இந்தியாவிலேயே முதல் ஆளா டெலிவிரி எடுக்கும்போது மகிழ்ச்சி தாங்கல! ஓசூரில் உருவாகும் எலக்ட்ரிக் பைக்!
அல்ட்ராவயலட் (Ultraviolette) நிறுவனம், கடந்த செப்டம்பர் மாதத்தில் தனது எக்ஸ்47 க்ராஸ்ஓவர் எலக்ட்ரிக் பைக்கை ரூ.2.49 லட்சம் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகப்படுத்தியது. முதல் 1000 முன்பதிவுகளுக்கு மட்டுமே இந்த விலை பொருந்தும் என அறிவிக்கப்பட்டாலும், இந்த எலக்ட்ரிக் பைக் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
அறிமுகமாகி ஒரு மாதத்திற்குள், எக்ஸ்47 பைக்குகளை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. அதன்படி தற்போது, முதற்கட்டமாக சில எக்ஸ்47 வாடிக்கையாளர்கள் தங்கள் புதிய பைக்குகளை வீட்டிற்கு ஓட்டிச் செல்லும் படங்கள் மற்றும் வீடியோக்களை அல்ட்ரா வயலட் நிறுவனம் தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்துள்ளது.

அல்ட்ராவயலட் நிறுவனத்தின் இந்தப் பதிவின்படி, இரண்டு கருப்பு நிற பைக்குகளும், ஒரு வெள்ளை நிற பைக்கும் என மொத்தம் மூன்று பைக்குகள் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த இரு நிறங்கள் மட்டுமின்றி, எக்ஸ்47 பைக் சிவப்பு நிறத்திலும் கிடைக்கிறது. பெங்களூருவில் டெலிவரி நிகழ்ச்சிகளை உரிமையாளர்களுக்கு மறக்க முடியாத ஒன்றாக மாற்ற அல்ட்ராவயலட் நிறுவனம் முயற்சி எடுத்திருந்தது.
அதன்படி, ஆரவாரமான வரவேற்பு, பட்டாசுகள் மற்றும் மகிழ்ச்சிக்கு மத்தியில் பைக்குகள் கஸ்டமர்களுக்கு வழங்கப்பட்டன. "முதல் X-47கள் வெளிவந்துவிட்டன, உற்சாகமும் எதிர்பார்ப்பும் எல்லாவற்றையும் சொல்லிவிடுகின்றன!" என்று அல்ட்ராவயலட் நிறுவனம் தனது சமூக வலைத்தள பதிவுகளில் குறிப்பிட்டுள்ளது. இந்த நிகழ்வில் மோட்டார்சைக்கிளைப் பெற்ற உரிமையாளர்களில் ஒருவரான சமர் என்பவர், எக்ஸ்47 பைக்கைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணத்தை விளக்கும் ஒரு வீடியோவும் அல்ட்ராவயலட் நிறுவனத்தின் சமூக வலைத்தள பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.

சமரின் முந்தைய பைக் ஹோண்டா சிபி500எக்ஸ் ஆகும். அதன் செயல்திறன் மற்றும் தரத்திற்காக ஹோண்டா சிபி500எக்ஸ் பலரால் விரும்பப்பட்ட ஒரு பைக் என்றாலும், இந்தியாவில் அதன் விலை சற்று அதிகமாகவே இருந்தது. ஆனால், கிட்டத்தட்ட அதற்கு இணையான செயல்படுதிறன் உடன் உருவாக்கப்பட்டுள்ள அல்ட்ராவயலட் எக்ஸ்47 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.2.49 லட்சத்தில் இருந்து நிர்ணயிக்கப்பட்டு உள்ளன.
பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அல்ட்ராவயலட் தனது முதல் எலக்ட்ரிக் பைக்காக எஃப்77 பைக்கை 2022இல் அறிமுகப்படுத்தியதில் இருந்து அதைக் கவனித்து வருவதாக சமர் குறிப்பிட்டுள்ளார். எஃப்77 தொடர்பான அனைத்து நிகழ்வுகளையும் அவர் கண்காணித்து வந்துள்ளார். காலப்போக்கில் F77 பைக்குகள் வரிசை விரிவடைந்த நிலையில், எக்ஸ்47ஐ தனது முதல் எலக்ட்ரிக் பைக்காகத் தேர்வு செய்ய சமர் முடிவு செய்தார்.

தற்போது, இந்தப் பைக்கை நகரத்திற்குள் பயன்படுத்துவதே தனது முக்கிய நோக்கம் என்று சமர் கூறியுள்ளார். மேலும், டெஸ்ட் ரைடின் போது பைக் மிகவும் வசதியாக இருந்ததாகவும் தெரிவித்தார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக பைக் ஓட்டும் அனுபவம் கொண்ட சமர், அல்ட்ராவயலட் ஐரோப்பிய சந்தையில் நுழைந்துள்ளது தன்னை மிகவும் கவர்ந்ததாகக் கூறினார்.
எக்ஸ்-47, அல்ட்ராவயலட் நிறுவனத்தின் ஐந்தாவது தயாரிப்பாகும். இது ஒரு தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இதன் ஹெட்லைட்கள் எஃப்77 பைக்கில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன. பாடி பேனல்கள் கோண வடிவமைப்பைக் கொண்டுள்ளன. மேலும் இருக்கை ஒரே துண்டாக உள்ளது. கவர்ச்சிகரமான, உயரமான விண்ட்ஷீல்டு, உயர்ந்த ஹேண்டில்பார் மற்றும் நக்கிள் கார்டுகள் இதன் பிற சிறப்பம்சங்களாகும்.

அல்ட்ராவயலட் நிறுவனம் எக்ஸ்-47 பைக்கிற்கான பல்வேறு ஆக்சஸரீஸ்களையும் வழங்குகிறது. எக்ஸ்-47 பைக்கில் ADAS, டாஷ்போர்டு கேமரா, டூயல்-சேனல் ABS, நான்கு-நிலை டிராக்ஷன் கண்ட்ரோல், டைனமிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், பல ரைடிங் மற்றும் ரீஜெனரேட்டிவ் மோட்கள், கனெக்டிவிட்டி அம்சங்கள், ரைடர் டிஸ்ப்ளே மற்றும் ADAS டிஸ்ப்ளே என இரண்டு ஸ்கிரீன்கள் போன்ற பல அம்சங்கள் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: அல்ட்ராவயலட் நிறுவனம் தனது புதிய எக்ஸ்47 எலக்ட்ரிக் பைக் மீது பலத்த நம்பிக்கையை கொண்டுள்ளது. இத்தகைய பைக்கின் டெலிவிரிகள் துவங்கப்பட்டு உள்ளதால், இனி இதனை பொது சாலைகளில் காணலாம். இந்த எலக்ட்ரிக் பைக்கை முன்பதிவு செய்தவர்கள், டெலிவிரி குறித்த விபரங்களை அறிய அருகில் உள்ள அல்ட்ராவயலட் ஷோரூமை அணுகவும்.


Click it and Unblock the Notifications









