ரொம்ப கம்மி விலையில் எல்லாரும் வாங்கக்கூடிய விலை கொண்ட நியோ ரெட்ரோ பைக் மாடல்கள் இவை தான்
இந்திய பைக் வாடிக்கையாளர்களிடையே, அதுவும் இளம் வாடிக்கையாளர்களிடையே நியோ ரெட்ரோ வகை பைக் மாடல்களுக்கு நிறைய மவுசு இருக்கிறது. இதனால் கடந்த ஆண்டுகளில் கிட்டத்தட்ட அனைத்து முன்னணி பைக் தயாரிப்பு நிறுவனங்களும் நியோ ரெட்ரோல் டிசைன் கொண்ட பைக்குகளை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றன. இன்றைய நிலையில் இந்தியாவில் விற்பனையில் இருக்கும் குறைவான விலை கொண்ட நியோ ரெட்ரோல் வகை பைக் மாடல்கள் எவை என்பதை இங்கே நாம் பார்க்கலாம்.
பஜாஜ் அவெஞ்சர் 160 ஸ்ட்ரீட்/ 220 க்ரூஸ்
இன்றைய நிலையில் மிகவும் குறைவான விலையில் நியோ ரெட்ரோல் பைக் மாடல் வாங்க வேண்டும் என்றால் அதற்கு பஜாஜின் அவெஞ்சர் தான் ஒரே சாய்ஸ். இந்த பைக்கை 160 ஸ்ட்ரீட் என 220 க்ரூஸ் என இரண்டு மாடல்களாக விற்பனை செய்து வருகிறது பஜாஜ். மிக மிகக் குறைவாக 737 மிமீ என்ற சீட் உயரத்தில் மிகவும் ஹாயான ரைடிங் ஸ்டான்சைக் கொண்டது அவெஞ்சர்.

அவெஞ்சர் 160 ஸ்ட்ரீட் பைக் மாடலில் 160 சிசி இன்ஜினும், 220 க்ரூஸ் பைக் மாடலில் 220 சிசி இன்ஜினும் பயன்படுத்தப்பட்டுள்ளது. 160 ஸ்ட்ரீட் மாடலானது ரூ.1.12 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலும், 220 க்ரூஸ் மாடலானது சற்று கூடுதலாக ரூ.1.26 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கவாஸாகி W175
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட விற்பனை செய்யப்படுவது மட்டுமின்றி, இந்தியாவிலிருந்து மற்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும் ஒரு கவாஸாகி பைக் W175. மிகவும் கிளாஸியான, 1950களின் பைக்குகளை எதிரொலிக்கும் வகையிலான டிசைன் கொண்ட ஒரு முழுமையான நியோ ரெட்ரோ வகை பைக் இந்த W175. 177 சிசி இன்ஜின் கொண்ட இந்த பைக்கை ரூ.1.21 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது கவாஸாகி.

டிவிஎஸ் ரோனின்
நியோ ரெட்ரோ பைக் உருவாக்கத்தில் டிவிஎஸ்ஸின் சிறிய முயற்சி ரோனின். 226 சிசி இன்ஜினுடன், பார்த்தவுடன் அனைவருக்கும் பிடிக்கும் படியான டிசைன் கொண்ட ஒரு பைக்காக இதனைக் கூறலாம். இதன் டிசனை வேறு எந்த பைக்குடன் ஒப்பிட முடியாது. அந்த வகையில் புதுமையான மற்றும் தனித்துவமான டிசைனைக் கொண்டது. இந்த பைக்கை ரூ.1.27 லட்சம் முதல் ரூ.1.60 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது டிவிஎஸ்.
யமஹா XSR155
நியோ-ரெட்ரோ பிரிவில் புதிய வரவு யமஹாவின் XSR155. இதுவரை வெளிநாடுகளில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்த இந்த பைக் மாடலை முதல் முறையாக இந்தியாவிற்குக் கொண்டு வந்திருக்கிறது யமஹா. ரெட்ரோ டிசைன் மற்றும் மாடர்ன் அம்சங்கள் கலந்த கலவை இந்த XSR155. 150 சிசி பிரிவில் பவர்ஃபுல்லான மற்றும் சிறப்பான பெர்ஃபாமன்ஸுடன் கூடிய இன்ஜினைப் பெற்றிருக்கும் இந்த பைக் ரூ.1.50 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ராயல் என்ஃபீல்டு 350 சிசி பைக்குகள்
ராயல் என்ஃபீல்டின் அனைத்து 350 சிசி பைக்குகளுமே நியோ ரெட்ரோ வகையைச் சேர்ந்தவை தான். அனைத்து பைக்குகளிலும் ஒரே இன்ஜின் மற்றும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான தொழில்நுட்ப அம்சங்களே கொடுக்கப்பட்டுள்ளன. டிசைனில் மட்டுமே வேறுபாடுகள் இருக்கும். இதில் விலை குறைவான பைக் என்றால் ஹண்டர் 350-யையும், விலை உயர்ந்த பைக் என்றால் மீட்டியார் 350-யையும் சொல்லலாம்.
ராயல் என்ஃபீல்டின் ஒவ்வொரு 350 சிசி பைக்கும் ஒவ்வொரு வகையில் கிளாஸியான ஃபீலைக் கொடுப்பவை. குறைவான விலையில் வேண்டும் என்றால் ரூ.1.38 லட்சம் என்ற தொடக்க விலையில் ஹண்டர் 350 பைக்கையும், சொகுசான க்ரூஸர் வகையில் வேண்டும் என்றால் ரூ.1.96 லட்சம் என்ற தொடக்க எக்ஸ்-ஷோரூம் விலையில் மீட்டியார் 350 பைக்கையும் இந்தியாவில் நாம் வாங்கலாம்.
ஜாவா 42/ 42 FJ
கிளாஸிக் லெஸெண்ட்ஸிடம் இருக்கும் ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் பிராண்டின் கீழ் 42 மற்றும் 42 FJ பைக்குகள் முன்னாள் விற்பனை செய்யப்பட்ட ஜாவா பைக்குகளின் ஜெராக்ஸ் காப்பியாக தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஒரிஜினல் கிளாஸியான பைக்குகள் என்றால் ராயல் என்ஃபீல்டுக்கு அடுத்தபடியாக ஜாவா தான் தற்போதைக்கு விற்பனையில் இருக்கிறது. இதில் 42 மாடலை ரூ.1.84 லட்சம் என்ற விலையிலும், 42 FJ மாடலை ரூ.1.94 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலும் வாடிக்கையாளர்கள் வாங்கலாம்.
ட்ரையம்ப் ஸ்பீடு T4
ட்ரையம்ப் நிறுவனத்தின் தொடக்கநிலை பைக் மாடல் ஸ்பீடு T4. கிளாஸியான ஓல்டு ஸ்கூல் டிசைன் மட்டுமின்றி, பெர்ஃபாமன்ஸிலும் பட்டையைக் கிளப்பும் ஒரு பைக் மாடலாக இந்த ஸ்பீடு T4 இருந்து வருகிறது. ஸ்பீடு 400 அளவிற்கு முழுமையான பெர்ஃபாமன்ஸ் இல்லையென்றாலும், சிறப்பான பெர்ஃபாமன்ஸையே இந்த T4 கொண்டிருக்கிறது. ரூ.1.95 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்த பைக் மாடல் விற்பனை செய்யப்படுகிறது.
யெஸ்டி ரோட்ஸ்டர்
ஜாவா பைக்குகளை விற்பனை செய்து வரும் கிளாஸிக் லெஜெண்ட்ஸ் நிறுவனமே இந்தியாவில் யெஸ்டி பைக்குகளையும் விற்பனை செய்து வருகிறது. யெஸ்டி ரோட்ஸ்டர் தான் அதன் லைன்-அப்பில் நியோ ரெட்ரோ டிசைனைக் கொண்டிருக்கும் ஒரே பைக் மாடலாக இருக்கிறது. சமீபத்தில் தான் இந்த பைக்கை அப்டேட் செய்து டிசைனை அந்நிறுவனம் கொஞ்சம் மேம்படுத்தியது. இந்த பைக் மாடலை ரூ.1.96 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் நாம் வாங்கலாம்.
ஹோண்டா CB350 DLX
நியோ ரெட்ரோ பைக் மாடல்களைப் பற்றிப் பேசும் போது ஹோண்டாவின் கிளாஸியான CB350-யைப் பற்றிப் பேசாமல் எப்படி. டிசைனிலும் சரி, பெர்ஃபாமன்ஸிலும் சரி, ராயல் என்ஃபீல்டுக்கு இணையாக நிற்கக்கூடிய ஒரே பைக் மாடல் ஹோண்டா CB350 சீரிஸ் தான். டிசைன் முதல் நிறங்கள் வரை நியோ ரெட்ரோல் ஃபீலை முழுமையாகத் தரக்கூடிய பைக்குகளில் ஒன்று ஹோண்டாவின் CB350 DLX. இந்த பைக் மாடல் ரூ.1.97 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரூ.2 லட்சம் விலைக்குள் பல்வேறு நியோ ரெட்ரோ டிசைன் கொண்ட பைக் மாடல்கள் இந்தியாவில் விற்பனையில் இருக்கின்றன. இதில் பெர்ஃபாமன்ஸ், டிசைன் என அனைத்தும் சிறப்பாகக் கொண்ட ஒரு மாடலை தேர்வு செய்ய வேண்டும் என்றால் ஹோண்டாவின் CB350 தான் சிறந்த சாய்ஸ். நெடுஞ்சாலைகளில் 100 கிமீ வேக்திற்கு மேல் க்ரூஸ் செய்யும் போதும் மிக மிக ஸ்மூத்தாக இருக்கும் இதன் இன்ஜின்.
விலை முக்கியமான காரணிகளில் ஒன்று என்றால் பஜாஜின் 160 ஸ்ட்ரீட் அல்லது 220 க்ரூஸ் ஆகிய பைக்குகளை தேர்வு செய்யலாம். ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350யும் சிறப்பான தேர்வாகவே இருக்கும். ஆனால், அதன் தொடக்கநிலை வேரியன்டை தேர்வு செய்யவில்லை என்றால் பட்ஜெட்டிற்கு எகிறிவிடும். சிறிய இன்ஜின் தான் என்றாலும் யமஹாவின் XSR155 பெர்ஃபாமன்ஸ் மற்றும் பட்ஜெட் என இரண்டுக்கும் சேர்த்து சிறப்பான தேர்வாக இருக்கும்.
மற்ற 250 சிசி மற்றும் 350 சிசி நியோ ரெட்ரோ பைக்குகளுடன் ஒப்பிடும் போது XSR155 சற்று குறைவான பராமரிப்புச் செலவைக் கொண்டதாக இருக்கும். மேலும், சிறப்பான மைலேஜைக் கொடுக்கும் பைக்காகவும் அது இருப்பது கூடுதல் பிளஸ். மற்ற பைக் மாடல்களை உங்களுக்கு தனிப்பட்ட விருப்பம் இருந்தால் தேர்வு செய்யலாம்.


Click it and Unblock the Notifications








