யாருமே பைக்கை வாங்காததால் யமஹா எடுத்த அதிரடி முடிவு! ஷோரூமுக்கு போனால் ஏமாந்துதான் வருவீங்க!
யமஹா மோட்டார் இந்தியா (Yamaha Motor India) நிறுவனம் அதன் ஒய்.இசட்.எஃப்-ஆர்3 (YZF-R3) மற்றும் எம்டி-03 (MT-03) பைக்குகளின் இந்திய இறக்குமதியை நிறுத்தியுள்ளதால், அவை சந்தையில் இருந்து மெதுவாக விற்பனையில் இருந்து நீக்கப்படுகின்றன. நாடு முழுவதும் உள்ள யமஹா டீலர்ஷிப் ஷோரூம்களும் பெரும்பாலானவை இந்த இரண்டு பைக்குகளின் இருப்பு தற்போது இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளன.
இந்தியாவில் சிபியூ (CBU) (முழுமையாக வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு இந்தியாவில் இறக்குமதி செய்யப்படுபவை) ஆக அறிமுகப்படுத்தப்பட்ட ஆர்3 மற்றும் எம்டி-03 பைக்குகள், யமஹாவின் மிடில்-வெயிட் மோட்டார்சைக்கிள்கள் (Middle-weight Motorcycles) பிரிவின் ஆரம்பநிலை விலை குறைவான மாடல்களாக நிலைநிறுத்தப்பட்டன.

ஆனால், அவற்றின் அதிக விலை காரணமாக, தேவை குறைவாகவே இருந்ததுடன், விற்பனையும் சரிவைச் சந்தித்தன. ஆரம்பத்தில், எக்ஸ்-ஷோரூம் விலையில் ஆர்3 பைக் ரூ.4.65 லட்சத்திலும், எம்டி-03 பைக் ரூ.4.60 லட்சத்திலும் விலையை பெற்றன. பின்னர், இந்த பைக்குகளை அவற்றின் பிரிவில் மேலும் போட்டித்தன்மை மிக்கதாக மாற்ற, யமஹா ரூ.1.10 லட்சம் வரை விலைக் குறைப்பை அறிவித்தது.
அதைத் தொடர்ந்து ஜிஎஸ்டி (GST) திருத்தங்களுக்குப் பிறகு மேலும் ரூ.20,000 குறைக்கப்பட்டது. இருப்பினும், இந்த முயற்சிகளும் இந்த யமஹா பைக்குகளுக்குத் தேவையான வரவேற்பைக் கொடுக்கவில்லை. யமஹா ஒய்.இசட்.எஃப்-ஆர்3 மற்றும் எம்டி-03 பைக்குகளை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இவை இரண்டுமே ஒரே விதமான சேசிஸில் உருவாக்கப்படுகின்றன.

இயக்க ஆற்றலை வழங்க பொருத்தப்படும் என்ஜின் கூட கிட்டத்தட்ட ஒன்றே. சஸ்பென்ஷன், பிரேக் உள்ளிட்ட இதர மெக்கானிக்கல் பாகங்களும், தோற்றமும் தான் இரண்டிற்கும் இடையே வேறுப்படுகிறது. ஆர்3 பைக் ஆனது இந்தியாவில் பிரபலமான ஆர்15 பைக்கை போன்று அதிக உடல் பேனல்களை கொண்ட ஸ்போர்ட்ஸ் ரக மோட்டார்சைக்கிள் ஆகும்.
ஆனால், ஆர்15 பைக்கை விட தோற்றத்தில் பெரியது. அதேநேரம், எம்டி-03 ஆனது எம்டி-15 பைக்கை போலவே உடல் பேனல்கள் அதிக இல்லாத நேக்டு-ஸ்ட்ரீட்ஃபைட்டர் (Naked Streetfighter) ஆகும். ஆனால் அதேதான், எம்டி-15 பைக்கை விட அளவில் பெரியது. எளிமையாக சொல்ல வேண்டுமென்றால், ஆர்-15 மற்றும் எம்டி-15 பைக்குகளின் பரிணாம வளர்ச்சியே ஆர்-03 மற்றும் எம்டி-03 பைக்குகள் ஆகும்.
இந்த பைக்குகளை யமஹா நிறுவனம் இந்தியாவில் 2023 டிசம்பர் மாதத்தில் அறிமுகம் செய்தது. அந்த வகையில் பார்த்தால், சரியாக 2 வருடங்கள் மட்டுமே இந்த பைக்குகள் இந்திய மார்க்கெட்டில் விற்பனையில் இருந்துள்ளன. இந்த பைக்குகள் இரண்டிலும் 321சிசி இணையான இரட்டை-சிலிண்டர் DOHC 4-வால்வு/சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டது.
அதிகப்பட்சமாக 41.4 பிஎச்பி மற்றும் 29.5 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. இந்தியாவில் விற்பனையில் இந்த யமஹா பைக்குகள் கேடிஎம் 390 ட்யூக், ஆர்சி 390, டிவிஎஸ் அப்பாச்சி ஆர்.ஆர்310, ஆர்டிஆர்310, பிஎம்டபிள்யூ ஜி310 ஆர் மற்றும் ஜி310 ஆர்.ஆர் பைக்குகளுக்கு போட்டியாக விற்பனையில் இருந்தன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவற்றின் விற்பனை நிறுத்தத்தால் தற்போது, யமஹா நிறுவனம் அதன் ஆர்15 (R15), எம்டி-15 (MT-15) மற்றும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட எக்ஸ்.எஸ்.ஆர் 155 (XSR 155) ஆகியவற்றை மட்டுமே அதன் விலை குறைவான செயல்திறன்மிக்க பைக்குகளாக வழங்குகிறது. எனினும், மேம்படுத்தப்பட்ட ஸ்டைலிங் மற்றும் கூடுதல் அம்சங்களுடன் கூடிய புதிய ஆர்3 மற்றும் எம்டி-03 பைக்குகளை 2026ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் யமஹா இந்தியாவில் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கிறோம். அதுவரை, இந்த வகைப் பைக்குகளை வாங்குபவர்கள் காத்திருக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








