இந்திய பைக் கம்பெனினு நாம் கெத்தா காலர தூக்கி விடலாம்! பல பைக் கம்பெனிகள் உருவான நாடு...!
அட்வான்ஸ்டு தொழிற்நுட்பங்கள் உடன் எலெக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் பேட்டரி தொழில்நுட்ப கண்டுப்பிடிப்புகளில் தீவிரமாக ஈடுப்பட்டு வரும் அல்ட்ராவயலட் (Ultraviolette) நிறுவனம், அதன் விலையுயர்ந்த, முதன்மையான செயல்திறன்மிக்க மோட்டார்சைக்கிள்களான எஃப்77 மேக் 2 ரெகன் (F77 MACH 2 RECON) மற்றும் எஃப்77 சூப்பர்ஸ்ட்ரீட் ரெகன் (F77 SuperStreet RECON) ஆகியவற்றை யுனிடெட் கிங்டமில் (UK) விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவின் பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அல்ட்ராவயலட் நிறுவனம், அதன் சூப்பர் எலெக்ட்ரிக் பைக்குகளுக்கு ஏற்ற ஐரோப்பிய நாட்டு சந்தைகளில் தனது காலடி தடத்தை பதித்து வருகிறது. இந்த வரிசையில், யுனிடெட் கிங்டம் வரையிலான இந்த முக்கிய விரிவாக்கம், யுகே-இல் அல்ட்ராவயலட் நிறுவனத்தின் பிரத்யேக விநியோக கூட்டணி நிறுவனமான மோட்டோமோண்டோ (MotoMondo) உடனான கூட்டு முயற்சியாகும்.

விமானத் தொழிற்நுட்ப உலகத்தால் கவரப்பட்டு அதில் இருந்து உத்வேகம் பெற்று உருவாக்கப்பட்ட அல்ட்ராவயலட்டின் எஃப்77 எலெக்ட்ரிக் பைக்குகள் அதிநவீன தொழில்நுட்பத்தை பிரிட்டிஷ் சாலைகளுக்கு கொண்டுவந்துள்ளன. அதற்கேற்ப இந்த எஃப்77 பைக்குகள் எதிர்கால வடிவமைப்பைக் கொண்டுள்ளன. இதன் ஏரோடைனமிக் பாடிவொர்க், செயல்திறன் மற்றும் கவர்ச்சிகரமான பயண அனுபவத்தை வழங்குகின்றன.
எஃப்77 மேக் 2 எலெக்ட்ரிக் பைக் ஆனது ரேஸ் டிராக்கிற்கு ஏற்ற உறுதியான தோற்றத்துடன் ஜாலியான பயணத்தை விரும்புபவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. மறுப்பக்கம், எஃப்77 சூப்பர்ஸ்ட்ரீட் ஆனது நிதானமான, நேர்மையான பயண நிலைப்பாட்டையும், மேம்பட்ட பயண சூழலையும் வழங்குகிறது. இது தினசரி பயன்பாட்டை பாதிக்காமல் உற்சாகத்தை தருகிறது.

யுகே-இல் களமிறங்கி இருப்பது குறித்து அல்ட்ராவயலட் நிறுவனத்தின் சிஇஓ மற்றும் இணை நிறுவனர் நாராயண் சுப்ரமணியம் கூறுகையில், "இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஐரோப்பா முழுவதும் எஃப்77 பைக்குகளை அறிமுகம் செய்ததன் மூலம் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளோம். அதைத் தொடர்ந்து EICMA-வில் எங்கள் எதிர்கால தயாரிப்புகளை காட்சிப்படுத்தினோம்.
இன்று, மோட்டார்சைக்கிள் மரபுகளுக்குப் பெயர்போன யுகே-இல் எஃப்77 அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். யுகே-இல் உள்ள ஓட்டுநர்களுக்கு மேம்பட்ட செயல்திறன் மற்றும் புதுமைகளை நாங்கள் கொண்டு வருவதில் இது எங்களுக்கு ஒரு பெருமையான தருணம். இங்கிலாந்து-இந்தியா சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் முன்னேறி வருவதால், மேம்பட்ட மொபிலிட்டி தொழில்நுட்பத்தை இப்பகுதிக்கு கொண்டு வருவதையும், எல்லை தாண்டிய ஒத்துழைப்பையும் இது மேலும் மேம்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்."

எஃப்77 எலெக்ட்ரிக் பைக் அதிகப்பட்சமாக 30 கிலோவாட்ஸ் ஆற்றல் மற்றும் 100 என்.எம் டார்க் திறன் உடன் ஈர்க்கக்கூடிய செயல்திறனை வழங்குகிறது. இது விரைவான ஆக்ஸலரேஷன், சுறுசுறுப்பான ஹேண்ட்லிங் மற்றும் மணிக்கு 155 கி.மீ உச்சப்பட்ச வேகத்தை சாத்தியமாக்குகிறது. 10.3 kWh பேட்டரி பேக் மூலம் இயக்கப்படும் இந்த எலெக்ட்ரிக் பைக் ஒருமுறை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 323 கி.மீ (IDC) வரையிலான ரேஞ்சை வழங்குகிறது.
அல்ட்ராவயலட்டின் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களில், நிறுவனத்தின் தனியுரிம செயற்கை நுண்ணறிவு அமைப்பான Violette AI மற்றும் போஸ்ச் (Bosch) நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஸ்விட்ச் செய்யக்கூடிய டூயல்-சேனல் ABS உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்பங்கள் பொருத்தப்படுகின்றன.

10 நிலைகளில் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங், 4 நிலைகளில் டிராக்ஷன் கண்ட்ரோல், டைனமிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் மற்றும் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் மேம்பாட்டு தொகுப்பு போன்ற கூடுதல் மேம்பட்ட அம்சங்கள், அல்ட்ராவயலட் எலெக்ட்ரிக் பைக்குகளில் அறிவார்ந்த, பாதுகாப்பான மற்றும் உற்சாகமான பயண அனுபவத்தை உறுதி செய்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: யுகே மார்க்கெட்டிற்குள் நுழைந்திருப்பது, அல்ட்ராவயலட் நிறுவனத்தின் சர்வதேச வளர்ச்சியில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைகிறது. இவ்வாறான உலகளாவிய விரிவாக்கத் திட்டங்களைத் தொடர்ந்து, வலுவான முதலீட்டாளர்கள் மற்றும் மேம்பட்ட ஆராய்ச்சி & மேம்பாட்டுத் திறன்கள் உடன், செயல்திறன்மிக்க எலெக்ட்ரிக் வாகனப் பிரிவில் தனது இருப்பை அல்ட்ராவயலட் உறுதிப்படுத்தி வருகிறது.


Click it and Unblock the Notifications









