்.
இந்த ஸ்கூட்டரை இந்தியர்களுக்கு ஏற்ப டிவிஎஸ் நிறுவனம் தயார் செய்திருக்கின்றது. பெரிய இருக்கை, செல்போனை சார்ஜ் செய்வதற்கான வசதி (முன் பக்கத்தில் இடம் பெற்றிருக்கும்), மெட்டல் பாடி, பாடி பேலன்ஸிங் தொழில்நுட்பம் (கீழே விழாமல் பாதுகாக்கும் அம்சம்), கால் வைப்பதற்கு அதிக இட வசதி மற்றும் டிவிஎஸ் இன்டெலிகோ தொழில்நுட்பம் ஆகியவற்றை இந்த ஸ்கூட்டரில் வழங்கி இருக்கின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே பார்த்த அம்சங்கள் காரணமாக டிவிஎஸ் ஜுபிடர் சிஎன்ஜி ஸ்கூட்டரை வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இது எப்போது விற்பனைக்கு வரும் என்பது பற்றிய விபரங்கள் வெளியாகவில்லை. தற்போது ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தல் மட்டுமே செய்யப்பட்டு இருக்கின்றது. விரைவில் இது விற்பனைக்குக் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








