ரூ.14.39 லட்சத்தில் புதிய டிரையம்ப் ஸ்ட்ரீட் டிரிபிள் 798 RS அறிமுகம்!
பிரீமியம் ஸ்போர்ட்ஸ் பைக்குகளை விரும்புபவர்களுக்கு டிரையம்ப் நிறுவனம் புதிய அப்டேட்டை வழங்கியுள்ளது. தனது பிரபலமான ஸ்ட்ரீட் டிரிபிள் ஆர்எஸ் (Street Triple RS) பைக்கை புதிய 798 ஆர்எஸ் மாடலாக மேம்படுத்தியுள்ளது. அதிக பவர், புதிய சேஸிஸ், மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப வசதிகள் என பல மாற்றங்களுடன் வெளியாகியுள்ள இந்த பைக்கின் இந்திய விலை ரூ.14.39 லட்சமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய 2027 டிரையம்ப் ஸ்ட்ரீட் டிரிபிள் 798 ஆர்எஸ் பைக் இந்திய இணையதளத்திலும் பட்டியலிடப்பட்டுள்ளது. முந்தைய 765 ஆர்எஸ் மாடலுடன் ஒப்பிடும்போது எஞ்சின் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், எடையும் குறைக்கப்பட்டுள்ளது.

புதிய எஞ்சின்
இந்த புதிய பைக்கில் 3 சிலிண்டர்கள் கொண்ட 798 சிசி எஞ்சின் வழங்கப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 135 எச்பி பவரையும், 86 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். முந்தைய 765 ஆர்எஸ் மாடலில் 130 எச்பி பவர் மற்றும் 80 என்எம் டார்க் மட்டுமே வழங்கவல்லதாக இருந்தது.
இந்த புதிய மாடலின் எஞ்சினுடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், பைக்கில் பை-டைரக்ஷனல் குயிக் ஷிஃப்டர் மற்றும் ஆட்டோ பிளிப்பர் வசதி ஸ்டாண்டர்டாக வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கிளட்ச் பயன்படுத்தாமல் கியர்களை மேலேயும் கீழேயும் மாற்றிக்கொள்ள முடியும்.
புதிய வடிவமைப்பு மற்றும் சேஸிஸ்
வடிவமைப்பிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை வழங்கப்பட்டு வந்த இரட்டை கண் போன்ற ஹெட்லைட் வடிவமைப்பிற்கு பதிலாக, புதிய பெரிமீட்டர் எல்இடி ஹெட்லைட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மையப்பகுதியில் பிரதான ஹெட்லைட் அமைந்துள்ளது.
புதிய அலுமினியம் பெரிமீட்டர் ஃபிரேம் மற்றும் அலுமினியம் ஸ்விங் ஆர்ம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. குறிப்பாக ஸ்விங் ஆர்ம் டிரையம்ப் மோட்டோ2 பைக்குகளின் வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் எடை 183 கிலோவாக உள்ளது. முந்தைய மாடலைவிட 5 கிலோ எடை குறைக்கப்பட்டுள்ளது.
சஸ்பென்ஷன், பிரேக்கிங் வசதிகள்
சஸ்பென்ஷனைப் பொறுத்தவரை முன்பக்கத்தில் 41 மிமீ ஷோவா யுஎஸ்டி ஃபோர்க் வழங்கப்பட்டுள்ளது. பின்பக்கத்தில் ஓலின்ஸ் STX46 மோனோஷாக் இடம்பெற்றுள்ளது. முன்பக்கத்தில் 310 மிமீ டிஸ்க்குகளுடன் பிரெம்போ 4 பிஸ்டன் காலிப்பர்களும், பின்பக்கத்தில் 220 மிமீ டிஸ்க் பிரேக்கும் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், 17 இன்ச் அலாய் வீல்களுடன் பைரெல்லி சூப்பர்கோர்சா எஸ்பி வி3 டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இருக்கையின் உயரம் 836 மிமீ ஆகவும், பெட்ரோல் டேங்க் கொள்ளளவு 15 லிட்டராகவும் உள்ளது.
ரைடிங் மோடுகள்
தொழில்நுட்ப வசதிகளிலும் புதிய மாடல் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதில் 7 இன்ச் டிஎஃப்டி தொடுதிரை வழங்கப்பட்டுள்ளது. ஈகோ, ரெயின், ரோடு, ஸ்போர்ட், டிராக் என 5 ரைடிங் மோடுகளுடன், கூடுதலாக இரண்டு கஸ்டமைஸ் மோடுகளும் உள்ளன. கார்னரிங் ஏபிஎஸ், டிராக்ஷன் கண்ட்ரோல், வீலி கண்ட்ரோல், லான்ச் கண்ட்ரோல், எஞ்சின் பிரேக்கிங் கண்ட்ரோல் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன.
எப்போது வரும்?
புதிய டிரையம்ப் ஸ்ட்ரீட் டிரிபிள் 798 ஆர்எஸ் பைக்கின் விலை ரூ.14.39 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இது முந்தைய 765 ஆர்எஸ் மாடலைவிட ரூ.1.20 லட்சம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் விலைப் பிரிவில் டுகாட்டி மான்ஸ்டர் வி2 மற்றும் கவாஸாகி இசட்1100 ஆகியவை மாற்றுத் தேர்வுகளாக உள்ளன.
இந்த பைக்கானது டிரையம்ப் இந்திய இணையதளத்தில் பட்டியலிடப்பட்டிருந்தாலும், உலகளாவிய அளவில் டீலர்ஷிப்புகளுக்கு அடுத்த ஆணஅடு பிப்ரவரி மாதத்தில்தான் விற்பனைக்கு செல்லும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே இந்தியாவில் விற்பனைக்கு வருவதற்கு இன்னும் சில மாத காலம் ஆகலாம்.


Click it and Unblock the Notifications


