லாங் டிராவல் அடிக்கடி மேற்கொள்ள ஏற்ற 6 பைக்குகள்! சவுகரியமான பயணத்திற்கு எந்தவொரு குறையும் இருக்காது!
பைக்கில் அவ்வப்போது தொலைத்தூர பயணங்களை மேற்கொள்ளும் வழக்கம் நம்மில் பலரிடம் உள்ளது. ஆனால், தொலைத்தூர பயணங்களுக்கு எந்த மோட்டார்சைக்கிள்கள் ஏற்றவையாக இருக்கும் என்பது சிலருக்கு தெரியவில்லை. அனைத்து பைக்குகளிலும் தொலைத்தூர பயணங்களை மேற்கொள்ளலாம் என நினைக்கின்றனர். ஆனால் உண்மையில், குறைந்த சிசி என்ஜின் கொண்ட பைக்குகள் தொலைத்தூர பயணங்களுக்கு ஏற்றவை அல்ல.
அதிக பயன்பாட்டால் அவை பயணத்திற்கு இடையில் பழுதாகுவதற்கும் வாய்ப்புள்ளது. தொலைத்தூர பயணங்களை மேற்கொள்ள குறைந்தது 250சிசி என்ஜின் பைக்காவது அவசியமானது என்பது எங்களது கருத்து. அவ்வாறான, லாங் ரைடுக்கு ஏற்ற பைக்குகளை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 (Royal Enfield Himalayan 450): குறைந்த விலையில் ஓர் முழுமையான பக்கா அட்வென்ச்சர் பைக்கை எதிர்பார்ப்பவர்களுக்கு ஹிமாலயன் 450 ஏற்றதாக இருக்கும். அந்த அளவிற்கு, இந்த பைக்கில் முன்பக்கத்தில் 21 இன்ச்சில் சக்கரம், 230மிமீ-இல் கிரவுண்ட் க்ளியரென்ஸ் மற்றும் 200மிமீ-இல் சஸ்பென்ஷன் டிராவல் உள்ளிட்டவை வழங்கப்படும் நிலையில், இந்த பைக்கில் 452சிசி லிக்யுடு-கூல்டு ஷெர்பா என்ஜின் பொருத்தப்படுகிறது.
கேடிஎம் 390 அட்வென்ச்சர் (KTM 390 Adventure): ஆக்ரோஷமான ரைடிங் மற்றும் மிகுந்த தொழிற்நுட்ப அம்சங்களை எதிர்பார்ப்பவர்களுக்கு கேடிஎம் 390 அட்வென்ச்சர் ஏற்ற ஒன்றாகும். அட்ஜெஸ் செய்யக்கூடிய சஸ்பென்ஷன், முன்பக்கத்தில் அளவில் பெரியதான சக்கரம், கார்னரிங் ஏபிஎஸ், டிராக்ஷன் கண்ட்ரோல் உள்ளிட்டவற்றை வழங்கும் இந்த கேடிஎம் அட்வென்ச்சர் பைக்கில் 349சிசி என்ஜின் பொருத்தப்படுகிறது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்.டி.எக்ஸ் (TVS Apache RTX): கொடுக்கும் பணத்திற்கு ஏற்ற மதிப்பு மற்றும் பல்வேறு விதமான பயன்பாடுகளுக்கு ஏற்ற பைக்கை எதிர்பார்ப்பவர்களுக்கு அப்பாச்சி ஆர்டிஎக்ஸ் ஏற்றதாக இருக்கும். அப்பாச்சி பைக்குகள் வரிசையில் அட்வென்ச்சர் பைக்கான இதில் 299சிசி சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் டிராக்ஷன் கண்ட்ரோல் உள்ளிட்டவையும் இந்த பைக்கில் வழங்கப்படுகின்றன.
டிரையம்ப் ஸ்க்ராம்ப்ளர் 400எக்ஸ் (Triumph Scrambler 400X): இவ்வளவு நேரம் இந்த தொகுப்பில் நாம் பார்த்தது எல்லாமே அட்வென்ச்சர் ரக பைக்குகளாகும். ஆனால், இது ஸ்க்ராம்ப்ளர் ரக பைக் ஆகும். உண்மையை சொல்ல வேண்டுமென்றால், அட்வென்ச்சர் ரக பைக்குகளை காட்டிலும் ஸ்க்ராம்ப்ளர் ரக பைக்குகள் தொலைத்தூர நெடுஞ்சாலை பயணங்களின் போது மிகவும் சவுகரியமான பயணத்தை வழங்கக் கூடியவை ஆகும்.
பி.எம்.டபிள்யூ எஃப் 450 ஜிஎஸ் (BMW F 450 GS): இந்திய மார்க்கெட்டில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய பிஎம்டபிள்யூ அட்வென்ச்சர் பைக் இதுவாகும். டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் உதவியுடன் உருவாக்கப்படும் இந்த பைக்கின் விலை சற்று அதிகமாக உள்ளது. ஏனெனில், அந்த அளவிற்கு இந்த பைக்கில் பல்வேறு ரைடு மோட்கள், மிகவும் உணர்வு திறன்மிக்க ஏபிஎஸ் புரோ உள்ளிட்ட அட்வான்ஸ்டு வசதிகள் வழங்கப்படுகின்றன. மேலும், இந்த பைக்கில் 420சிசி-இல் 2-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது.
சுஸுகி வி-ஸ்ட்ரோம் எஸ்.எக்ஸ் (Suzuki V-Strom SX): இது சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் அட்வென்ச்சர் பைக் ஆகும். 249சிசி ஆயில்-கூல்டு என்ஜின் உடன் இந்த லிஸ்ட்டில் விலை குறைவான அட்வென்ச்சர் பைக்காக விளங்குகிறது. தரையில் இருந்து 205மிமீ உயரத்தில் அடிப்பகுதியை கொண்டிருக்கும் இந்த பைக்கில் பயணத்தின்போது பெரியதாக அதிர்வுகள் எதுவும் ஏற்படுவதில்லை என இந்த பைக்கை பயன்படுத்துபவர்கள் தெரிவிக்கின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தொலைத்தூர நெடுஞ்சாலை பயணத்திற்கு ஏற்ற பைக்குகளில் பெரும்பாலானவை அட்வென்ச்சர் பைக்குகளாக நாங்கள் தெரிவித்து இருப்பதற்கு காரணம், அட்வென்ச்சர் பைக்குகள் எந்தவொரு பாதையிலும் இயங்கக்கூடியவை ஆகும். பெரும்பாலும் தொலைத்தூர பயணங்களின் போது எந்த பாதைகளில் இயங்க வேண்டியிருக்கும் என்பது நமக்கே தெரியாது என்பதால், அட்வென்ச்சர் பைக்குகள் இத்தகைய பயணங்களுக்கு ஏற்றவையாக இருக்கும் என்பது எங்களது கருத்து.


Click it and Unblock the Notifications