ஸ்பிளெண்டர் பைக்குக்கு அருகில் மிகவும் விசித்திரமா இருக்கு! பெங்களூருவில் தென்பட்ட யமஹா பைக்!
யமஹா (Yamaha) நிறுவனத்தின் டபிள்யூ.ஆர் 155ஆர் (WR 155R) பைக், மீண்டும் பெங்களூருவில் சோதனை ஓட்டத்தின் போது அடையாளம் காணப்பட்டுள்ளது. யமஹா நிறுவனம் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதையும் வெளியிடாத நிலையில், வரவிருக்கும் ஊடக நிகழ்ச்சியில் இந்த பைக் ஒரு சர்ப்ரைஸாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நவம்பர் 11 அன்று புதிய தயாரிப்பு வெளியீட்டிற்கு யமஹா தயாராகி வருகிறது. சந்தை வரவேற்பை அறிய சில மற்ற பைக்குகளும் இந்த நிகழ்வில் காட்சிப்படுத்தப்படலாம். யமஹா எக்ஸ்.எஸ்.ஆர்155 பைக் அறிமுகம் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், டபிள்யூ.ஆர் 155ஆர் பைக்கும் காட்சிப்படுத்தப்படலாம் என்று ஊகிக்கப்படுகிறது.

சிவப்பு பதிவு எண் பலகையுடன் யமஹா டபிள்யூ.ஆர் 155ஆர் இருமுறை பெங்களூருவில் காணப்பட்டுள்ளது. இதன் சமீபத்திய ஸ்பை படங்கள் என்ன தகவல்களை வெளிப்படுத்துகின்றன என்று பார்ப்போம். பலவித பயன்பாடுகளுக்கு பயன்படுத்துவதற்குப் பெயர் பெற்ற யமஹா டபிள்யூ.ஆர் 155ஆர், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா போன்ற நாடுகளில் பிரபலமான ஒன்றாகும்.
டபிள்யூ.ஆர் 155ஆர் ஆஃப்-ரோடு பயணங்களுக்கும், நகரப் பயணங்களுக்கும் சிறப்பானதாக இருக்கும். பெங்களூருவில் எடுக்கப்பட்ட சமீபத்திய ஸ்பை படங்கள், பைக்கை ஒரு பார்க்கிங் இடத்தில் காட்டுகின்றன. இந்த ஸ்பை படங்களை வைத்து பார்க்கும்போது, பைக்கில் பெரும்பாலான அம்சங்கள் வெளிநாடுகளில் விற்கப்படும் மாதிரியைப் போலவே உள்ளன.

இது ஒரு சோதனை வாகனம் தானா அல்லது யாரேனும் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக இறக்குமதி செய்ததா என்பது கூட தெளிவாகத் தெரியவில்லை. யமஹாவின் தனித்துவமான நீல நிறத்தில் இருக்கும் இந்த பைக், சாலையில் பிரகாசமாகத் தெரிகிறது. உயரமான தோற்றத்துடன், நீண்ட சஸ்பென்ஷனை கொண்டுள்ளது.
முன்புறத்தில் 21-இன்ச் சக்கரங்களும், பின்புறத்தில் 18-இன்ச் சக்கரங்களும் உள்ளன. இந்த பைக் ஸ்போக் சக்கரங்களுடன், கரடுமுரடான டூயல்-பர்பஸ் டயர்களை கொண்டுள்ளது. தரையில் இருந்து 880மிமீ உயரத்தில் ரைடர் இருக்கையையும், 245மிமீ உயரத்தில் அடிப்பகுதியையும் கொண்ட யமஹா டபிள்யூ.ஆர் 155ஆர், பலதரப்பட்ட ஆஃப்-ரோடு பாதைகளை எளிதில் கடக்கும்.

நகர்ப்புற சூழலில், இந்த அம்சங்கள் சாலைக் குழிகள் மற்றும் கரடுமுரடான பகுதிகளை திறம்பட சமாளிக்க உதவும். ஒட்டுமொத்தமாக, இந்த பைக் செயல்திறன் மற்றும் செயல்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கும் ஒரு மினிமலிஸ்ட் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இதன் முக்கிய சிறப்பம்சங்களில் முக்கோண ஹெட்லேம்ப், உயரத்தில் முன்பக்க ஃபெண்டர், தாழ்வான ஹேண்டில்பார், வளைந்த இருக்கை மற்றும் உயரமான சைட் எக்ஸாஸ்ட் ஆகியவை அடங்கும்.
இந்தியாவில் தற்போது நீல நிறத்தில் காணப்பட்டுள்ள டபிள்யூ.ஆர் 155ஆர் பைக், வெளிநாட்டு சந்தைகளில் கருப்பு நிற ஆப்ஷனிலும் கிடைக்கிறது. கருப்பு பதிப்பு தனித்துவமான கிராபிக்ஸ் மற்றும் அக்வா-ஃபினிஷ் செய்யப்பட்ட ஃபிரேமுடன் ஸ்போர்ட்டியர் தோற்றத்தைக் கொண்டுள்ளது. இந்த பைக்கில் 155 சிசி, லிக்யுடு-கூல்டு, சிங்கிள் சிலிண்டர், SOHC என்ஜின் உள்ளது.

இது 16.7 PS சக்தியையும், 14.3 Nm டார்க்கையும் உருவாக்குகிறது. இது 6-ஸ்பீடு கான்ஸ்டன்ட் மெஷ் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. செமி டபுள் கிரேடில் ஃபிரேம், சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் டெலஸ்கோபிக் ஃபோர்க்குகள் மற்றும் பின்பக்கத்தில் ஸ்விங்கார்ம் உடன் பைக் வடிவமைக்கப்பட்டுள்ளது. 21-இன்ச் முன் சக்கரத்தில் 2.75 அளவு கொண்ட டியூப் வகை டயரும், பின் சக்கரத்தில் 4.10 அளவு டயரும் பொருத்தப்பட்டுள்ளது.
பிரேக்கிங் அமைப்பு இரு முனைகளிலும் டிஸ்க் பிரேக்குகளைக் கொண்டுள்ளது. இந்த பைக் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோலுடன் வருகிறது. யமஹா டபிள்யூ.ஆர் 155ஆர் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டால், ஏற்கனவே விற்பனையில் உள்ள ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210 மற்றும் கவாஸாகி கே.எல்.எக்ஸ்230 போன்ற போட்டியாளர்களுடன் மோதும்.

டபிள்யூ.ஆர் 155ஆர் இந்தியாவில் 2 லட்ச ரூபாய்க்கும் குறைவான போட்டி விலையில் (எக்ஸ்-ஷோரூம்) வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு மாறாக, ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210 ஆரம்ப விலை ரூ.1.62 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகவும், கவாஸாகி கே.எல்.எக்ஸ்230 பைக்கின் ஆரம்ப விலை ரூ.1.84 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகவும் தற்சமயம் உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அட்வென்ச்சர் ரக பைக்குகளுக்கு மெல்ல மெல்ல வரவேற்பு அதிகரித்து வருகிறது. அதாவது, எந்தவொரு பாதைக்கும் கொண்டு செல்லக் கூடிய பைக்கை வாங்குவதற்கு பலரும் விரும்ப ஆரம்பித்துள்ளனர். யமஹா எக்ஸ்.எஸ்.ஆர்155 பைக்கிற்கு இந்தியாவில் ஏற்கனவே பெரிய எதிர்பார்ப்பு உருவாகி இருக்கும் நிலையில், டபிள்யூ.ஆர் 155ஆர் பைக்கும் அறிமுகம் செய்யப்பட்டால் இளைஞர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியான செய்தியாக அமையும்.


Click it and Unblock the Notifications









