சிட்டிக்குள் பயன்படுத்த இந்த இரண்டில் எந்த பைக்கை வாங்குவது? 2.50 லட்ச ரூபாய் செலவு செய்தால் போதும்!
பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) நிறுவனம் மத்திய அரசாங்கத்தின் ஜிஎஸ்டி (GST)-ஐ உபயோகப்படுத்திக் கொள்ளும் முயற்சியாக அதன் கீழ் விற்பனை செய்யப்படும் 400சிசி பைக்குகளை 350சிசி என்ஜினுக்கு மாற்றி உள்ளது. அதன்படி, பஜாஜ் பிராண்டில் விற்பனை செய்யப்படும் டோமினார் 400 (Dominar 400) பைக் மட்டுமின்றி, டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் (Triumph Motorcycles) நிறுவனத்தின் 400சிசி பைக்குகளும் புதியதாக 350சிசி என்ஜினுக்கு மாற்றப்பட்டுள்ளன.
ஒரே பஜாஜ் நிறுவனத்தின் கீழ் இவை உற்பத்தி செய்யப்பட்டாலும், விற்பனையில் ஒன்றுக்கொன்று போட்டியாக விளங்குகின்றன. குறிப்பாக, பேனல்கள் அதிக இல்லாத நேக்டு ஸ்ட்ரீட்ஃபைட்டர் (Naked Streetfighter) பைக்காக உருவாக்கப்படும் டோமினார் 400 மற்றும் டிரையம்ப் நிறுவனத்தின் ஸ்பீடு 400 (Speed 400) பைக்குகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது. இந்த இரண்டில் உங்களது தேவைக்கேற்ப எதை வாங்கலாம் என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

பயண சவுகரியம்: டோமினார் 400 ஆனது எடைமிக்க மோட்டார்சைக்கிளாக உருவாக்கப்படுகிறது. ஆதலால், எவ்வளவு காற்று அடித்தாலும் சாயாத வகையில் இதன் கட்டமைப்பு உள்ளதால், திறந்தவெளி நெடுஞ்சாலை பயணங்களுக்கு இது ஏற்றதாக இருக்கும். அதுவே, டிரையம்ப் ஸ்பீடு 400 ஆனது எடை குறைவானதாகவும், அட்ஜெஸ் செய்யக்கூடிய பின்பக்க சஸ்பென்ஷனை கொண்டதாகவும் உள்ளதால் வளைந்து வளைந்து செல்ல வேண்டிய நகர்புற பயன்பாடுகளுக்கு ஏற்றதாக இருக்கும்.
சேசிஸ் & மெக்கானிக்கல் பாகங்கள்: புதிய என்ஜின்களுக்கு மாற்றப்பட்டு இருப்பினும், இந்த இரு பைக்குகளிலும் ஹார்ட்வேர் பாகங்களில் பெரியதாக எந்த மாற்றமும் இல்லை. இதன்படி, புதிய டோமினார் 400 பைக் வழக்கம்போல் பீம்-டைப் பெரிமீட்டர் ஃப்ரேமில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், சஸ்பென்ஷனுக்கு 43மிமீ-இல் யுஎஸ்டி ஃபோர்க்குகள் முன்பக்கத்திலும், நிட்ராக்ஸ் மோனோ-ஷாக் பின்பக்கத்திலும் வழக்கம்போல் தொடரப்பட்டுள்ளன.

இவை, டோமினார் 400 பைக்கை நெடுஞ்சாலை பயணங்களுக்கு ஏற்ற பைக்காக விளங்க வைக்கின்றன. மறுப்பக்கம் ஸ்பீடு 400 பைக்கிலும் அதன் வழக்கமான ஹார்ட்வேர் பாகங்களே புதிய 350சிசி என்ஜின் உடன் தொடரப்பட்டுள்ளன. டோமினார் 400 பைக்கை போல் இல்லாமல், பெரிமீட்டர் இரும்பு குழாய் ஃபிரேம் உடன் டிரெல்லிஸ் ஃபிரேம்களில் ஸ்பீடு 400 உருவாக்கப்படுகிறது.
சஸ்பென்ஷனுக்கு 43மிமீ-இல் தலைக்கீழான பெரிய பிஸ்டன் ஃபோர்க்குகள் மற்றும் பின்பக்கத்தில் ப்ரீலோடு அட்ஜெஸ்மெண்ட் உடன் மோனோஷாக் உள்ளிட்டவை ஸ்பீடு 400 பைக்கில் வழங்கப்படுகிறது. டோமினார் 400 பைக் 193 கிலோவில் எடைமிக்கதாக நெடுஞ்சாலை பயணங்களுக்கு ஏற்றதாக விளங்கும் நிலையில், ஸ்பீடு 400 பைக் தரையில் இருந்து 164மிமீ உயரத்தில் அடிப்பகுதியை கொண்டிருப்பதன் மூலம் பள்ளம், மேடான சாலைகளுக்கும் ஏற்றதாக விளங்குகிறது.
என்ஜின்: டோமினார் 400 மற்றும் ஸ்பீடு 400 என இரு பைக்குகளிலும் புதிய 350சிசி என்ஜின் வழங்கப்பட்டுள்ளது என்றாலும், அவற்றில் இருந்து வெளிவரும் ஆற்றல் அளவுகள் வேறுப்படுகின்றன. டோமினார் 400 பைக்கில் வழங்கப்பட்டுள்ள 349சிசி சிங்கிள்-சிலிண்டர், லிக்யுடு-கூல்டு என்ஜின் அதிகப்பட்சமாக 40.6 பிஎச்பி மற்றும் 33.2 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியதாக உள்ளது. அதுவே, டிரையம்ப் ஸ்பீடு 400 பைக்கின் புதிய 350சிசி என்ஜின் அதிகப்பட்சமாக 37 பிஎச்பி மற்றும் 32 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வழங்கக்கூடியதாக உள்ளது.
விலை: விலையை பொறுத்தவரையில், டோமினார் 400 பைக் அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்கக் கூடியதாக உள்ளது. ஏனெனில், இந்த பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-Showroom Prices) ரூ.2.03 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன. அதுவே, ஸ்பீடு 400 பைக்கின் விலைகள் சற்று அதிகமாக ரூ.2.31 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த தொகுப்பின்படி, நீங்கள் அடிக்கடி நெடுஞ்சாலை பயணங்களை மேற்கொள்வீர்கள் என்றால் டோமினார் 400 ஏற்றதாக இருக்கும்; அதுவே, பெரும்பாலும் நகரத்திற்குள் போக்குவரத்து நெரிசல்களுக்கு மத்தியில் அன்றாட பயணங்களுக்கு பைக்கை தேடுகிறீர்கள் என்றால் டிரையம்ப் ஸ்பீடு 400 ஏற்றதாக இருக்கும். அதேநேரம், நெடுஞ்சாலை பயணங்களுக்கும் ஸ்பீடு 400 ஏற்றது அல்ல என கூற முடியாது என்பதால், அனைத்து விதமான பயணங்களுக்கும் சேர்த்து முன்னெச்சரிக்கையாக டிரையம்ப் ஸ்பீடு 400 பைக்கை வாங்குவது சிறந்ததாக இருக்கும் என்பது எங்களது கருத்து.


Click it and Unblock the Notifications







