தமிழ்நாட்டு நிறுவனம் முன்னேறுனா நமக்கு பெருமை தானே... டிவிஎஸ் விற்பனை படுஜோர்!!
டிவிஎஸ் மோட்டார் (TVS Motor), தமிழ்நாட்டை சேர்ந்த முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களுள் ஒன்று. ஓசூரில் தொழிற்சாலை அமைத்து செயல்பட்டுவரும் டிவிஎஸ் மோட்டாரின் தயாரிப்புகள் கடல் கடந்து பல வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படுகின்றன. இதன் மூலமாக, ஒவ்வொரு மாதமும் டிவிஎஸ் மோட்டாரின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது நடந்து முடிந்த கடந்த 2024 டிசம்பர் மாதத்திலும் தொடர்ந்துள்ளது. கடந்த மாதத்தில் டிவிஎஸ் மோட்டாரின் மொத்த விற்பனை ஆனது 7% அதிகரித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
இந்தியாவில் 2-வீலர்களை விற்பனை செய்வதில் ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் ஹோண்டா 2-வீலர்ஸ் நிறுவனங்களுக்கு அடுத்து 3வது மிக பெரும் நிறுவனமாக டிவிஎஸ் மோட்டார் விளங்குகிறது. ஆனால், டிவிஎஸ் நிறுவனம் 2-வீலர்களை மட்டுமின்றி, 3-வீலர்களையும் விற்பனை செய்கிறது. ஒட்டுமொத்தமாக, கடந்த 2024 டிசம்பர் மாதத்தில் 3 லட்சத்து 21 ஆயிரத்து 687 வாகனங்களை உலகளவில் டிவிஎஸ் மோட்டார் விற்பனை செய்துள்ளது.

இது 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தை காட்டிலும் 7% அதிகமாகும். ஏனெனில், அந்த டிசம்பர் மாதத்தில் 3 லட்சத்து 1,898 வாகனங்களை மட்டுமே டிவிஎஸ் உலகளவில் விற்பனை செய்திருந்தது. இதில் 2-வீலர்கள் மற்றும் 3-வீலர்கள் என இரண்டின் விற்பனை எண்ணிக்கைகளும் அடங்குகின்றன. 2-வீலர்களை மட்டும் எடுத்து பார்த்தால், கடந்த டிசம்பர் மாதத்தில் மொத்தம் 3 லட்சத்து 12 ஆயிரத்து 2 டிவிஎஸ் 2-வீலர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
2 லட்சத்து 90 ஆயிரத்து 64 டிவிஎஸ் 2-வீலர்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்த 2023 டிசம்பர் மாதத்தை காட்டிலும் இது 8% அதிகமாகும். இதில், இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட டிவிஎஸ் 2-வீலர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 15 ஆயிரத்து 75 ஆகும். 2023 டிசம்பரில் இதனை காட்டிலும் 12 டிவிஎஸ் 2-வீலர்கள் இந்தியாவில் குறைவாக விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

இந்தியா உள்பட உலகளவில் கடந்த டிசம்பர் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட டிவிஎஸ் பைக்குகளின் எண்ணிக்கை 1 லட்சத்து 44 ஆயிரத்து 811 ஆகும். ஆனால், 2023 டிசம்பரில் இதனை காட்டிலும் அதிகமாக 1 லட்சத்து 48 ஆயிரத்து 49 டிவிஎஸ் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. ஆனால், டிவிஎஸ் ஸ்கூட்டர்களின் விற்பனையை பொறுத்தவரையில் 2023 டிசம்பரை காட்டிலும் 30% அதிகரித்துள்ளது.
2023 டிசம்பரில் 1 லட்சத்து 3,167 டிவிஎஸ் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், கடந்த 2024 டிசம்பரில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 919 டிவிஎஸ் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த மாதத்தில் டிவிஎஸ் விற்பனை செய்த எலக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 171 ஆகும். ஆனால், 2023 டிசம்பரில் வெறும் 11 ஆயிரத்து 288 எலக்ட்ரிக் வாகனங்களை மட்டுமே டிவிஎஸ் விற்பனை செய்திருந்தது.

கடந்த மாதத்தில் டிவிஎஸ் மோட்டார் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்த வாகனங்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 4,393 ஆகும். 2023 டிசம்பரில் இதனை காட்டிலும் 22% குறைவாக 85 ஆயிரத்து 391 வாகனங்களை மட்டுமே இந்தியாவில் இருந்து டிவிஎஸ் ஏற்றுமதி செய்திருந்தது. டிவிஎஸ் 2-வீலர் ஏற்றுமதி 29% அதிகரித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் விற்பனையான டிவிஎஸ் 3-வீலர்களின் எண்ணிக்கை 9,685 ஆகும். ஆனால், 2023 டிசம்பரில் 11 ஆயிரத்து 834 மூன்று-சக்கர வாகனங்களை டிவிஎஸ் விற்பனை செய்திருந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மற்ற ஆட்டோமொபைல் நிறுவனங்களை போன்று, டிவிஎஸ் மோட்டாரின் விற்பனையும் வருடத்திற்கு வருடம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை சுமார் 79% அதிகரித்து இருப்பது டிவிஎஸ் நிறுவனத்துக்கு அதிக உத்வேகத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கிறோம். இருப்பினும், டிவிஎஸ் 3-வீலர் விற்பனை குறைந்திருப்பதையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.


Click it and Unblock the Notifications









