சென்னையில் எத்தனை பேரது வாழ்க்கையை மாற்றியிருக்கு... யமஹாவுக்கு தமிழ்நாட்டை விட்டு போக மனசே வராது!!
யமஹா (yamaha) நிறுவனம் சென்னையில் தொழிற்சாலை கொண்டிருப்பதை உங்களில் பலர் அறிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். சென்னைக்கு அருகே ஸ்ரீபெரும்புதூரில் 2015ஆம் ஆண்டில் 2-வீலர் உற்பத்தி தொழிற்சாலையை யமஹா நிறுவியது. இந்த வகையில் பார்த்தால், யமஹா நிறுவனத்தின் சென்னை தொழிற்சாலை நிறுவப்பட்டு 10 வருடங்கள் நிறைவடைந்து விட்டது. இதனை தற்போது யமஹா மோட்டார் இந்தியா நிறுவனம் கொண்டாடி வருகிறது. மேலும், மற்றொரு சாதனைக்காகவும் சென்னை தொழிற்சாலையில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தி யமஹா கொண்டாடியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
உலகளவில் சென்னையின் அடையாளமாக இருப்பது அதன் தொழில்துறை ஆகும். இந்தியாவின் மென்பொருள் தலைநகரம் பெங்களூரு என்றால், தொழில்துறை தலைநகரம் சென்னை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில், அந்த அளவிற்கு பல தொழில் நிறுவனங்கள் சென்னையை சுற்றிலும் தங்களது தொழிற்சாலைகளையும், தலைமையகங்களையும் கொண்டுள்ளன.

ஆட்டோமொபைல் துறையை பொறுத்தவரையில், ஹூண்டாய் (Hyundai), ஃபோர்டு (Ford) மற்றும் யமஹா உள்ளிட்ட நிறுவனங்கள் சென்னைக்கு அருகே தொழிற்சாலையை கொண்டுள்ளன. இதற்கு முக்கிய காரணம், மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி அவர்கள் சென்னைக்கு அருகே ஏற்படுத்திய சிப்காட் பூங்காக்கள் ஆகும். இந்த சிப்காட் பூங்காக்களில் முக்கியமானது, ஸ்ரீபெரும்புதூரில் இருப்பது ஆகும்.
ஸ்ரீபெரும்புதூரில் ஒரு சிப்காட் கிராமமே செயல்பட்டு வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும். இந்த சிப்காட் கிராமத்தில்தான் ஹூண்டாயின் பிரம்மாண்டமான கார் உற்பத்தி தொழிற்சாலை அடங்கி இருப்பதுடன், யமஹாவின் உற்பத்தி தொழிற்சாலையும் உள்ளது. 2015ஆம் ஆண்டில் யமஹா நிறுவிய இந்த தொழிற்சாலை ஆனது சுமார் 177 பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது.

மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் வாகனங்களை உற்பத்தி செய்வது செலவு குறைந்ததாக உள்ளதால், பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவை ஓர் வாகன உற்பத்தி மையமாக பயன்படுத்தி வருகின்றன. அந்த வகையில், யமஹாவும் தனது உலகளாவிய தேவைக்காக சென்னை தொழிற்சாலையை கடந்த 10 வருடங்களில் அதிகமாக பயன்படுத்தி உள்ளது.
இன்னும் சொல்லப்போனால், சென்னை யமஹா தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படுபவைகளில் 30 சதவீத யமஹா இருசக்கர வாகனங்கள் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதற்கேற்ப ஸ்ரீபெரும்புதூரில் இருந்து சென்னை துறைமுகம் அருகாமையில் இருப்பது யமஹாவுக்கு பெரிதும் வசதியாக உள்ளது. இத்தகைய தொழிற்சாலையில் 10 வருடங்களை நிறைவு செய்யும் யமஹா நிறுவனம், சென்னை தொழிற்சாலையில் 50 இலட்சமாவது இருசக்கர வாகனத்தை உற்பத்தி செய்து வெளியேற்றி அதனையும் தொழிற்சாலையில் கொண்டாடி உள்ளது.
சென்னை யமஹா தொழிற்சாலையில் இருந்து 50 இலட்சமாவது 2-வீலராக யமஹா ஏரோக்ஸ் 155 வெர்சன் எஸ் (Aerox 155 Version S) ஸ்கூட்டர் முழுவதும் உற்பத்தி செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளது. ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டருக்கே உண்டான நீல நிறத்தில் உருவாக்கப்பட்ட அந்த ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டர் உடன் யமஹா தொழிற்சாலை பணியாளர்கள் எடுத்துக் கொண்ட படங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
யமஹாவின் சென்னை தொழிற்சாலையில் ரே இசட்.ஆர்125 (RayZR 125), ஃபேஸினோ 125 (Fascino 125) மற்றும் செயல்திறன்மிக்க ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டர்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதேபோல், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான எஃப்.இசட் (FZ) மற்றும் சல்யூடோ (Saluto) பைக்குகளும், ஆல்பா (Alpha) ஸ்கூட்டர்களும் இந்த தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் யமஹா நிறுவனத்தின் வளர்ச்சிக்கு சென்னை தொழிற்சாலை மிக முக்கியமான பங்கு வகிக்கிறது என சொன்னால் அது மிகையில்லை. குறிப்பாக, ஆப்பிரிக்க மற்றும் மற்ற தெற்காசிய நாடுகளுக்கு வாகனங்களை அனுப்பி வைப்பதில் சென்னை தொழிற்சாலையை தான் யமஹா பெரிதும் நம்பி உள்ளது. இத்தகைய தொழிற்சாலையில் 10 வருடங்களை நிறைவு செய்திருக்கும் யமஹா, இதனை இன்னும் பல வருடங்களுக்கு தொடரும் என எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications








