வெடிய போட்டு கொண்டாடுங்க... நீண்ட வருடங்களாக இந்திய இளைஞர்கள் எதிர்பார்த்த யமஹா பைக்!!
யமஹா (Yamaha) நிறுவனம், நீண்டகாலமாக இந்திய இளைஞர்களால் எதிர்பார்க்கப்பட்ட எக்ஸ்.எஸ்.ஆர்155 (XSR155) மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. பிரபலமான யமஹா ஆர்15 மற்றும் எம்டி-15 (MT-15) பைக்குகளின் புதிய-ரெட்ரோ வகையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இது ரூ.1.50 லட்சம் விலையில் கிடைக்கும். இந்த புதிய அட்டகாசமான யமஹா பைக்கை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஜப்பான் நாட்டை சேர்ந்த யமஹா நிறுவனம் இந்தியாவிலும் முன்னணி 2-வீலர் உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றாக உள்ளது. பெரிய அளவிற்கு இல்லையென்றாலும், யமஹாவில் இருந்து ஒவ்வொரு மாதமும் கணிசமான எண்ணிக்கையிலான இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. குறிப்பாக, யமஹா ஆர்15, எம்டி-15 பைக்குகளுக்கு இந்திய இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது.

இருப்பினும், யமஹாவின் சமூக வலைத்தள பதிவுகளில் எல்லாம் பார்த்தால், குறைந்தது ஒருவராவது எக்ஸ்.எஸ்.ஆர்155 பைக்கின் அறிமுகம் குறித்து கேள்வி எழுப்பி இருப்பார். சில பதிவுகளில் முழுக்கவே எக்ஸ்.எஸ்.ஆர்155 பைக் குறித்த கமெண்ட்களை பார்க்க முடியும். இந்த அளவிற்கு, இளைஞர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த யமஹா எக்ஸ்.எஸ்.ஆர்155 ஒருவழியாக இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஆர்15 மற்றும் எம்டி-15 பைக்குகளில் உள்ள அதே 155சிசி சிங்கிள் சிலிண்டர் லிக்யூடு-கூல்டு என்ஜினுடன் எக்ஸ்.எஸ்.ஆர்155 வந்துள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 10,000rpm-ல் 18.4 எச்பி சக்தியையும், 7,500rpm-ல் 14.1 என்.எம் டார்க் திறனையும் வழங்குகிறது. இது 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. அதேபோல், புதிய எக்ஸ்.எஸ்.ஆர்155 பைக் உடன் ஆர்15 மற்றும் எம்டி-15 பைக்குகள் தங்களது பெரிமீட்டர் சேஸ் அமைப்பை (யமஹா மொழியில் டெல்டாபாக்ஸ்) பகிர்ந்து கொண்டுள்ளன.

இந்த சேஸில் USD ஃபோர்க்குகள் மற்றும் மோனோஷாக் சஸ்பென்ஷன் மூலம் எக்ஸ்.எஸ்.ஆர்155 பைக்கின் உடல் பகுதி நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த பைக்கின் எடை 137 கிலோ ஆகும். இது எம்டி-15 பைக்கை விட 4 கிலோ குறைவு ஆகும். மேலும், இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 120மிமீ ஆக உள்ளது. இது எம்டி-15ஐ விட 50 மிமீ குறைவு.
எக்ஸ்.எஸ்.ஆர்155 பைக்கின் தனித்துவமான புதிய-ரெட்ரோ ஸ்டைலிங், மற்ற 155சிசி பைக்குகளில் இருந்து இதனை வேறுபடுத்துகிறது. இதில் வட்ட வடிவ LED ஹெட்லேம்ப், வட்ட வடிவ LED டெயில் லைட் மற்றும் 10 லிட்டர் கண்ணீர்துளி வடிவ பெட்ரோல் டேங்க் ஆகியவை உள்ளன. டேங்கில் பிராண்டின் லோகோவுக்கு பதிலாக யமஹா என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.

இந்த பைக்கில், எம்டி-15 மற்றும் ஆர்15 பைக்குகளில் உள்ள இரண்டு-பகுதியான இருக்கைக்கு மாறாக, தட்டையான ஒற்றை-பகுதி இருக்கை உள்ளது. பைக்கிற்கு ரெட்ரோ தோற்றத்தை வழங்கும் வகையில் உள்ள இந்த இருக்கை அமைப்பு தான் இளைஞர்கள் பலருக்கு எக்ஸ்.எஸ்.ஆர்155-இல் பிடித்த விஷயமாக உள்ளது. மற்றப்படி, எம்டி-15 மற்றும் ஆர்15 பைக்குகளுடன் ஒப்பிடுகையில், இந்த பைக்கின் பாதுகாப்பு அம்சங்களில் எந்த மாற்றமும் இல்லை;
இதன்படி, டூயல்-சேனல் ABS மற்றும் டிராக்ஷன் கண்ட்ரோல் ஆகியவை எக்ஸ்.எஸ்.ஆர்155 பைக்கிலும் தொடரப்பட்டுள்ளது. ஹேண்டில்பாருக்கு மத்தியில் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் திரை ஆனது தற்போது எஃப்.இசட்-எக்ஸ் ஹைப்ரிட், எஃப்.இசட்-எஸ் ஃபியுல்-இன்ஜெக்டட் ஹைப்ரிட் பைக்குகள் மற்றும் ஃபாசினோ ஸ்கூட்டர் போன்ற மற்ற யமஹா தயாரிப்புகளில் உள்ள TFT டிஸ்பிளேவுக்கு பதிலாக, இந்த பைக்கில் LCD டாஷ் திரையாக வழங்கப்பட்டுள்ளது.

ரூ.1.50 லட்சம் விலையில் கிடைக்கும் எக்ஸ்.எஸ்.ஆர்155, எம்டி-15 பைக்கின் அடிப்படை வேரியண்ட்டை விட ரூ.5,000 விலை குறைவானது. ஒரேயொரு வேரியண்ட்டில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ள எக்ஸ்.எஸ்.ஆர்155 பைக்கை நீலம், சாம்பல் கலந்த பச்சை, சிவப்பு மற்றும் மெட்டாலிக் சில்வர் ஆகிய நான்கு கலர் ஆப்ஷன்களுள் ஒன்றில் வாங்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இளைஞர்களின் வேண்டுக்கோளை ஏற்று ஒருவழியாக யமஹா நிறுவனம் அதன் எக்ஸ்.எஸ்.ஆர்155 பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்திருப்பது மகிழ்ச்சியான விஷயமாகும். இருப்பினும், விலையை இன்னும் கொஞ்சம் குறைவானதாக எதிர்பார்த்தோம். எப்படியிருந்தாலும், வரும் மாதங்களில் இந்த புதிய யமஹா பைக்கை அதிகம் பேர் வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், இன்னும் கொஞ்ச காலத்தில் இந்திய சாலைகள் முழுவதும் இந்த பைக் தான் சுற்றிக் கொண்டு இருக்க போகிறது.


Click it and Unblock the Notifications









