யமஹாவின் குறி இந்த முறை தப்பாது... ஆர்15 பைக்கிற்கு பதிலாக வர போகுதா? இதை நாம எதிர்பார்க்கவே இல்லையே!
யமஹா (Yamaha) நிறுவனம் அதன் 'ஒய்.இசட்.எஃப்-ஆர்2' (YZF-R2) பெயரை இந்தியாவில் வர்த்தக முத்திரையாகப் பதிவு செய்துள்ளது. அதாவது, இந்த பெயரில் எந்தவொரு பைக்கையும் இந்தியாவில் யமஹா நிறுவனத்தால் அறிமுகப்படுத்த முடியும். இதனை, மார்க்கெட்டில் பிரபலமான ஆர்15 (R15) பைக்கிற்கு மேலாக, சுமார் 200சிசி திறன் கொண்ட ஒரு புதிய முழு-ஃபேர்டு ஸ்போர்ட்ஸ் (Full-faired Sports) பைக் ஆக அறிமுகப்படுத்தும் திட்டத்தில் யமஹா இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், இந்தியாவில் 'யமஹா ஒய்.இசட்.எஃப்-ஆர்2' பெயர் பதிவு செய்யப்பட்டு இருப்பதால், பைக் விரைவில் அறிமுகமாகும் என்று அர்த்தமில்லை. யமஹா 2021ஆம் ஆண்டிலேயே ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற சர்வதேச சந்தைகளில் ஆர்2 பெயருக்கான முத்திரைகளை பதிவு செய்தது. ஆனால், அதன் பிறகு அங்கு இந்த பைக் குறித்து தகவல்கள் இல்லை.

ஆதலால் இது, இந்தியாவில் எதிர்காலப் பயன்பாட்டிற்காகப் பெயரைப் பாதுகாக்கும் நடவடிக்கையாகவும் இருக்கலாம். ஆர்2 பைக் இந்தியாவில் அறிமுகமானால், ஆர்15 பைக்கின் அதிகப்பட்சமாக 18.4 எச்பி இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 155சிசி சிங்கிள்-சிலிண்டர் என்ஜினை விட அதிக செயல்திறனை வழங்கக்கூடிய என்ஜினை கொண்டதாக இருக்கும். யமஹா இந்தோனேசியாவில் ஆர்25 பைக்கை 250சிசி லிக்யுடு-கூல்டு இரட்டை-சிலிண்டர் என்ஜின் (35.9hp) உடன் விற்பனை செய்கிறது.
இருப்பினும், இந்த என்ஜினை புதிய ஆர்2 பைக் பெறுமா? முதலில், 2-சிலிண்டர் என்ஜினை இந்த பைக் பெறுமா? என்பதே பெரிய கேள்வியாக உள்ளது. ஒற்றை-சிலிண்டர் என்ஜினையே இந்த பைக் கொண்டிருக்கும் என கணிக்கப்படுகிறது; ஏனெனில், இரட்டை-சிலிண்டர் என்ஜினின் அதிக தயாரிப்புச் செலவு மற்றும் சிக்கல்கள் இதற்கு முக்கியக் காரணம் ஆகும்.
புதிய ஆர்2 ஆனது ஆர்15 பைக்கிற்கு மாற்றாக அமையலாம் என்றும் ஊகங்கள் எழுந்துள்ளன. ஆனால், ஆர்15 ஆனது இந்தியாவில் யமஹாவுக்கு மிகவும் வெற்றிகரமான மாடலாக இருப்பதால், அதை நீக்கிவிட்டு புதிய, அதிக விலையுள்ள மாடலை அறிமுகப்படுத்த யமஹா நிறுவனம் விரும்ப வாய்ப்பில்லை. அதேநேரம், ஆர்15 பைக் உடன் சேர்ந்து விற்பனை செய்தாலும், ஆர்15 பைக்கின் விற்பனை பாதிக்கப்பட கூடும்.
ஆதலால், இந்த விஷயத்தில் யமஹா எவ்வாறான முடிவை எடுக்க போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தற்போது இந்தியாவில் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ள ஒய்.இசட்.எஃப்-ஆர்2 பைக் கடைசி வரையில் இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்படாமல் போவதற்கும் வாய்ப்புள்ளது. ஏனெனில், அவ்வாறான சம்பவங்களை நாம் பலமுறை பார்த்துள்ளோம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: யமஹா நிறுவனம் மிக சமீபத்தில்தான் எம்டி-03 பைக்குடன் சேர்த்து அதன் ஒய்.இசட்.எஃப்-ஆர்3 மோட்டார்சைக்கிளின் விற்பனையையும் இந்தியாவில் நிறுத்தியது. யமஹா இணையதள பக்கத்தில் இன்னமும் இந்த பைக்குகளின் பெயர்கள் இருந்தாலும், டெல்லி, மும்பையில் முக்கியமான யமஹா டீலர்ஷிப் ஷோரூம்களே கடந்த ஆறு மாதங்களாக புதிய ஸ்டாக்குகளைப் பெறவில்லை.
முழுவதுமாக வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு, இந்தியாவிற்கு சிபியூ (CBU) முறையில் கொண்டுவரப்பட்டு இந்த பைக்குகளை கஸ்டமர்களுக்கு யமஹா டெலிவிரி செய்து வந்தது. இதனாலேயே இந்த பைக்குகளின் விலைகள் பல விலை திருத்தங்களுக்குப் பிறகும், உள்நாட்டு பைக்குகளை விட அதிகமாகவே இருந்தன. இதனால், இவற்றை வாங்க பெரும்பாலானோர் ஆர்வம் காட்டவில்லை.
விற்பனை அதிகமாக இல்லாத காரணத்தினால் நிறுத்தப்பட்ட ஆர்3 பைக், சர்வதேச சந்தைகளில் புதுப்பிக்கப்பட்டதால் இந்தியாவில் இன்னும் சில மாதங்களில் அப்கிரேட் செய்யப்பட்டு மீண்டும் அறிமுகம் செய்யப்படலாம் என நினைத்திருந்தோம். ஆனால், யமஹா நிறுவனம் புதியதாக ஒய்.இசட்.எஃப்-ஆர்2 பைக்கின் பெயரை பதிவு செய்திருப்பதை வைத்து பார்த்தால், ஆர்3 பைக்கிற்கு பதிலாக ஆர்2 பைக்கை யமஹா இந்தியாவிற்கு கொண்டுவருவதுபோல் தெரிகிறது.


Click it and Unblock the Notifications








