செல்போன் வாங்கற காசுல இந்த புது ஸ்கூட்டர வாங்கிடலாம்! லைசென்ஸ், ஆர்சி புக் கேட்டு போலீஸ் நிறுத்தவே மாட்டாங்க!
இந்திய சந்தையில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் (Electric Vehicles) விற்பனை அதிகரித்து கொண்டே வருகிறது. பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் (Diesel) ஆகிய எரிபொருட்களுக்கு செலவிடும் தொகை மிகவும் அதிகமாக இருப்பதும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அதிகரித்து கொண்டே வருவதும்தான் இதற்கு மிகவும் முக்கியமான காரணங்களாக கருதப்படுகின்றன. வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதால், பல்வேறு நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டு புத்தம் புதிய எலெக்ட்ரிக் வாகனங்களை இந்திய சந்தையில் தொடர்ச்சியாக விற்பனைக்கு களமிறக்கி கொண்டுள்ளன.
இந்த வரிசையில் ஜூலியோ (Zelio) நிறுவனம் புத்தம் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) ஒன்றை இந்திய சந்தையில் தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. லிட்டிஸ் கிரேஸி (Little Gracy) என்ற பெயரில் இந்த புத்தம் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

லிட்டில் கிரேஸி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பாக, முதலில் ஜூலியோ நிறுவனத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம். இது இந்தியாவை சேர்ந்த ஒரு முன்னணி எலெக்ட்ரிக் டூவீலர் நிறுவனம் ஆகும். தற்போதைய நிலையில் இந்தியா முழுக்க இந்த நிறுவனத்திற்கு 400க்கும் மேற்பட்ட டீலர்ஷிப்கள் உள்ளன.
நடப்பு 2025ம் ஆண்டின் இறுதிக்குள்ளாக இந்த டீலர்ஷிப்களின் எண்ணிக்கையை 1,000-க்கும் அதிகமாக உயர்த்த வேண்டும் என ஜூலியோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சரி, இனி ஜூலியோ நிறுவனத்தால் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள புத்தம் புதிய லிட்டில் கிரேஸி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பற்றி பார்க்கலாம்.

இது டீன்-ஏஜ் வயதில் உள்ள நபர்களை இலக்காக கொண்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ள ஒரு தயாரிப்பாகும். ஜூலியோ லிட்டில் கிரேஸி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இயக்குவதற்கு லைசென்ஸ் (License) தேவையில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஆர்டிஓ (RTO) அலுவலகத்தில் பதிவு (Registration) செய்யவும் தேவை கிடையாது.
எனவே பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகளுக்கு இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஏற்றதாக இருக்கும். மொத்தம் 3 வேரியண்ட்களில் (Variants) ஜூலியோ லிட்டில் கிரேஸி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில், ஆரம்ப நிலை வேரியண்ட்டில் 48V/32AH லீட் ஆஸிட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.
இதன் ரேஞ்ச் (Range) 55-60 கிலோ மீட்டர்கள் ஆகும். பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், பயணம் செய்ய கூடிய தொலைவுதான் ரேஞ்ச் என குறிப்பிடப்படுகிறது. மறுபக்கம் இதன் மிட்-வேரியண்ட்டில், 60V/32AH லீட் ஆஸிட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதன் ரேஞ்ச் 70 கிலோ மீட்டர்கள் ஆகும்.
அதே நேரத்தில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டாப் வேரியண்ட்டில் 60V/30AH லித்தியம் அயான் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதன் ரேஞ்ச் 70-75 கிலோ மீட்டர்கள் ஆகும். இந்த 3 வேரியண்ட்களின் டாப் ஸ்பீடும் (Top Speed) மணிக்கு 25 கிலோ மீட்டர்கள்தான் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
இங்கே மற்றொரு விஷயத்தையும் குறிப்பிட்டாக வேண்டும். இந்த 3 வேரியண்ட்களின் பேட்டரியையும் ஒரு முறை முழுமையாக நிரப்புவதற்கு சுமாராக 1.5 யூனிட் மின்சாரம் மட்டுமே செலவாகும். எனவே பெட்ரோல் ஸ்கூட்டர்களுடன் ஒப்பிடும்போது, ஜூலியோ லிட்டில் கிரேஸி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இயக்குவதற்கான செலவு மிகவும் குறைவாகவே இருக்கும்.
இயக்குவதற்கான செலவு குறைவு என்பதுடன், புத்தம் புதிய ஜூலியோ லிட்டில் கிரேஸி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்குவதற்காக வாடிக்கையாளர்கள் செலவிட போகும் தொகையும் கூட மிகவும் குறைவுதான். அதாவது இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை (Price) 49,500 ரூபாய் மட்டுமே.
அதே நேரத்தில் இதன் மிட்-வேரியண்ட்டின் விலையோ 52,000 ரூபாயாக மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மறுபக்கம் டாப் வேரியண்ட்டின் விலை 58,000 ரூபாயாக இருக்கிறது. அதாவது இந்தியாவில் தற்போது விற்பனை செய்யப்படும் ஒரு சில செல்போன்களின் விலையை விட, ஜூலியோ லிட்டில் கிரேஸி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை குறைவு!
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: குறைவான விலையில் ஒரு புத்தம் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தேடி கொண்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு ஜூலியோ லிட்டில் கிரேஸி மிகவும் ஏற்றது என்பது எங்கள் கருத்து. லைசென்ஸ், ஆர்சி தேவையில்லை மற்றும் இயக்குவதற்கான செலவு மிகவும் குறைவு ஆகியவை எல்லாம் இதன் மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட்கள்!


Click it and Unblock the Notifications








