80 கிமீ மைலேஜ்! வெறும் 47 ஆயிரத்துக்கு விக்கறாங்க! இதுக்கு மேல என்னங்க வேணும்!
இந்திய வாடிக்கையாளர்களுக்கு அறிமுகமே தேவை இல்லை என்னும் அளவிற்கு மிகவும் பிரபலமாக இருந்து வரும் டூவீலர்களில் ஒன்று டிவிஎஸ் எக்ஸ்எல் 100 (TVS XL 100). விலை குறைவானது மற்றும் நல்ல மைலேஜ் வழங்க கூடியது ஆகிய 2 முக்கியமான காரணங்களால்தான், டிவிஎஸ் எக்ஸ்எல் 100, இந்திய வாடிக்கையாளர்களின் விருப்பமான தயாரிப்பாக உள்ளது.
அத்துடன் அதிக சரக்குகளை கொண்டு செல்ல முடியும் மற்றும் பராமரிக்க எளிதானது ஆகிய காரணிகளும் கூட, மொபட் ரகத்தை சேர்ந்த டிவிஎஸ் எக்ஸ்எல்100-ன் முக்கியமான ப்ளஸ் பாயிண்ட்கள்தான். ஆனால் நடப்பு 2025ம் ஆண்டு ஜூன் மாதம் டிவிஎஸ் எக்ஸ்எல் 100 மொபட்டிற்கு சரியாக அமையவில்லை.

ஆம், டிவிஎஸ் எக்ஸ்எல்100 மொபட் விற்பனையில் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட்படி (Sales Report) பார்த்தால், டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், நடப்பு 2025ம் ஆண்டு ஜூன் மாதத்தில் 33,349 எக்ஸ்எல் 100 மொபட்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.
ஆனால் கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாதத்தில் 40,397 டிவிஎஸ் எக்ஸ்எல் 100 மொபட்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2025ம் ஆண்டு ஜூன் மாதத்தில், 7,048 டிவிஎஸ் எக்ஸ்எல் 100 மொபட்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 17.45 சதவீத வீழ்ச்சி ஆகும்.

இந்திய சந்தையில் டிவிஎஸ் எக்ஸ்எல் 100 மொபட் தற்போதைய நிலையில் மொத்தம் 4 வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில், ஹெவி ட்யூட்டி வேரியண்ட்டின் விலை 47,754 ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் ஹெவி ட்யூட்டி ஐ-டச்ஸ்டார்ட் வேரியண்ட்டின் விலை 60,405 ரூபாயாக இருக்கிறது.
மறுபக்கம் டிவிஎஸ் எக்ஸ்எல் 100 மொபட்டின் ஹெவி ட்யூட்டி ஐ-டச்ஸ்டார்ட் வின் எடிசன் வேரியண்ட்டின் விலை 63,347 ரூபாயாக உள்ளது. டாப் வேரியண்ட்டான கம்ஃபோர்ட் ஐ-டச்ஸ்டார்ட் வேரியண்ட்டின் விலை 63,705 ரூபாயாக இருக்கிறது. இவை அனைத்துமே எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.
டிவிஎஸ் எக்ஸ்எல் 100 மொபட்டின் மேற்கண்ட் அனைத்து வேரியண்ட்களிலும் 99.7 சிசி இன்ஜின்தான் பொருத்தப்பட்டுள்ளது. டிவிஎஸ் எக்ஸ்எல் 100 மொபட் நடைமுறை பயன்பாட்டில் ஒரு லிட்டருக்கு சுமாராக 80 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குவதாக, அதை பயன்படுத்தி வரும் உரிமையாளர்கள் பலரும் தெரிவிக்கின்றனர்.
எனவே இந்திய சந்தையில் ஓரளவிற்கு குறைவான விலையில், அதிக மைலேஜ் வழங்க கூடிய மற்றும் அதிக அளவிலான சரக்குகளை எடுத்து செல்ல கூடிய வகையிலான ஒரு டூவீலரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு டிவிஎஸ் எக்ஸ்எல் 100 மொபட் நல்ல ஆப்ஷனாக திகழ்கிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் டிவிஎஸ் நிறுவனத்திற்கு சிறப்பான விற்பனை எண்ணிக்கையை ஈட்டி தரும் தயாரிப்புகளில் ஒன்றாக எக்ஸ்எல் 100 மொபட் திகழ்கிறது. எனவே கூடிய விரைவில் டிவிஎஸ் எக்ஸ்எல் 100 மொபட் மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








