தமிழ்நாட்டு கம்பெனினு காலரை தூக்கிவிட்டு கெத்தா சொல்லலாம்! டிவிஎஸ் வருஷா வருஷம் பெருசாகிட்டே போகுது!
டிவிஎஸ் மோட்டார் (TVS Motor), தமிழ்நாட்டை சேர்ந்த இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனம். இன்னும் சொல்லப்போனால், டிவிஎஸ் நிறுவனத்திற்கு பல வெளிநாடுகளில் கூட வலுவான நெட்வொர்க் உள்ளது. இதனாலேயே சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை மற்றும் வெளிநாட்டு ஏற்றுமதி என இரண்டும் சிறப்பானதாக இருந்து வருகிறது. இதனை வெளிக்காட்டும் வகையில், கடந்த மார்ச் மாதத்தில் டிவிஎஸ் நிறுவனத்தில் விற்பனை செய்யப்பட்ட வாகனங்கள் குறித்த விபரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. அவற்றை பற்றி விரிவாக இனி இனி தொடர்ந்து பார்க்கலாம்.
ஓசூரில் தொழிற்சாலை அமைத்து செயல்பட்டுவரும் டிவிஎஸ் மோட்டாரில் இருந்து இரு சக்கர வாகனங்கள் மட்டுமின்றி 3-சக்கர வாகனங்களும் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இவை இரண்டையும் சேர்த்து, நடந்து முடிந்த 2025 மார்ச் மாதத்தில் ஒட்டுமொத்தமாக 4 லட்சத்து 14 ஆயிரத்து 687 வாகனங்களை டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

இந்த 4,14,687இல் உள்நாட்டில் விற்பனை செய்யப்பட்ட டிவிஎஸ் வாகனங்கள் மட்டுமின்றி, கடந்த மார்ச் மாதத்தில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட டிவிஎஸ் வாகனங்களின் எண்ணிக்கையும் அடங்குகிறது. அதுவே, கடந்த 2024ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் வெறும் 3 லட்சத்து 54 ஆயிரத்து 592 வாகனங்களை மட்டுமே டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் விற்பனை செய்திருந்தது.
இந்த வகையில் பார்க்கும்போது, டிவிஎஸ் மோட்டாரின் வாகனங்கள் விற்பனை ஆனது கடந்த ஆண்டு மார்ச் உடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு மார்ச்சில் 17% அதிகரித்துள்ளது. 2-வீலர்களை மட்டும் தனியாக எடுத்து பார்த்தால், கடந்த மார்ச் மாதத்தில் மொத்தம் 4 லட்சத்து 120 டிவிஎஸ் 2-வீலர்கள் உலகளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், 2024 மார்ச்சில் இந்த எண்ணிக்கை 3 லட்சத்து 44 ஆயிரத்து 446 ஆக மட்டுமே பதிவாகி இருந்தது.

கடந்த மார்ச் மாதத்தில் ஒட்டுமொத்தமாக விற்பனை செய்யப்பட்ட 4 லட்சத்து 120 டிவிஎஸ் 2-வீலர்களில் 1 லட்சத்து 96 ஆயிரத்து 734 டிவிஎஸ் பைக்குகளும், 1 லட்சத்து 66 ஆயிரத்து 297 டிவிஎஸ் ஸ்கூட்டர்களும் அடங்குகின்றன. அதுவே, 2024 மார்ச்சில் இதனை காட்டிலும் 15% குறைவாக 1 லட்சத்து 71 ஆயிரத்து 611 பைக்குகளையும், 1 லட்சத்து 31 ஆயிரத்து 472 ஸ்கூட்டர்களையும் மட்டுமே டிவிஎஸ் நிறுவனம் இந்தியா உள்பட உலகளவில் விற்பனை செய்து இருந்தது.
இந்தியாவில் கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட டிவிஎஸ் 2-வீலர்களின் எண்ணிக்கை மட்டும் 2 லட்சத்து 97 ஆயிரத்து 622 ஆகும். அதுவே, 2024 மார்ச்சில் இதனை காட்டிலும் 14% குறைவாக 2 லட்சத்து 60 ஆயிரத்து 532 2-வீலர்களை மட்டுமே இந்தியாவில் டிவிஎஸ் நிறுவனம் விற்பனை செய்திருந்தது.

டிவிஎஸ் மோட்டாரின் எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையை பொறுத்தவரையில், கடந்த மார்ச் மாதத்தில் டிவிஎஸ் நிறுவனத்தில் இருந்து மொத்த 26 ஆயிரத்து 935 எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில், டிவிஎஸ் எலக்ட்ரிக் 2-வீலர்கள் மற்றும் 3-வீலர்கள் அடங்குகின்றன. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் மொத்தம் 15 ஆயிரத்து 250 எலக்ட்ரிக் வாகனங்களை மட்டுமே டிவிஎஸ் நிறுவனம் விற்பனை செய்திருந்தது.
டிவிஎஸ் மோட்டாரின் பிரதானமான வணிகம் 2-வீலர்களை சார்ந்தே உள்ளது. டிவிஎஸ் 3-வீலர்கள் மிகவும் குறைவான எண்ணிக்கையில் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. கடந்த மார்ச் மாதத்தில் மொத்தம் 14 ஆயிரத்து 567 மூன்று-சக்கர வாகனங்களை டிவிஎஸ் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. ஆனால், 2024 மார்ச்சில் இந்த எண்ணிக்கை வெறும் 10 ஆயிரத்து 146 ஆக மட்டுமே பதிவாகி இருந்தது.

இந்த வகையில் பார்த்தால், டிவிஎஸ் 3-வீலர்களின் விற்பனை ஆனது 44% அதிகரித்துள்ளது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு கடந்த மாதத்தில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட டிவிஎஸ் வாகனங்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 13 ஆயிரத்து 464 ஆகும். அதுவே, 2024 மார்ச்சில் டிவிஎஸ் மோட்டாரின் ஏற்றுமதி எண்ணிக்கை 1 லட்சத்தை கூட தொடவில்லை; வெறும் 91 ஆயிரத்து 972 ஆக மட்டுமே பதிவாகி இருந்தது.
இதன்படி பார்த்தால், டிவிஎஸ் மோட்டாரின் வெளிநாட்டு ஏற்றுமதி ஆனது 23% அதிகரித்துள்ளது. கடந்த மாதத்தில் 2-வீலர்களை மட்டும் 1 லட்சத்து 2 ஆயிரத்து 498 யூனிட்கள் வெளிநாடுகளுக்கு டிவிஎஸ் ஏற்றுமதி செய்துள்ளது. ஆனால், 2024 மார்ச்சில் வெறும் 83 ஆயிரத்து 914 டிவிஎஸ் 2-வீலர்கள் மட்டுமே வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு இருந்தன.

இவ்வளவு நேரம் நாம் பார்த்தது எல்லாம், கடந்த மார்ச் மாதத்தில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் விற்பனை செய்த வாகனங்களின் எண்ணிக்கை ஆகும். இந்த 2025ஆம் ஆண்டின் கடந்த முதல் 3 மாதங்களில் மொத்தம் 11.80 லட்ச இருசக்கர வாகனங்களை டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் ஒட்டுமொத்தமாக (உள்நாட்டு விற்பனை + வெளிநாட்டு ஏற்றுமதி) விற்பனை செய்துள்ளது.
அதுவே, கடந்த 2024ஆம் ஆண்டின் முதல் 3 மாதங்களில் 10.32 லட்ச இருசக்கர வாகனங்களை மட்டுமே டிவிஎஸ் நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் பார்த்தால், கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டின் முதல் 3 மாதங்களில் டிவிஎஸ் மோட்டாரின் 2-வீலர் விற்பனை 14% அதிகரித்துள்ளது. கடந்த 3 மாதங்களில் விற்பனை செய்யப்பட்ட 3-வீலர்களின் எண்ணிக்கை 37 ஆயிரம் யூனிட்கள் ஆகும்.

இதனை காட்டிலும் 21% குறைவாக, 2024ஆம் ஆண்டின் முதல் 3 மாதங்களில் 30 ஆயிரம் 3-வீலர்களை மட்டுமே டிவிஎஸ் நிறுவனம் விற்பனை செய்திருந்தது. அதேபோல், கடந்த 3 மாதங்களில் டிவிஎஸ் மோட்டாரின் வெளிநாட்டு ஏற்றுமதியும் 31% அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டின் முதல் 3 மாதங்களில் 2.60 லட்ச வாகனங்களை மட்டுமே வெளிநாடுகளுக்கு டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் ஏற்றுமதி செய்திருந்த நிலையில், இந்த 2025ஆம் ஆண்டின் முதல் 3 மாதங்களில் சுமார் 31% அதிகமாக 3.40 லட்ச வாகனங்களை இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தமிழ்நாட்டை சேர்ந்த டிவிஎஸ் மோட்டாரின் விற்பனை எல்லா பிரிவுகளிலும் வளர்ச்சியை பதிவு செய்துள்ளதை காண முடிகிறது. குறிப்பாக, வெளிநாட்டு ஏற்றுமதி அதிகரித்துக் கொண்டே வருவது வெளிநாடுகளில் டிவிஎஸ் மோட்டாரின் ஆதிக்கத்தை அதிகப்படுத்தும். இந்த நிலைமையை தக்க வைத்துக் கொள்ள டிவிஎஸ் நிறுவனம் அடுத்ததாக என்னென்ன வேலைகளை செய்ய உள்ளது என்பதை பார்க்க ஆவலாக உள்ளோம்.


Click it and Unblock the Notifications









