பாக்கெட்ல இருந்து மொபைல் போனை எடுக்க அவசியம் இல்ல! டிவிஎஸ் கம்பெனி எங்கிருந்து இதலாம் யோசிக்குது!
இந்தியாவின் முன்னணி மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான டிவிஎஸ் மோட்டார் (TVS Motor), தனது புதிய ரைடர் 125 டூயல் டிஸ்க் (Raider 125 Dual Disc) பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய டிவிஎஸ் ரைடர் பைக்கின் விலை டெல்லி எக்ஸ்-ஷோரூம் நிலவரப்படி, SXC DD வேரியண்ட்டிற்கு ரூ.93,800-ல் இருந்தும், TFT DD வேரியண்ட்டிற்கு ரூ.95,600-ல் இருந்தும் துவங்குகின்றன.
புதிய டிவிஎஸ் ரைடர் 125 டூயல் டிஸ்க் பைக்கில் பல சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் கொண்ட டூயல் டிஸ்க் பிரேக்குகள், பூஸ்ட் மோட் உடன் கூடிய iGO அசிஸ்ட், க்ளைட் த்ரூ டெக்னாலஜி மற்றும் ஃபாலோ மீ ஹெட்லேம்ப் போன்றவை இதில் அடங்கும். இவை அனைத்தும் 1 லட்ச ரூபாய்க்குள் விலை கொண்ட 125சிசி பைக்குகள் பிரிவில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்படும் அம்சங்களாகும்.

இருப்பினும், புதிய டிவிஎஸ் ரைடர் மோட்டார்சைக்கிளிலும் அதே 125சிசி, மூன்று வால்வுகள் கொண்ட என்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது. இது 7,500 ஆர்பிஎம்-ல் 11.38 பிஎஸ் பவரையும், 6,000 ஆர்பிஎம்-ல் 11.2 என்.எம் டார்க்கையும் வெளிப்படுத்தக் கூடியதாக உள்ளது. இந்த என்ஜின் ஆனது 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் பல ரைடிங் மோடுகளை வழங்குகிறது.
மேம்படுத்தப்பட்ட நிலைத்தன்மை மற்றும் வளைவுகளில் சவுகரியமாக திரும்புவதற்காக, புதிய டிவிஎஸ் ரைடர் பைக்கில் அகலமான டயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன்படி, முன்புறத்தில் 90/90-17 டயரும், பின்புறத்தில் 110/80-17 டயரும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த புதிய அளவுகள் நகர சாலைகள் மற்றும் சீரற்ற பரப்புகளில் சிறந்த பிடிமானம் மற்றும் ஹேண்ட்லிங்கை வழங்கும்.
ரைடர் டூயல் டிஸ்க் பைக்கில், பூஸ்ட் மோட் உடன் கூடிய iGO அசிஸ்ட் டெக்னாலஜி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது ரைடர் விரும்பும்போது உடனடியாக அதிக என்ஜின் பவர் உடன் அதிக ஆக்ஸலரேஷனை அளிக்கிறது. க்ளைட் த்ரூ டெக்னாலஜி குறைந்த வேகத்தில், குறிப்பாக நெரிசலான போக்குவரத்தில், க்ளட்ச் அதிகம் பயன்படுத்தாமல் மென்மையான இயக்கத்தை உறுதி செய்கிறது.
மேலும் ஏற்கனவே கூறியதுபோல், இக்னிஷன் அணைக்கப்பட்ட பிறகும் சிறிது நேரம் எரியும் 'ஃபாலோ மீ ஹெட்லேம்ப்' வசதியும் உள்ளது. இந்த அம்சம் குறைந்த வெளிச்சம் உள்ள இடங்களில், குறிப்பாக பார்க்கிங் பகுதிகளில், ரைடர்களுக்கு வசதியை மேம்படுத்துகிறது. இது 125சிசி அன்றாட பைக்குகள் பிரிவில் முதல்முறையாக வழங்கப்படுவது ஆகும்.

வடிவமைப்பைப் பொறுத்தவரை, புதிய ரைடர் டூயல் டிஸ்க் பைக்கில் சிவப்பு நிற பெயிண்ட் உடன் கூடிய அலாய் சக்கரங்கள் மற்றும் புதிய மெட்டாலிக் சில்வர் பெயிண்ட் ஆப்ஷன் வழங்கப்பட்டு உள்ளது. வேரியண்ட்டை பொறுத்து, ரைடர்கள் இரண்டு டிஸ்ப்ளே அமைப்புகளில் இருந்து ஒன்றை தேர்வு செய்யலாம்.
விலைமிக்க வேரியண்ட்டில் கிடைக்கும் TFT திரையானது 99-க்கும் மேற்பட்ட கனெக்டட் அம்சங்களை வழங்குகிறது. அதே நேரத்தில் ரிவர்ஸ் எல்சிடி வெர்ஷன் 85-க்கும் மேற்பட்ட அம்சங்களை அளிக்கிறது. இவை இரண்டும் ஸ்மார்ட் எக்ஸ்கனெக்ட் ப்ளூடூத் ஒருங்கிணைப்பை ஆதரிக்கின்றன. இதன் மூலம் நேவிகேஷன், மொபைலுக்கு வரும் அழைப்புகள் குறித்த எச்சரிக்கைகள், வாய்ஸ் கண்ட்ரோல் உதவி போன்ற வசதிகளை பெறலாம்.
புதிய ரைடர் 125 பைக் அறிமுகம் குறித்து டிவிஎஸ் மோட்டார் கம்பெனியின் மூத்த துணைத் தலைவரும், அன்றாட பயன்பாட்டு வாகனங்கள் மற்றும் எலக்ட்ரிக் வாகனங்களின் வணிகப் பிரிவுத் தலைவருமான திரு.அனிருத்த ஹால்டர் பேசுகையில், "டிவிஎஸ் ரைடர் இளம் ரைடர்கள் தங்கள் மோட்டார்சைக்கிளில் இருந்து என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை மறுவரையறை செய்கிறது. நான்கு ஆண்டுகளில் இது ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஜென் இசட் ரைடர்களின் அன்பைப் பெற்றுள்ளது."
"இன்று, புதிய டிவிஎஸ் ரைடர், iGO அசிஸ்ட் தொழில்நுட்பத்தால் இயங்கும் உற்சாகமான 'பூஸ்ட் மோட்' மற்றும் பிரிவில் முதல் முறையாக - ABS உடன் கூடிய டூயல் டிஸ்க் உடன் வருகிறது. மேலும், பிரிவில் முதல் முறையாக, க்ளைட் த்ரூ டெக்னாலஜி (GTT) மூலம் இப்போது ரைடர் பைக்கில் மெதுவான போக்குவரத்திலும் எளிதாகச் செல்ல முடியும்." என்றார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வேகமாக வளர்ந்து வரும் பிரீமியம் 125சிசி அன்றாட பயன்பாட்டு பைக்குகள் பிரிவில் பஜாஜ் பல்சர் என்.எஸ்125, ஹீரோ கிளாமர் எக்ஸ்டெக் மற்றும் ஹோண்டா எஸ்பி125 போன்ற பைக்குகளுடன் புதிய டிவிஎஸ் ரைடர் 125 டூயல் டிஸ்க் போட்டியிடுகிறது. ஏற்கனவே இவற்றை காட்டிலும் டிவிஎஸ் ரைடரின் விற்பனை தான் சிறப்பாக உள்ளதால், புதிய டூயல் டிஸ்க் பிரேக் அறிமுகம் இந்த டிவிஎஸ் பைக் விற்பனையை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications








