158 எச்பி பவர், ரேடார் வசதி.. புதிய டிரையம்ப் டைகர் 1200 பைக் இந்தியாவுக்கு எப்போது வருகிறது?
பிரீமியம் அட்வென்ச்சர் டூரர் பைக் பிரிவில் தனது ஆதிக்கத்தைத் தொடரும் நோக்கில், டிரையம்ப் நிறுவனம் 2027ம் ஆண்டுக்கான டைகர் 1200 மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. அதிக பவர், மேம்படுத்தப்பட்ட சஸ்பென்ஷன், நவீன பாதுகாப்புத் தொழில்நுட்பங்கள் எனப் பல மாற்றங்களுடன் வரும் இந்த பைக், இந்தியாவில் வரும் ஆண்டு மார்ச் மாதம் விற்பனைக்கு அறிமுகமாக உள்ளது.
நீண்ட தூரப் பயணங்களுக்கும் சாகசப் பயணங்களுக்கும் ஏற்ற பைக்குகளைத் தேடுபவர்களைக் குறிவைத்து இந்த மாடல் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சக்திவாய்ந்த எஞ்சின் கொண்ட பைக்குகளை ஓட்டுவதில் வசதியையும், பாதுகாப்பையும் எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு, புதிய டைகர் 1200 பல முக்கிய சிறப்பம்சங்களை வழங்கும்.

எஞ்சின் விபரம்
புதிய டிரையம்ப் டைகர் 1200 பைக்கில் மூன்று சிலிண்டர்கள் கொண்ட 1,160 சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் இடம்பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 158 எச்பி பவரையும் 130 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. முந்தைய மாடலைவிட பவர் 8 எச்பி அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது. எஞ்சின் செயல்திறனை மேம்படுத்த சில முக்கிய பாகங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் ஷாப்ட் டிரைவ் அமைப்பும் இதில் தொடர்கின்றன. நெடுஞ்சாலைகளில் நீண்ட நேரம் பயணிப்பதுடன், மலைப்பாதைகளிலும் சீரான செயல்திறனை எதிர்பார்க்கும் ரைடர்களுக்கு இந்த அமைப்பு பயனுள்ளதாக இருக்கும்.
அட்ஜெஸ்ட்டபிள் இருக்கை
பெரிய அட்வென்ச்சர் பைக்குகளைத் தேர்ந்தெடுப்பவர்களுக்கு இருக்கை உயரம் முக்கியமான விஷயமாக உள்ளது. இதற்குத் தீர்வாக, புதிய டைகர் 1200 பைக்கில் இருக்கை உயரத்தை தேவைக்கு ஏற்ப குறைக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. பைக் நிற்கும்போது சஸ்பென்ஷன் அமைப்பு இருக்கையின் உயரத்தை 30 மிமீ வரை குறைக்க உதவுகிறது.
கூடுதல் விருப்பத் தேர்வாக கிடைக்கும் லோ சீட் என்ற விசேஷ இருக்கையை பயன்படுத்தும்போது, இருக்கை உயரம் 790 மிமீ வரை குறையும். இதனால் குறைந்த உயரமுள்ள ரைடர்களும் பைக்கை நிறுத்தும்போதும் மீண்டும் கிளம்பும்போதும் எளிதாகக் கையாள முடியும். சஸ்பென்ஷன் அமைப்பும் சாலை நிலைமைகளுக்கு ஏற்ப செயல்படும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

ரேடார் தொழில்நுட்பம்
புதிய மாடலில் முன்புறம் மற்றும் பின்புறத்தில் வழங்கப்பட்டுள்ள ரேடார் தொழில்நுட்பம் முக்கிய அம்சமாக கூறலாம். இதன் மூலம் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், பிளைண்ட் ஸ்பாட் எச்சரிக்கை மற்றும் மோதல் அபாயம் தொடர்பான எச்சரிக்கை வசதிகள் கிடைக்கின்றன. நீண்ட தூரப் பயணங்களில் ரைடரின் கவனத்தையும் பாதுகாப்பையும் மேம்படுத்த இவை உதவும்.
இதுதவிர, 7 அங்குல டிஎஃப்டி தொடுதிரை, ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, யுஎஸ்பி-சி சார்ஜிங் வசதி ஆகியவை இடம்பெறுகின்றன. ஹீட்டட் கிரிப்ஸ் மற்றும் சூடாக்கும் இருக்கைகள் போன்ற வசதிகளும் பயணத்தைச் சவுகரியமாக்குகின்றன. இருப்பினும், இந்திய மாடலில் எந்தெந்த வசதிகள் வழங்கப்படும் என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
இந்தியாவில் விலை எவ்வளவு?
சர்வதேசச் சந்தையில் டைகர் 1200 ஜிடி புரோ, ஜிடி எக்ஸ்புளோரர், ராலி புரோ மற்றும் ராலி எக்ஸ்புளோரர் என நான்கு வேரியண்ட்டுகள் உள்ளன. இந்தியாவில் ஜிடி புரோ மற்றும் ராலி எக்ஸ்புளோரர் வேரியண்ட்டுகள் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றில் முறையே 20 லிட்டர் மற்றும் 30 லிட்டர் எரிபொருள் டேங்க் வழங்கப்படுகிறது.
இந்தியாவுக்கான அதிகாரப்பூர்வ விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. கூடுதல் தொழில்நுட்பங்கள் மற்றும் செயல்திறன் அம்சங்களை கருத்தில் கொள்ளும்போது, புதிய மாடலின் விலை சற்று கூடுதலாக இருக்கும். விலை அறிவிப்பு வெளியான பிறகே, இந்த பைக் இந்தியப் பிரீமியம் அட்வென்ச்சர் டூரர் சந்தையில் எந்தளவுக்குப் போட்டியை ஏற்படுத்தும் என்பதைத் கணிக்க முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து
புதிய டைகர் 1200 பைக்கில் பவர் அதிகரிக்கப்பட்டுள்ளது மட்டுமின்றி, நடைமுறைப் பயன்பாட்டை மேம்படுத்தும் வசதிகளும் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, இருக்கை உயரத்தைக் குறைக்கும் தொழில்நுட்பமும், ரேடார் அடிப்படையிலான பாதுகாப்பு வசதிகளும் கவனிக்கத்தக்கதாக உள்ளன. இந்திய விலை மற்றும் வேரியண்ட் விபரங்கள்தான் இதன் வரவேற்பைத் தீர்மானிக்கும் முக்கிய அம்சங்களாக இருக்கும்.


Click it and Unblock the Notifications


