150கிமீ தொலைவுக்கு சார்ஜ் கவலையே இல்லை! பேட்டரியை மாற்றினாலும் விலை அதிகரிப்பு இல்லாமல் விற்கப்படும் ஸ்கூட்டர்
வி.எல்.எஃப் இந்தியா (VLF India) நிறுவனத்தில் இருந்து சிறப்பாக விற்பனையாகி வரும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர், டென்னிஸ் 1500 (Tennis 1500) ஆகும். மிகவும் ஸ்டைலிஷான தோற்றம் கொண்ட டென்னிஸ் 1500 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை புத்துணர்ச்சியான தோற்றத்திற்கு விஎல்எஃப் நிறுவனம் அப்டேட் செய்து தற்போது அறிமுகம் செய்துள்ளது.
புதிய விஎல்எஃப் டென்னிஸ் 1500 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ரேஞ்ச் அதிகரிக்கப்பட்டு இருப்பதுடன், ஸ்மார்ட்டான வசதிகள் மற்றும் புத்துணர்ச்சியான கலர் ஆப்ஷன்கள் 2025ஆம் ஆண்டை முன்னிட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. புதிய டென்னிஸ் 1500 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.29 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

பொதுவாக, இவ்வாறு ஸ்கூட்டர் அப்கிரேட் செய்யப்பட்டால் அதற்கேற்ப ஸ்கூட்டரின் விலையும் அதிகரிக்கப்படுவது வழக்கம். ஆனால், டென்னிஸ் 1500 எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் அவ்வாறான எந்த விலை அதிகரிப்பையும் விஎல்எஃப் நிறுவனம் கொண்டுவரவில்லை. அதாவது, டென்னிஸ் 1500 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் முந்தைய எக்ஸ்-ஷோரூம் விலையும் ரூ.1.29 லட்சமே ஆகும்.
முந்தைய டென்னிஸ் 1500 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை காட்டிலும் புதிய மாடல் ஷார்ப்பான டிசைனில், முன்பை விட கூடுதல் தூரத்திற்கு இயங்கக்கூடியதாக உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்கூட்டரின் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 130கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம் என்று முன்பு இருந்த நிலையில், இனி 20கிமீ அதிகமாக 150கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம்.
இதற்கேற்ப புதிய லித்தியம் மாங்கனீசு இரும்பு பாஸ்பேட் (LMIP) பேட்டரி பேக் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் அலுமினியத்திலான கூட்டிற்குள் வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய பேட்டரி மூலமாக அதிக ரேஞ்ச் கிடைத்திருப்பது மட்டுமின்றி, ஸ்கூட்டரின் ஹேண்ட்லிங் மற்றும் பாதுகாப்பும் மேம்பட்டு இருப்பதாக விஎல்எஃப் நிறுவனம் தெரிவிக்கிறது.
இவற்றுடன் டென்னிஸ் 1500 எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் புதியதாக மொபைல் போன் சார்ஜிங் வசதியும் சேர்க்கப்பட்டு உள்ளது. ஸ்லேட் நீலம் மற்றும் எபோனி கருப்பு என்கிற இரு கலர் ஆப்ஷன்களில் புதிய டென்னிஸ் 1500 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கலாம். இது இல்லாமல், ஃபையர் ஃபர்ரி டார்க் மற்றும் ஸ்னோஃபிளேக் வெள்ளை என்கிற வழக்கமான கலர் ஆப்ஷன்களிலும் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் கிடைக்கும்.
இவை தவிர்த்து, டென்னிஸ் 1500 எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் மற்ற அம்சங்கள் அனைத்தும் ஏற்கனவே வழங்கப்பட்டு வருபவையே ஆகும். எடை குறைவான ஃப்ரேமில் உருவாக்கப்படும் டென்னிஸ் 1500 எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 12 இன்ச்சில் அலாய் சக்கரங்களும், முன்பக்கத்தில் டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் மோனோஷாக்கும் சஸ்பென்ஷனுக்கு வழங்கப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: உண்மையை சொல்ல வேண்டுமென்றால், விஎல்எஃப் டென்னிஸ் 1500 என்கிற எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை செய்யப்படுவதே நம்மில் நிறைய பேருக்கு தெரியவில்லை. ஆனால், டென்னிஸ் 1500 ஆனது மிகவும் ஸ்டைலிஷான மற்றும் ஓட்டுவதற்கு இலகுவான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும். தற்போது சூப்பராக அப்கிரேட் செய்யப்பட்டுள்ளதால், புதிய டென்னிஸ் 1500 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுக்கும் என எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications








