டூ-வீலரில் ஹைபிரிட் டெக்னாலஜியா!.. மாருதி கார்கள் அதிகம் விற்பனையாறதுக்கு காரணமே இதுதானே!!
வாகனங்களை அதிகம் மைலேஜ் தரக் கூடியதாக மாற்றக் கூடிய ஓர் தொழில்நுட்பமே ஹைபிரிட் (Hybrid) ஆகும். இந்த அம்சம் இப்போது கார்களிலேயே மிக அதிகளவில் வழங்கப்படுகின்றது. மாருதி சுஸுகி, டொயோட்டா போன்ற நிறுவனங்களின் கார்களிலேயே இந்த அம்சம் மிக தாராளமாக வழங்கப்படுகின்றது. இதேபோல், விலை உயர்ந்த ஆடம்பர கார்களிலும் இந்த அம்சம் வழங்கப்படுகின்றது. இத்தகைய அம்சத்தையே டூ-வீலர்களில் வழங்கும் முயற்சியில் களமிறங்கி இருக்கின்றது, உலக புகழ்பெற்ற இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான யமஹா (Yamaha).
இதன் அடிப்படையில் எக்ஸ்மேக்ஸ் எஸ்பிஎச்இவி (XMax SPHEV) எனும் பைக் மாடலை அந்நிறுவனம் தயார் செய்திருக்கின்றது. இதை சீக்கிரமே அந்த நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதை உறுதிப்படுத்தும் விதமாக யமஹா நிறுவனமும் அந்த ஹைபிரிட் அம்சம் கொண்ட பைக்கின் டீசர் வீடியோவை தற்போது வெளியிட்டு இருக்கின்றது.

அந்த வாகனத்தின் தோற்றம் பைக் மற்றும் ஸ்கூட்டர் இரண்டையும் ஒத்தாற்போல் உள்ளது. அதேபோல், இதன் முகப்பு பக்கம் ஓலா எலெக்ட்ரிக் பைக் மாடலான ரோட்ஸ்டர் (Ola Roadster)-ஐ பிரதிபலிக்கும் வகையில் உள்ளது. இருப்பினும், இதன் பக்கவாட்டு பக்கத்தைப் பார்க்கும் முற்றிலும் தனித்துவமான ஸ்டைலை எக்ஸ்மேக்ஸ் எஸ்பிஎச்இவி கொண்டிருப்பதையும் நம்மால் உணர முடிகின்றது.
இதன் வாயிலாக யமஹா நிறுவனம் இந்த பைக்கை ஹைபிரிட் டெக்னாலஜி கொண்டதாக மட்டுமல்ல புதிய தோற்றம் கொண்டதாகவும் தயார் செய்திருக்கின்றது என்பது தெரிய வந்திருக்கின்றது. இதன் பயன்பாடும் தனித்துவமானதாக இருக்கும் என்பது இப்போது தெரிய வந்திருக்கின்றது. இதற்காக, ஹைபிரிட் சிஸ்டத்தின்கீழ் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்களும், ஓர் உள் எரிப்பு எஞ்சின்-ம் இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
குறிப்பாக, ஹைபிரிட் சிஸ்டத்தை இரண்டு வழிகளில் பயன்படுத்திக் கொள்ளும் வசதியை இந்த பைக்கில் யமஹா வழங்கி இருக்கின்றது. 'டூயல் பூஸ்ட்' (Dual Boost) மற்றும் 'டிரிபிள் பூஸ்ட்' (Triple Boost) ஆகிய இரண்டு தனித்துவமான மோட்களையே இந்த பைக்கின் ஹைபிரிட் சிஸ்டத்தில் வழங்கி இருக்கின்றனர்.
இதில் டூயல் பூஸ்ட் மோட் என்பது எரிபொருளில் இயங்கும் எஞ்சின் மற்றும் பின் பக்க ஆக்சிலில் பொருத்தப்பட்டு இருக்கும் எலெக்ட்ரிக் மோட்டாரை மட்டுமே இயங்கச் செய்யும். அதேவேளையில், டிரிபிள் பூஸ்ட் மோடானது எஞ்சின், பின் பக்க ஆக்சிலில் பொருத்தப்பட்ட மோட்டார் மற்றும் கிராங்ஷாஃப்ட்-இல் பொருத்தப்பட்டு இருக்கும் மோட்டார் ஜெனரேட்டர் ஆகியவற்றை இயங்கச் செய்யும்.

இதன் வாயிலாக மும்மடங்கு திறன் வெளிப்பாட்டை இந்த மோடில் பெற்றுக் கொள்ள முடியும். எனவே இந்த மோடின் வாயிலாக ஸ்போர்ட்ஸ் பைக்குகளுக்கு இணையான அதி வேக இயக்கத்தை பெற்றுக் கொள்ள முடியும். இந்த பைக்கில் சிங்கிள் சிலிண்டர் பெட்ரோல் மோட்டாரே வழங்கப்பட்டு இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.
இதனுடனேயே இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்களை யமஹா நிறுவனம் வழங்கி இருக்கின்றது. ஆனால், இதன் மைலேஜ் திறன் மற்றும் பிற தொழில்நுட்ப வசதிகள் பற்றிய விபரங்கள் வெளியாகவில்லை. மேலும், இந்தியாவில் இந்த வாகனம் விற்பனைக்கு வருமா என்பது தெரியவில்லை. விரைவில் இதுபற்றிய தகவல்களையும் அது வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த ஹைபிரிட் பைக் ஒரு லிட்டருக்கே 80 கிமீ முதல் 100 கிமீ வரையில் மைலேஜ் தரலாம் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம். இந்த தகவலை விரைவில் யமஹா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியாவில் இந்த பைக் விற்பனைக்கு வரும் எனில் மிக அமோகமான வரவேற்பை பெறலாம் என்று யூகிக்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









