ஒருத்தரும் ஆர்15 பைக் பக்கம் போக போறது இல்ல... யமஹா கமுக்கமா உருவாக்கி வரும் புதிய 155சிசி பைக்!
யமஹா மோட்டார் இந்தியா (Yamaha Motor India) நிறுவனம், 2025ஆம் ஆண்டில் தங்கள் எம்டி-15 (MT-15), ஆர்15 (R15), ஃபேஸினோ (Fascino), ரே-இசட்.ஆர் (Ray-ZR), எஃப்.இசட் (FZ) மற்றும் எஃப்.இசட்-எக்ஸ் (FZ-X) போன்ற பிரபலமான பைக்குகளை மேம்படுத்தி அறிமுகம் செய்து நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
மேலும், ஜிஎஸ்டி 2.0 வரிச் சலுகைகளை முழுமையாகப் பயன்படுத்தி, வாகனங்களின் விலையை ரூ.18,000 வரை குறைத்துள்ளது. தற்போதுள்ள பைக் மாடல்களை மேம்படுத்துவது ஒருபுறம் இருக்க, ஆர்3 மற்றும் எம்டி-03 ஆகிய இரட்டை பைக் வெளியீடுகளுக்குப் பிறகு இந்தியாவில் யமஹா புதிய பைக்கை அறிமுகப்படுத்தவில்லை. இந்த நிலை விரைவில் மாறும்.

ஏனெனில் யமஹா எக்ஸ்.எஸ்.ஆர் 155 (XSR 155) பைக்கை அறிமுகப்படுத்த யமஹா தயாராகி வருகிறது. இந்த நிலையில், இந்த பைக்கின் சோதனை ஓட்டத்தின் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் (Spy Images) முதல்முறையாக தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளன. அதாவது, யமஹா நிறுவனம் முதல்முறையாக அதன் எக்ஸ்.எஸ்.ஆர்155 பைக்கை இந்தியாவில் சோதனை ஓட்டத்தில் உட்படுத்தி உள்ளது.
நீண்ட காலமாக இந்திய இளைஞர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட யமஹா எக்ஸ்.எஸ்.ஆர்155 பைக் இந்தியச் சாலைகளில் ஓட்டிப் பார்க்கப்பட்டு சோதனை செய்யப்பட்டு இருப்பது இதன் அறிமுகத்தை உறுதிச்செய்ய கூடியதாக அமைந்துள்ளது. முழுமையாக மறைக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட இந்தப் பைக், நவீன-ரெட்ரோ தோற்றத்துடன் இந்தியச் சந்தைக்கு வரவுள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறது.
எக்ஸ்.எஸ்.ஆர்155 பைக் ஆனது பிரபலமான யமஹா ஆர்15 வி4 பைக்கின் தளத்தை அடிப்படையாகக் கொண்டது. உலகளவில் பிரபலமான இந்த ஸ்போர்ட்ஸ் பைக்கின் உட்புற அமைப்புகளைப் பகிர்ந்து கொண்டு, நியோ-ரெட்ரோ வடிவமைப்பை எக்ஸ்.எஸ்.ஆர்155 பெறுகிறது. ஸ்பை படங்களின் பைக்கின் முன்பக்கத்தில் வட்ட வடிவ எல்.இ.டி ஹெட்லேம்ப்பை பார்க்க முடிகிறது.
நிமிர்ந்து அமர்ந்தப்படி பைக்கை ஓட்ட வேண்டிய பொசிஷன், நீர் துளி வடிவ பெட்ரோல் டேங்க் மற்றும் தட்டையான இருக்கை போன்ற எக்ஸ்.எஸ்.ஆர் பைக்குகளுக்கே உண்டான சிறப்பம்சங்களையும் தற்போது சோதனை ஓட்டத்தில் உட்படுத்தப்பட்டு இருக்கும் பைக்கில் பார்க்க முடிகிறது. மறைக்கப்பட்டிருந்த போதிலும், பைக்கின் ரெட்ரோ தோற்றம் தெளிவாகத் தெரிகிறது.
இது யமஹாவின் மற்ற ஸ்போர்ட்டி பைக்குகளில் இருந்து இதனை வேறுபடுத்துகிறது. இதில் யுஎஸ்டி டெலஸ்கோபிக் ஃபோர்க்குகள், பின்புற மோனோ-ஷாக், 17 அங்குல அலாய் சக்கரங்கள், 140-பிரிவு பின்புற டயர், 100-பிரிவு முன் டயர், இரட்டை சேனல் ஏபிஎஸ் கொண்ட முன் மற்றும் பின் டிஸ்க் பிரேக்குகள் உள்ளன. வட்ட வடிவ எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் இதில் இடம்பெற்றுள்ளது.
இருப்பினும், டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் அல்லது கனெக்டெட் வசதிகள் இருக்க வாய்ப்பில்லை. யமஹா மோட்டார் இந்தியா நிறுவனம் ஏற்கனவே நவம்பர் 11, 2025 அன்று ஒரு புதிய தயாரிப்பை அறிமுகப்படுத்த 'தேதியை குறித்துக்கொள்ளுங்கள்' என பதிவு ஒன்றை தனது சமூக வலைத்தள பக்கங்களில் ஏற்கனவே வெளியிட்டுள்ளது. ஆனால், அது எந்த தயாரிப்பு என்பதை யமஹா இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
என்றாலும், எக்ஸ்.எஸ்.ஆர்155 பைக், என்மேக்ஸ் 155 மேக்ஸி-ஸ்கூட்டருடன் அல்லது அதற்கு முன்பாகவே அறிமுகம் செய்யப்படலாம் என்பதற்கான வாய்ப்புகள் அதிகம். என்மேக்ஸ் 155 மேக்ஸி-ஸ்கூட்டர், இந்த ஆண்டு தொடக்கத்தில் பாரத் மொபிலிட்டி எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டது. எக்ஸ்.எஸ்.ஆர்155 மற்றும் என்மேக்ஸ் 155 ஆகிய இரண்டுமே உலகச் சந்தைகளில் நல்ல விற்பனையைக் கொண்டவை.
குறிப்பாக எக்ஸ்.எஸ்.ஆர், அதன் ரெட்ரோ ஸ்டைலிங் மற்றும் நவீன தொழில்நுட்பக் கலவையால், இந்தியப் பைக் ஆர்வலர்களிடையே அதிகம் எதிர்பார்க்கப்படும் யமஹா பைக்குகளுள் ஒன்றாக உள்ளது. யமஹா ஆர்15 வி4 பைக்கில் பொருத்தப்படும் அதே 155சிசி திரவ-குளிரூட்டப்பட்ட, VVA தொழில்நுட்பம் கொண்ட என்ஜின் தான் எக்ஸ்.எஸ்.ஆர்155 பைக்கிலும் பொருத்தப்படுகிறது.
இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 18.5 பிஎஸ் சக்தி மற்றும் 14 என்எம் டார்க் திறனை வெளியிடக்கூடியதாக உள்ளது. அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச், இரட்டை சேனல் ஏபிஎஸ், எல்இடி லைட்டிங், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் போன்ற அம்சங்கள் இதில் உள்ளன. சிறந்த எர்கோனோமிக்ஸ் கொண்ட ரெட்ரோ-ஈர்க்கப்பட்ட ரோட்ஸ்டர் தோற்றத்தைக் கொண்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: அரசின் புதிய ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் காரணமாக, இதுபோன்ற மோட்டார்சைக்கிள்களுக்கான வரி 28-31% இலிருந்து 18% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் யமஹா எக்ஸ்.எஸ்.ஆர் 155 ஒரு போட்டி விலையில் அறிமுகம் செய்யப்படலாம். இது இந்தியாவின் வளர்ந்து வரும் பிரீமியம் 150-160சிசி பிரிவில் ஒரு வலுவான போட்டியாளராக இருக்கும்.
இதன் விலை யமஹா R15 ஐ விடக் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், பிரீமியம் தோற்றத்துடன் அதிகப் பயனாளர்களை சென்றடையும். இந்த ஸ்பை படங்கள், யமஹா பண்டிகைக் காலத்தை இலக்காக வைத்து ஒரு பெரிய அறிமுகத்திற்குத் தயாராகி வருவதற்கான தெளிவான அறிகுறியாகும். இது ஸ்டைல் மற்றும் செயல்திறனை விரும்பும் இளம் நகர வாடிக்கையாளர்களைக் குறிவைத்து உருவாக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








