ஏழை மக்களுக்கு ஏற்ற எள் உருண்டை! புதிய டிவிஎஸ் பைக் பார்க்க ரொம்ப நல்லாவே இருக்கு!
டிவிஎஸ் மோட்டார் (TVS Motor), இந்தியாவின் முன்னணி 2-வீலர் நிறுவனங்களுள் ஒன்று. தமிழ்நாட்டை சேர்ந்த டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்துக்கு ஓசூரில் வாகன உற்பத்தி தொழிற்சாலை உள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் டிவிஎஸ் வாகனங்கள் இந்தியாவை தாண்டி, ஆப்பிரிக்கா, தென்கிழக்கு ஆசியா நாடுகளுக்கும் கொண்டு செல்லப்படுகின்றன.
இவ்வாறு வெளிநாட்டு ஏற்றுமதிகளில் முன்னணியில் இருப்பதுடன், டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் உள்நாட்டு விற்பனையிலும் முன்னணியில் உள்ளது. ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp), ஹோண்டா மோடடர்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா (Honda Motorcycle & Scooter India) நிறுவனங்களுக்கு அடுத்து இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் 2-சக்கர வாகனங்களை விற்பனை செய்யக்கூடிய நிறுவனமாக டிவிஎஸ் மோட்டார் விளங்குகிறது.

டிவிஎஸ் மோட்டாரின் வெற்றிக்கு முக்கியமான காரணம், விலை குறைவான பைக்குகளையும், ஸ்கூட்டர்களையும் அடுத்தடுத்து புதியது புதியதாக டிவிஎஸ் மோட்டார் விற்பனைக்கு கொண்டுவருவது ஆகும். அந்த வகையில், டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தில் இருந்து குறைந்த விலையில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் மோட்டார்சைக்கிளாக 'ஸ்போர்ட்' (Sport) விளங்குகிறது. குறைவான விலையில் விற்பனை செய்யப்படுவதால், இந்தியாவில் ஏழை, எளியோர் வாங்கும் பைக்குகளுள் ஒன்றாக டிவிஎஸ் ஸ்போர்ட் உள்ளது.
ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கிலான யூனிட்கள் விற்பனை செய்யப்படும் இந்த பைக்கை விரைவில் புதியதாக அப்டேட் செய்ய டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தயாராகி வருகிறது. இந்த அப்டேட்டின்படி, ஸ்போர்ட் பைக்கிற்கு புதிய கிராஃபிக்ஸை வழங்க டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதாவது, பைக்கின் பெயிண்ட்டில் வழங்கப்படும் கிராஃபிக்ஸ் டிசைன்கள் மாற்றப்பட உள்ளன.

புதிய ஸ்போர்ட் பைக் பார்க்க எவ்வாறு இருக்கும் என்பதை வெளிக்காட்டும் விதமான டீசர் (Teaser) படம் ஒன்றை டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. பைக்கிற்கான கிராஃபிக்ஸ் டிசைன் மாற்றப்பட்டு இருப்பதுடன், ஸ்போர்ட் பைக்கிற்கு புதிய நிறங்களில் பெயிண்ட் ஆப்ஷன்கள் வழங்கப்பட உள்ளன. இந்த அப்டேட்களுக்கு ஏற்ப டிவிஎஸ் ஸ்போர்ட் பைக்கின் விலை சற்று அதிகரிக்கப்பட உள்ளது.
புதிய அப்டேகளுடனான புதிய 2025 டிவிஎஸ் ஸ்போர்ட் பைக் விரைவில் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளது. தற்சமயம் டிவிஎஸ் ஸ்போர்ட் பைக் இ.எஸ் (ES) மற்றும் இ.எல்.எஸ் (ELS) என இரு விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.59,881இல் இருந்து ரூ.71,785 வரையில் தற்சமயம் உள்ளன.
இந்த இரு வேரியண்ட்களுக்கு இடையேயான ஒரே வித்தியாசம் என்னவென்றால், அவற்றின் கிராஃபிக்ஸ் டிசைன் ஆகும். அந்த கிராஃபிக்ஸை 2025 ஸ்போர்ட் பைக்கில் மாற்ற உள்ளனர். புதிய ஸ்போர்ட் பைக்கில் கிராஃபிக்ஸ் டிசைன் ஆனது பைக்கின் பெட்ரோல் டேங்க், சைடு பேனல்கள் மற்றும் பைக்கின் ஹெட்லைட் கௌலிலும் வழங்கப்பட உள்ளது.
டிவிஎஸ் ஸ்போர்ட் பைக்கில் 109.7சிசி, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 7,350 ஆர்பிஎம்-இல் 8.08 பிஎச்பி மற்றும் 4,500 ஆர்பிஎம்-இல் 8.7 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 4-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. பிரேக்கிற்கு இந்த டிவிஎஸ் பைக்கில் இரு சக்கரங்களிலும் டிரம் பிரேக்குகள் பொருத்தப்படுகின்றன. டிஸ்க் பிரேக்குகள் எதுவும் வழங்கப்படுவது இல்லை.
சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் ட்வின் ஷாக் அப்சார்பர்களும் வழங்கப்படுகின்றன. இதில் பின்பக்க ட்வின் ஷாக் அப்சார்பர் ஆனது ஐந்து வழிகளில் அட்ஜெஸ் செய்யக்கூடியதாக உள்ளது. ஹேண்டில்பாருக்கு மத்தியில் அனலாக் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் திரை கொடுக்கப்படுகிறது. பைக்கின் வேகம் மற்றும் எரிபொருள் அளவை காட்டுவதுடன், இந்த திரையில் ஈகோனோமீட்டரும் (Econometer) இடம்பெறுகிறது.
பைக்கை ஸ்டார்ட் செய்தவுடன், திரையில் வெளிச்சம் உண்டாகும். டிவிஎஸ் ஸ்போர்ட் பைக்கின் அலாய் சக்கரங்களில் ட்யூப்லெஸ் டயர்கள் பொருத்தப்படுகின்றன. இவற்றுடன், எலக்ட்ரிக் ஸ்டார்ட்டரும் (Electric Starter) இந்த பைக்கில் வழங்கப்படுகிறது. 2025 டிவிஎஸ் ஸ்போர்ட் பைக்கில் இவற்றில் என்ஜின் உள்ளிட்ட மெக்கானிக் பாகங்களில் எந்த மாற்றமும் இருக்க வாய்ப்பில்லை. பைக்கின் தோற்றம் மட்டுமே மெருக்கேற்றப்படும்.
ஸ்போர்ட் போன்ற விலை குறைவான பைக் மற்றும் ஸ்கூட்டர்களை விற்பனை செய்தாலும், டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் அடையாளமே அதன் அப்பாச்சி (Apache) பைக்குகள் ஆகும். இந்திய மார்க்கெட்டில் தற்சமயம் டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் பல்வேறு விதமான என்ஜின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும், பஜாஜ் பல்சர் (Bajaj Pulsar) பைக்குகளுக்கு இணையாக டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகளும் மார்க்கெட்டில் நீண்ட வருடங்களாக விற்பனையில் இருப்பவை ஆகும்.
முதல் அப்பாச்சி பைக் அறிமுகம் செய்யப்பட்டு 20 வருடங்கள் ஆனதை சமீபத்தில்தான் டிவிஎஸ் நிறுவனம் கொண்டாடியது. 2005ஆம் ஆண்டில் முதல் டிவிஎஸ் அப்பாச்சி பைக்காக 'அப்பாச்சி 150' அறிமுகம் செய்யப்பட்டது. 2005 சமயத்தில், 150சிசி என்ஜினை கொண்ட பைக் என்றாலே விலைமிக்கதாக பார்க்கப்பட்டதால், விலைமிக்க பைக்குகள் மார்க்கெட்டில் களமிறங்கும் முயற்சியாக அப்பாச்சி பைக்கை டிவிஎஸ் அறிமுகம் செய்தது.
அன்றைய கால இளைஞர்களை கவரும் விதமாக நிறைய விஷயங்களை அப்பாச்சி 150 பைக்கில் முதல்முறையாக டிவிஎஸ் மோட்டார் வழங்கியது. கடந்த 20 வருடங்களில் சுமார் 60 இலட்சத்திற்கும் அதிகமான அப்பாச்சி பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. உலகம் முழுக்க நடக்கும் பைக் பந்தயங்களில் கலந்துக் கொள்வதற்காக 'டிவிஎஸ் ரேசிங்' (TVS Racing) என்கிற குழு செயல்படுகிறது.
பந்தயங்களில் அப்பாச்சி பைக்குகளை பயன்படுத்துவதுதான் டிவிஎஸ் ரேசிங்கின் வேலை ஆகும். பந்தயத்திற்கு ஏற்ப அப்பாச்சி பைக்குகளை மாற்றி அல்லது முற்றிலும் புதிய அப்பாச்சி பைக்குகளை உருவாக்கி டிவிஎஸ் ரேசிங் குழு பந்தயங்களில் பயன்படுத்துகிறது. 60க்கும் மேற்பட்ட நாடுகளில் டிவிஎஸ் ரேசிங் சார்பில் அப்பாச்சி பைக்குகள் பந்தயங்களில் உட்படுத்தப்பட்டு உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வாறு ஒரு சர்வதேச தனியார் நிறுவனம் செய்ய வேண்டிய அத்தனை வேலைகளையும் செய்து, உலக நாடுகளில் டிவிஎஸ் மோட்டார் தனது நெட்வொர்க்கை தொடர்ந்து விரிவுப்படுத்தி வருகிறது. அதேநேரம் உள்நாட்டிலும் பைக் விற்பனையை அதிகரிக்கும் முயற்சியாக, விலை குறைவான ஸ்போர்ட் பைக்கை அப்டேட் செய்ய டிவிஎஸ் தயாராகி வருகிறது. தற்போது டீசர் வெளியிடப்பட்டுள்ளதால், மிக விரைவில் இன்னும் சில தினங்களில் 2025 டிவிஎஸ் ஸ்போர்ட் பைக்கின் அறிமுகத்தை எதிர்பார்க்கலாம். இந்த பைக்கின் விலைகள் மிகவும் குறைவாக மட்டுமே அதிகரிக்கப்படும்.


Click it and Unblock the Notifications








