பாராட்ட வார்த்தையே இல்லை... கேடிஎம் பைக் கம்பெனி கூட இந்த அளவுக்கு யோசிச்சு இருக்காது!
கேடிஎம் (KTM), உலகளவில் பிரபலமான மோட்டார்சைக்கிள் உற்பத்தி நிறுவனம். ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த கேடிஎம் நிறுவனத்தில் இருந்து இந்தியாவிலும் ட்யூக் (Duke), ஆர்சி (RC) மற்றும் அட்வென்ச்சர் (Adventure) ரக பைக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன. சற்று விலைமிக்கவையாக இருந்தாலும், கேடிஎம் பைக்குகளுக்கு பெரிய ரசிகர் பட்டாளம் நம் நாட்டிலும் உள்ளது. குறிப்பாக, அதிவேகமான பயணங்களுக்கு அதிகமாக பயன்படுத்தும் இளைஞர்கள் மத்தியில் கேடிஎம் பைக்குகளுக்கு தனி இடம் உள்ளது. அதன் வெளிப்பாடாக, இங்கு ஒரு இளைஞர் தான் கஷ்டப்பட்டு உருவாக்கிய பைக்கிற்கு கேடிஎம் பைக்கின் தோற்றத்தை கொடுத்துள்ளார்.
தொழிற்நுட்பங்கள் சார்ந்த ஆய்வாளரான இவர், மிகவும் தனித்துவமான முறையில் உருவாக்கியுள்ள இந்த பைக்கின் சிறப்பம்சம் என்னவென்றால், இதில் வெறும் ஒரேயொரு சக்கரம் மட்டுமே உள்ளது. இதுதொடர்பாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவை வைத்து பார்க்கும்போது, இந்த ஒரு சக்கர பைக் ஆனது குஜராத் மாநிலத்தில் உருவாக்கப்பட்டது ஆகும்.

ஒரேயொரு சக்கரத்தில் இயங்குவது மட்டுமின்றி, குஜராத்தை சேர்ந்த இந்த இளைஞர் உருவாக்கி இருக்கும் இந்த பைக் ஆனது எலக்ட்ரிக் பவரில் இயங்கக்கூடியது ஆகும். இந்த பைக் எவ்வாறு இயங்குகிறது, எவ்வாறு இதனை ஓட்ட வேண்டும் என்பதை இந்த பைக்கை உருவாக்கிய இளைஞர் பொது சாலையில் ஓட்டி காண்பிப்பதை வீடியோவில் பார்க்க முடிகிறது.
இந்த பைக்கை சாலையில் ஓட்டும்போது மக்களின் ரியாக்ஷன் எப்படி உள்ளது என்பதை வீடியோவில் ஹைலைட்டாக காண்பித்துள்ளனர். மேலும், இந்த ஒரு சக்கர எலக்ட்ரிக் பைக் எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பதையும் ஒவ்வொரு படியாக விளக்கி காண்பித்துள்ளனர். முதலில், பைக்கின் அடிப்படை ஃப்ரேம் எவ்வாறு இரும்பு தகடுகள் மற்றும் குழாய்கள் மூலமாக உருவாக்கப்பட்டது என்பது காண்பிக்கப்பட்டு உள்ளது.

தேவையான அளவிற்கு இரும்பு தகடு மற்றும் குழாய்களை வெட்டி, ஒன்றோடு ஒன்று வெல்டிங் மூலம் ஒட்ட வைத்து பைக்கின் ஃப்ரேம் உருவாக்கப்பட்டுள்ளது. இரும்பு குழாய்கள் மூலம் உருவாக்கப்பட்டுள்ளதால், தேவைக்கேற்ப அவற்றை வளைக்க முடிந்துள்ளது. பைக்கிற்கான ஹேண்டில்பார் எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பதையும் காண்பித்துள்ளனர். பைக்கை இயங்க வைக்கும் எலக்ட்ரிக் மோட்டார் சக்கரத்தின் அச்சில் வழங்கப்பட்டுள்ளது.
இந்த எலக்ட்ரிக் மோட்டார் சிஸ்டத்தில் என்னென்ன மாதிரியான பாகங்கள் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு பொருத்தப்பட்டுள்ளன என்பதையும் வீடியோவில் காண்பித்துள்ளனர். இந்த பாகங்கள் ஒவ்வொன்றும் சோதனை செய்யப்பட்ட பின்னரே இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ளன. இந்த பைக்கில் சீட் பொசிஷனும் வித்தியாசமானதாக சரியாக சக்கரத்திற்கு மேலே வழங்கப்பட்டுள்ளது. பைக்கிற்கான இருக்கையை இவர்களாகவே பிரத்யேகமாக உருவாக்கி உள்ளனர்.
இதன் பின்னர், பைக்கிற்கு பெயிண்ட்டை கொடுக்க தயாராகியவர்கள், அதற்கு முதலில் பைக்கின் உடல்பகுதியை முழுவதுமாக தேய்த்து துருப்பிடிப்புகளை அகற்றி, பெயிண்ட் கொடுத்துள்ளனர். ஏற்கனவே கூறியதுபோல், இந்த ஒற்றை சக்கர எலக்ட்ரிக் பைக்கிற்கு அதனை உருவாக்கிய நபர் கேடிஎம் பைக்குகளின் ஆரஞ்சு, வெள்ளை மற்றும் கருப்பு நிறங்களை கொடுத்துள்ளார்.
ஒரே மாதிரியான பெயிண்ட் கொடுக்கப்பட்டது மட்டுமின்றி, 'KTM' நிறுவனத்தின் லோகோவும் பொறிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த பைக்கில் கேடிஎம் நிறுவனத்தின் எந்த பாகமும் பயன்படுத்தப்படவில்லை. இந்த எலக்ட்ரிக் பைக்கில் கேடிஎம் லோகோ பொறிக்கப்பட்டிருக்கும் கூட்டிற்குள் தான் பைக்கிற்கான பேட்டரி பேக் வழங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரி பேக்கும் முறையாக சோதனை செய்யப்பட்டது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த குஜராத் இளைஞர் உருவாக்கியுள்ள எலக்ட்ரிக் பைக் முக்கோண வடிவில் ஒன்றையொன்று தாங்கி நிற்கக்கூடிய இயந்திர நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த ஒற்றை சக்கர பைக்கை சரளமாக ஓட்டுவதற்கு முன் அனுபவம் நிச்சயமாக வேண்டும். தான் உருவாக்கிய இந்த பைக்கை இந்த நபர் மூடிய வளாகத்திற்குள் வேண்டுமாயின் பயன்படுத்தலாமே தவிர்த்து, பொது சாலையில் பயன்படுத்த முடியாது.


Click it and Unblock the Notifications