இதை 30 வருஷத்துக்கு முன்ன சொல்லி இருந்தா யாரும் நம்பியிருக்க மாட்டாங்க! இளம் வயதில் பைக் கம்பெனிக்கு ஓனர்!!
அல்ட்ராவொய்லெட் (Ultraviolette), பெங்களூருவை சேர்ந்த இவி ஸ்டார்ட்-அப் நிறுவனம். இந்தியாவின் மென்பொருள் தலைநகரமான பெங்களூருவில் பல இவி ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் தோன்றியுள்ளன. அவற்றுள் அல்ட்ராவொய்லெட் நிறுவனமும் ஒன்றாகும். இந்தியாவிலேயே விலையுயர்ந்த முதல் சூப்பர் எலக்ட்ரிக் பைக்கை உருவாக்கிய நிறுவனம், அல்ட்ராவொய்லெட் ஆகும். எஃப்77 (F77) என்கிற பெயரில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட அந்த சூப்பர் எலக்ட்ரிக் பைக்கில் அதன்பின் பல்வேறு வெர்சன்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இருப்பினும், எஃப்77 எலக்ட்ரிக் பைக்கை தாண்டி அல்ட்ராவொய்லெட் வேறு எந்த வாகனத்தையும் அறிமுகம் செய்யாமல் இருந்து வந்த நிலையில், சமீபத்தில் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரையும், குறைந்த விலையில் எலக்ட்ரிக் பைக் ஒன்றையும் அறிமுகம் செய்தது.
டெசராக்ட் (Tessaract), ஷாக்வேவ் (Shockwave) என்கிற பெயரில் புதிய அல்ட்ராவொய்லெட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் எலக்ட்ரிக் பைக் மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டாலும், அவற்றை வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் பணிகள் 2026ஆம் ஆண்டு துவங்கிய பிறகே ஆரம்பிக்கப்பட உள்ளன. இந்த வாகனங்களுக்கான ப்ரீ-புக்கிங்ஸ் நடைபெற்று வருகிறது.

இந்த புதிய வாகனங்களுக்கு மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு கிடைத்து வருவதாக அல்ட்ராவொய்லெட் நிறுவனம் மகிழ்ச்சி உடன் தெரிவித்து வருகிறது. இதற்கு மத்தியில், ஐரோப்பாவிற்குள் நுழைவதற்கும் அல்ட்ராவொய்லெட் நிறுவனம் தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவை காட்டிலும் ஐரோப்பாவில் எஃப்77 போன்ற சூப்பர் எலக்ட்ரிக் பைக்குகளுக்கு நல்ல மார்க்கெட் இருக்கும் என்பதால், ஐரோப்பிய சந்தைக்குள் நுழைய அல்ட்ராவொய்லெட் தீவிரம் காட்டி வருகிறது.
அல்ட்ராவொய்லெட் நிறுவனத்தின் விளம்பர தூதராகவும், முதலீட்டாளராகவும் இருக்கும் பிரபல நடிகர் துல்கர் சல்மான் (Dulquer Salman), எஃப்77 எலக்ட்ரிக் பைக்கை விளம்பரப் படுத்துவதற்காகவே சமீபத்தில் ஐரோப்பாவிற்கு சென்றதை பார்த்து இருந்தோம். ஐரோப்பாவின் பல இடங்களில் அல்ட்ராவொய்லெட் எஃப்77 எலக்ட்ரிக் பைக் உடன் நடிகர் துல்கர் சல்மான் காட்சி தந்து இருந்தார்.

குறிப்பாக, பிரான்ஸ் நாட்டில் தங்களது மார்க்கெட்டை கொண்டுவர அல்ட்ராவொய்லெட் நிறுவனம் மிகவும் விரும்புகிறது. இதனாலேயே, பிரான்ஸ் நாட்டில் இருக்கும் உலக புகழ்பெற்ற ஈபிள் கோபுரத்திற்கு (Eiffel Tower) அருகில் அல்ட்ராவொய்லெட் எஃப்77 எலக்ட்ரிக் பைக்கை நிற்க வைத்து, அதன் அருகே நின்றுக் கொண்டு துல்கர் சல்மான் சில புகைப்படங்களை எடுத்து வெளியிட்டார்.
அதேபோல் தற்போது, அல்ட்ராவொய்லெட் நிறுவனத்தின் சிஇஓ நாராயண் சுப்பிரமணியம் ஈபிள் கோபுரத்திற்கு அருகே எஃப்77 எலக்ட்ரிக் பைக் உடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். கர்நாடகாவில் பிறந்தவரான நாராயண் சுப்பிரமணியம் ஈபிள் கோபுரத்தை நேரில் பார்ப்பது இது ஒன்றும் முதலமுறை அல்ல. 30 வருடங்களுக்கு முன்னர் சிறுவனாக இருந்த போது பெற்றோருடன் இந்த பகுதிக்கு வந்துள்ளார்.
அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படத்துடன், தற்போது தொழில் துவங்கி அதன் மூலம் தயாரிக்கப்பட்ட பைக் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணைத்து அல்ட்ராவொய்லெட் நிறுவன சிஇஓ நாராயண் சுப்பிரமணியம் தனது இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் பதிவிட்டுள்ளார். எதிர்காலத்தில் என்ன நடக்க போகிறது என்பது தெரியாமல் சிறு குழந்தையாக நான் அப்போது ஈபிள் கோபுரம் முன் நின்றிருந்தேன் என நாராயண் சுப்பிரமணியம் தனது இன்ஸ்டா பதிவில் தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த சமயத்தில் யாரேனும் என்னிடம் வந்து ஒருநாள் நீ இங்கு வெறுமனே பார்வையாளராக வராமல், கஷ்டப்பட்டு உருவாக்கிய மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்ய வருவாய் என கூறியிருந்தால் நம்பியிருக்க மாட்டேன் என்றும் நாராயண் சுப்பிரமணியம் தனது இன்ஸ்டா பதிவில் குறிப்பிட்டுள்ளார். இன்ஸ்டாகிராம் மட்டுமின்றி, இந்த பதிவை லிங்க்டுஇன் (LinkedIn) செயலியிலும் நாராயண் சுப்பிரமணியம் பதிவிட்டுள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒருவரது வாழ்க்கை சிறு வயதில் இருந்து இளம் வயதிற்கு உள்ளாகவே எந்த அளவிற்கு மாறக்கூடும் என்பதற்கு அல்ட்ராவொய்லெட் நிறுவனத்தின் சிஇஓ நாராயண் சுப்பிரமணியத்தின் வாழ்க்கை சிறந்த உதாரணம் ஆகும். சிறு வயதில் பிடித்த ஊரில் தொழில் துவங்க யாருக்குத்தான் பிடிக்காமல் இருக்கும். சமீபத்தில் ஐரோப்பாவில் விற்பனை துவங்கப்பட்டுள்ள அல்ட்ராவொய்லெட் எஃப்77 எலக்ட்ரிக் பைக்குகள் குறிப்பாக பிரான்ஸ் நாட்டில் சிறப்பான வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications








