ரூ.1.40 லட்சம் விலையை பார்த்து மெர்சலாகாதீங்க... டேஸ்போர்டு கேமரா உடன் ஸ்கூட்டரை பார்த்து இருக்கீங்களா?
சுருக்கமாக வி.எல்.எஃப் (VLF) என அழைக்கப்படும் வெலோசிஃபெரோ (Velocifero) நிறுவனம் இந்தியாவில் அடுத்ததாக ரூ.1.40 லட்சத்தில் சற்று விலைமிக்க மற்றொரு ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய உள்ளது. 'மொப்ஸ்டர்' (Mobster) என அழைக்கப்படும் இந்த இத்தாலியன் ஸ்டைல் ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு வர இருப்பதாக ஏற்கனவே கூறப்பட்டு வந்தாலும், சரியாக எந்த நேரத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளது என்பது தெரியாமலேயே இருந்த வந்த நிலையில், தற்போது அதுகுறித்த தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் இத்தாலியன்-ஸ்டைல் ஸ்கூட்டர்களுக்கு பஞ்சமே இல்லை. ஏப்ரிலியா (Aprilia), வெஸ்பா (Vespa) உள்ளிட்ட இத்தாலிய ஸ்கூட்டர் நிறுவனங்கள் இந்தியாவில் ஏற்கனவே அதன் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகின்றன. இவற்றை தொடர்ந்து வி.எல்.எஃப் நிறுவனமும் இந்திய மார்க்கெட்டில் வலுவாக கால்பதிக்க ஆயத்தமாகி வருகிறது.

இந்தியாவின் மோட்டோஹாஸ் (Motohaus) என்கிற குழுமத்தின் கீழ் விஎல்எஃப் நிறுவனம் செயல்படுகிறது. வி.எல்.எஃப் மட்டுமின்றி, இந்தியாவில் பைக்குகளை விற்பனை செய்யும் பிரிக்ஸ்டன் (Brixton) என்கிற ஆஸ்திரிய நாட்டு பைக் நிறுவனத்தையும் இந்தியாவின் கொல்ஹாபுர் என்கிற பகுதியில் 1962இல் தோன்றிய மோட்டோஹாஸ் நிர்வகிக்கிறது.
விஎல்எஃப் நிறுவனத்தில் இருந்து முதல் ஸ்கூட்டராக டென்னிஸ் (Tennis) இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தனது 2வது ஸ்கூட்டரை விஎல்எஃப் நிறுவனம் இந்தியாவில் களமிறக்க உள்ளது. அதுதான், மொப்ஸ்டர் ஆகும். வருகிற தீபாவளி சமயத்தில் விஎல்எஃப் மொப்ஸ்டர் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தற்போது மோட்டோஹாஸ் நிறுவனத்தின் நிறுவனர் தெரிவித்துள்ளார்.
விஎல்எஃப் மொப்ஸ்டர் ஆனது பத்தோடு பதினொன்றாக சேர்க்கக்கூடிய ஸ்கூட்டர் கிடையாது. மற்ற ஸ்கூட்டர்களில் கிடைக்காத பல தனித்துவமான அம்சங்களை கொண்டதாக வி.எல்.எஃப் மொப்ஸ்டர் விளங்குகிறது. இந்த ஸ்கூட்டரில் லிக்யுடு-கூல்டு சிஸ்டத்துடன் என்ஜின், ஸ்விட்ச் செய்யக்கூடிய ஏபிஎஸ் மற்றும் ஸ்கூட்டருடன் தொழிற்சாலையிலேயே இணைக்கப்பட்ட கேமரா உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளதாக மோட்டோஹாஸ் நிறுவனர் துஷார் ஷெல்கே உறுதிப்படுத்தி உள்ளார்.

இவை எல்லாவற்றையும் விட, மொப்ஸ்டர் ஸ்கூட்டரை அசத்தலான தோற்றமே பார்க்கும் எவரொருவரையும் கவர்ந்துவிடக் கூடியது ஆகும். குறிப்பாக, இந்திய இளம் தலைமுறையினரை டார்க்கெட் செய்துதான் மொப்ஸ்டரை விஎல்ஃப் நிறுவனம் களமிறக்குகிறது. முன்பக்கத்தில் இரட்டை எல்இடி ஹெட்லைட்களை டி.ஆர்.எல்-கள் உடன் கொண்டிருக்கும் இந்த ஸ்கூட்டரின் முன்பக்கத்தில் பெரிய அளவிலான ஃபிளைஸ்க்ரீன் வழங்கப்படுகிறது.
கேமராவை பொருத்துவதற்கு ஏற்ப ஸ்கூட்டரின் ஹேண்டில்பார் நன்கு அகலமானதாக இந்த ஸ்கூட்டரில் கொடுக்கப்படுகிறது. இந்தியாவில் எந்த என்ஜின் உடன் மொப்ஸ்டர் ஸ்கூட்டரை விற்பனை செய்ய உள்ளது என்பதை விஎல்எஃப் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. ஏனெனில், இத்தாலியில் 125சிசி மற்றும் 180சிசி என்ஜின் ஆப்ஷன்களில் மொப்ஸ்டர் விற்பனை செய்யப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பொதுவாகவே இத்தாலியன்-ஸ்டைல் ஸ்கூட்டர்கள் பார்க்க நன்கு அழகாக இருக்கும். இருப்பினும், அதற்கேற்ப விலைமிக்கவை ஆகவும் இருக்கும். இருப்பினும், ஏப்ரிலியா, வெஸ்பா நிறுவனங்கள் பரந்து விரிந்த இந்திய மார்க்கெட்டில் ஓரளவுக்கு கவனத்தை பெற்றுள்ளதால், அதே நம்பிக்கையில் விஎல்எஃப் நிறுவனமும் இந்தியாவுக்கு வருகிறது.
Source: Auto Hindustan (https://auto.hindustantimes.com/)


Click it and Unblock the Notifications








