அக்சஸ் ஸ்கூட்டரால் அடித்த ஜாக்பாட்.. எல்லாரும் வாங்கிக் குவிக்குறாங்க
இந்தியாவில் அதிக இருசக்கர வாகனங்களை விற்பனை செய்யும் நிறுவனங்களில் ஒன்றாக ஜப்பானைச் சேர்ந்த சுஸூகி மோட்டார்சைக்கிள் (Suzuki Motorcycle) நிறுவனமும் இருந்து வருகிறது. ஹீரோ, ஹோண்டா, டிவிஎஸ் மற்றும் பஜாஜுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் அதிக இருசக்கர வாகனங்களை விற்பனை செய்வது சுஸூகி தான். ஆனால் அதற்கு முக்கியக் காரணமாக இருப்பது ஒரே ஒரு வாகனம் தான்.
அது வேறெதுவும் இல்லை, அக்சஸ் 125 (Access 125) ஸ்கூட்டர் தான். கடந்த மே மாதம் இந்தியாவில் 1.10 லட்சம் இருசக்கர வாகனங்களை இந்தியாவில் விற்பனை செய்துள்ளது. அதில் 75,000 முதல் 80,000 யூனிட்டுகள் அக்சஸ் ஸ்கூட்டராகவே இருக்கும். இந்தளவிலான விற்பனையுடன் இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்படும் ஸ்கூட்டர்கள் வரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ளது அக்சஸ்.

அக்சஸ் ஸ்கூட்டரே சுஸூகியை இந்தியாவில் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமாக வைத்திருக்கிறது. இப்போது விற்பனைக்கு வருவோம், கடந்தாண்டு மே மாதத்துடன் ஒப்பிடும் போது கடந்த மே மாதம் 2 சதவீதம் விற்பனை உயர்வைச் சந்தித்திருக்கிறது சுஸூகி. கடந்தாண்டு மே மாதம் 1.07 லட்சம் இருசக்கர வாகனங்களை இந்தியாவில் அந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது.
இது இந்திய விற்பனை அளவு மட்டுமே. ஏற்றுமதிகளையும் சேர்த்தால் கடந்த மே மாதம் 1.32 லட்சம் இருசக்கர வாகனங்களை அந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இத கடந்தாண்டு மே மாதத்தை விட 3 சதவீதம் அதிகமாகும். வெளிநாட்டு ஏற்றுமதியை மட்டும் எடுத்துக் கொண்டால் கடந்தாண்டு மே மாதத்துடன் ஒப்பிடும் போது கடந்த மே மாதம் 5 சதவீதம் உயர்ந்திருக்கிறது.

கடந்தாண்டு மே மாதம் இந்தியாவில் இருந்து 21,117 இருசக்கர வாகனங்களை அந்நிறுவனம் ஏற்றுமதி செய்துள்ளது. இதுவே கடந்த மே மாதம் அது 22,216 யூனிட்டுகளாக உயர்ந்திருக்கிறது. இத்துடன் தங்களது இருசக்கர வாகனங்களுக்கான உதிரி பாகங்களின் விற்பனையுடன் இந்தாண்டு 14 சதவீதம் வரை உயர்ந்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது சுஸூகி.
இந்தியாவில் அக்சஸைக் கடந்து பர்க்மன் (Burgman) மற்றும் அவெனிஸ் (Avenis) ஆகிய ஸ்கூட்டர்களையும் ஹோண்டா விற்பனை செய்து வருகிறது. அனைத்துமே 125 சிசி ஸ்கூட்டர்கள் தான். 110 சிசி பிரிவில் சுஸூகி எந்த ஸ்கூட்டரையும் இந்தியாவில் விற்பனை செய்யவில்லை. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பிரிவில் e-அக்சஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை சமீபத்தில் தான் விற்பனைக்குக் கொண்டு வந்தது அந்நிறுவனம்.
ஸ்கூட்டர் அதிகமாக விற்பனையாகின்றன என்றாலும், சுஸூகியின் பைக்குகளை நாம் மறந்துவிட முடியாது. இந்தியாவில் குறிப்பிடத்தக்க பேர் சொல்லும் வகையிலான பைக்குகளை அந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. மாஸ் மார்க்கெட் பிரிவில் V ஸ்டார்ம் SX, ஜிக்ஸர் SF 250, ஜிக்ஸர் 250, ஜிக்ஸர் SF மற்றும் ஜிக்ஸர் ஆகிய பைக் மாடல்களை சுஸூகி விற்பனை செய்து வருகிறது.
இவையனைத்தும் 150 சிசி மற்றும் 250 சிசி பைக்குகள் தான். அதற்குக் கீழான இன்ஜின் கொண்ட பைக்குகள் சுஸூகியிடம் இல்லை. இதனைத் தவிர்த்து சொகுசு பைக்குகள் பிரிவில், GSX-8R, V ஸ்டார்ம் 800DE மற்றும் ஹயபூஸா ஆகிய பைக்குகளை சுஸூகி இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. சொகுசு பைக்குகளிலேயே சுஸூகியின் ஹயபூஸா இந்தியாவில் ரொம்பவே பிரபலம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அக்சஸ் ஸ்கூட்டரை விரும்பாதவர்களே கிடையாது. டிசைனைப் பொறுத்தவரை ஆக்டிவாவுக்கு அடுத்தபடியாக அனைவரையும் கவரக்கூடிய ஒன்று என்றால் அது அக்சஸின் டிசைன் தான். அதன் தனித்துவமான நிறங்களும் அவற்றை வாடிக்கையாளர்கள் விரும்புவதற்கான முக்கியக் காரணங்களாக இருக்கின்றன. இந்தியாவின் சுஸூகி என்ற இருசக்கர வாகன பிராண்டையே அக்சஸ் தூக்கிப் பிடித்து வருகிறது என்று சொன்னால் அது மிகையாகாது.


Click it and Unblock the Notifications